சிறப்பு அம்பலம்
இணையத்தில் தமிழின் வளர்ச்சியைப் பெருக்கும் நோக்கோடு தொடங்கப்பட்டு இயங்கி வரும் இன்னுமொரு இணையதளம் அம்பலம்.காம் (www.ambalam.com). தமிழில் மின்அஞ்சல் சேவையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இந்த இணைய தளத்தையே சேரும். ''ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் தமிழிலேயே மின் அஞ்சல் மூலமாகப் பரிமாறிக் கொள்ளும்போது, நமக்கும் மொழிக்குமான உறவை, தாய்க்கும் குழந்தைக்குமான உறவாகப் பிணைக்க முடிகிறது'', என்ற கருத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தத் தமிழ்வழி மின் அஞ்சல் சேவை. மின் அஞ்சல் மட்டுமின்றி வாழ்த்து அட்டைகளைக் கூட, தமிழ் வாழ்த்துச் செய்திகளுடன் அனுப்பும் வசதியையும் இந்த இணையதளம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்த இணையதளத்தில் பொது அம்பலம், சிறப்பு அம்பலம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. சிறப்பு அம்பலத்தில் சுஜாதா பக்கம், இலக்கியக் கட்டுரைகள், திரைச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள் போன்ற பக்கங்கள் அடங்கியுள்ளன. பணம் செலுத்துபவர்கள் மட்டும்தான் இந்தப் பகுதிக்குள் நுழைந்து செய்திகளைப் படிக்கமுடியும். ஆனால், பொது அம்பலத்திலுள்ள பக்கங்களை யார்வேண்டுமானாலும் படித்துப் பயன் பெறலாம்.

பொருத்தமான தருணங்களில் அம்பலம் வழங்கும் பல்வேறு சிறப்பிதழ்கள் இந்த இணைய தளத்தின் முக்கியஅம்சம். (இப்படி வெளியாகும் சிறப்புக் கட்டுரைகளை அவ்வப்போது தொகுப்பாகவும் இந்தத் தளம் வெளியிட்டு வருகிறது.)

எழுத்தாளர் சுஜாதாவின் புத்தகங்களைப் படிப்பவர்களுக்கு நிச்சயம் அவரோடு பேச வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் வரும். அந்த ஏக்கத்தை நிறைவு செய்யும் வகையில் சுஜாதாவோடு அரட்டை அடிக்க இந்த இணையதளம் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த இணையதளத்தின் சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று. இது தவிர 'சுஜாதா பக்கம்' என்ற தனிப்பிரிவில், வாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் 'பதில்கள்', 'ஓரிரு எண்ணங்கள்' என்ற பெயரில் சுஜாதா பகிர்ந்து கொள்ளும் தகவல்கள், சுஜதாவின் ஆரம்பக் காலத்திலிருந்த சைன்ஸ் ·பிக்ஷன் கதைகள், தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் என்று சுஜாதா கருதும் கதைகள், புதுநானுறு என்ற பெயரில் அவருக்குப் பிடித்த நானூறு புதுக்கவிதைகள், கதைஎழுதுவது-திரைக்கதை எழுதுவது பற்றி சுஜாதா தரும் பயனுள்ள குறிப்புகள் போன்றவை அடங்கியிருக்கின்றன.

மேலும், இளைஞர்கள் விரும்பக்கூடிய, அவர்களுக்குத் தேவையான தகவல்களை ''இளையர் அம்பலம்'' என்ற பெயரில் கொடுத்திருக்கிறார்கள். கல்லூரி கலாட்டாக்கள், இளைஞர்களின் சந்தேகங்களுக்கான பதில்கள், அவர்களுக்கான கெளன்சிலிங், அறிவுரை, வழிகாட்டுதல், இளைஞர்களுக்குப் பயன்படக்கூடிய இணையதளங்கள், வேலைவாய்ப்பு வசதிகள் குறித்த தகவல்கள், இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் சந்தையில் அறிமுகமாகியிருக்கும் புதிய பொருட்கள் (cosmetics, books, cds,casettes, dress,etc.), தங்களுக்கு விருப்பமானவர்களுடன் இளைஞர்கள் அரட்டை அடித்துக்கொள்ளும் வசதி... என்று எக்கச்சக்கமான தகவல்கள் இந்தப் பகுதியை நிறைத்திருக்கின்றன. இந்தப் பகுதிக்கென்று ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. அது ''நாயகன்/நாயகியோடு'' பகுதி. தங்களின் ரோல்மாடலாக யாரையாவாது வைத்து அவர்களைப் பின்பற்றுபவர்களோ அல்லது யாராவது ஒரு வி.ஐ.பி-யின் பரம ரசிகராக இருப்பார்களோ தங்களுக்கு விருப்பமானவரோடு சேர்ந்து இருப்பதுபோல் புகைப்படம் எடுத்து வைக்க விரும்பினால் அதற்கு இந்த இணையதளம் உதவுகிறது. உதாரணமாக, இந்திய பிரதமர் வாஜ்பாயுடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்த விரும்பினாலோ, அல்லது சிங்கத்தின் முதுகில் ஏறி உட்கார விரும்பினாலோ தங்கள் விருப்பத்தையும் புகைப்படத்தையும் மட்டும் இந்த இணையதளத்திற்கு அனுப்பி வைத்தால் போதும். நீண்ட நாள் கனவு நனவாகிவிடும்.

இளைஞர்களை குஷிப்படுதுவதற்கென்று தனிப் பகுதியை வைத்திருப்பதுபோல், சிறுவர்களை மகிழ்விக்கவும் இந்தத் தளத்தில் தனிப்பகுதி இருக்கிறது (சிறுவர் அம்பலம்). இந்தப் பகுதியில் சின்னக் குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் சின்னச்சின்ன சாதனைகளைக் கூட வெளியிடுகிறார்கள். சின்னக் குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும் வகையில் தமிழ் மொழியினை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுப்பதற்கென்றே இந்தப் பகுதியில் ஒரு தனி இடத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். 'கதைகேட்டால்தான் சாப்பிடுவேன்; கதைகேட்டால்தான் தூங்குவேன்' என்று எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்காக இந்தத் தளத்தில் ஏராளமான படக்கதைகளும், நீதிக் கதைகளும் சொல்லப்பட்டுள்ளன. விடுகதை போடுவதிலும் அதற்கு விடைதேடிக் குழப்பமடைவதிலும் சின்னக் குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமே தனிதான். இந்த ஆர்வத்தைச் சரியான முறையில் ஊக்கப்படுத்தும் வகையில் சுவாரதியமான விடுகதைகள் எண்ணிக்கையில்லாமல் இந்தப் பகுதியில் கொட்டிக் கிடக்கின்றன. இளையர் பக்கத்திலிருக்கும் ''நாயகன்/நாயகியோடு'' பகுதியைப் போல இதில் ''கொண்டாட்டம்'' என்றொரு பிரிவு இருக்கிறது. இந்தப் பிரிவில் உங்கள் வீட்டில் கொண்டாடிய குழந்தைகள் விழா எதுவாக இருந்தாலும் அதில் எடுத்த புகைப்படங்களைத் தகவல்களோடு அனுப்பிவைத்தால் அவற்றை இந்தத் தளத்தில் வெளியிடுவார்கள். சிறுவர்களுக்கென்று தனியாக அவர்கள் விரும்பும் விஷயங்களைக் கொண்டு இப்படி ஒரு பகுதி இருப்பதால் சின்ன வயதிலேயே இணையதளத்தில் மேயும் ஆர்வமும் ஈடுபாடும் குழுந்தைகளுக்கு உண்டாகிறது.

பெரும்பாலான தமிழ் இணையதளங்களில் இருப்பதுபோல் சினிமா தொடர்பான சகல செய்திகளும் ''திரைஅம்பலம்'' என்ற பெயரில் இந்தத் தளத்திலும் அடங்கியுள்ளன. இந்த இணையதளத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம் ''அம்பலம் தமிழ்ப்புத்தக அங்காடி''. இந்தப் பகுதியில் சுஜாதா எழுதிய புத்தகங்கள் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் தமிழில் வெளியாகும் புத்தகங்கள், நூலாசிரியர்கள், பதிப்பகங்கள், புத்தக விலைப்பட்டியல் என்று புத்தகம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் தரப்பட்டுள்ளன. வெறும் தகவல்கள் மட்டுமின்றி நாம் வாங்க விரும்பும் புத்தகங்களை இந்தப் பக்கத்தின் மூலமாகவே வாங்கிவிடலாம். அதாவது நாம் விரும்பும் புத்தகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டால், உலகின் எந்த மூலையில் நாம் இருந்தாலும் அதை நமக்கு அனுப்பிவைத்து விடுவார்கள்.

இப்படிப் பல்வேறு பயனுள்ள தகவல்களையும் சேவைகளையும் செய்து, குறுகிய காலத்திலேயே ஏராளமான தனித்தனிப் பிரிவுகளைக் கொண்டு மிகப் பெரிய ஆலமரமாக அம்பலம் தழைத்து வளர்ந்து வருகிறது.

காந்திமதி

© TamilOnline.com