வெட்டிவேர்
சென்னையில் வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. கிராமங்களில் வெட்டிவேரிலிருந்து செய்யப்பட்ட தட்டிகளைத் தண்ணீரில் நனைத்து சன்னலில் தொங்கவிடுவார்கள். சூடான காற்று வீசும்போது தட்டிகள் அசைந்தாடி காற்றின் சூட்டைத் தணித்து ''குளு...குளு'' தென்றலாக மாற்றிவிடும். மேலும் அந்தத் தென்றலில் ஒருவித நறுமணம் கலந்திருக்கும். இந்த வெட்டி வேரிலிருந்து செய்யப்பட்ட கைவிசிறிகளும் ரொம்பப் பிரபலம்.

''வெட்டி'' என்றால் ''தோண்டுதல்''; ''வேர்'' என்றால் தரைக்கு அடியில் உள்ள செடியின் பகுதி. தரைக்கு வெளியில் உள்ளபகுதி அடர்ந்த புல்போல இருக்கும். இந்தத் தமிழ் வார்த்தை கிட்டத்தட்ட 1700ம் ஆண்டில் பிரான்ஸ¥க்கு Vetiver என்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆங்கிலேய அகராதிகள் Vetiver க்கு மூலாதாரம் தமிழ் என்று ஒருமுகமாகக் கூறுகின்றன.

பெரும்பாலான வாசனை திரவியங்கள் இந்த வெட்டிவேரு எண்ணெயைக் கச்சாப் பொருளாகக் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. தென்னிந்தியாவில் (கதம்ப) பூமாலை கட்ட அல்லது பெண்களின் கூந்தல் பின்ன வேரை அப்படியே உபயோகப்படுத்துகிறார்கள்.

நாடோடி விவசாயக் கூலிகள் ஊர்ஊராகச் செல்லும்போது அந்தந்த இடங்களில் முகாம் போட்டு, அதற்கு வெட்டி வேரைக் கொண்டுதான் கூரை போடுவார்கள். காரணம் இந்த வெட்டிவேரின் வாசனையினால் குடிசைக்குள் பூச்சிகள் எதுவும் வராது.

இப்போதும் பெரும்பாலான வீடுகளில் வெயில் காலங்களில் மண்பானையில் நீரை நிரப்பி அதில் சிறிது வெட்டிவேர்களைப் போட்டு வைக்கிறார்கள். இந்த வேரின் குளுமையும், மணமும் நீரில் இறங்கி, வெயில் காலத்திற்குப் பருக அருமையாக இருக்கும்.

இந்த வெட்டி வேருக்கு மணல் அரிப்பைத் தடுக்கும் சக்தியும் உண்டு. விவசாயிகள் தங்களது வயல்களின் எல்லையோரமாக நீளவாக்கில் இந்த வேரை நட்டு வைக்கிறார்கள். மணல் அரிப்பினால் ஏற்படும் பொருளாதாரச் சேதம் உலகையே அச்சுறுத்தும் வகையில் இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த வெட்டிவேரை மணல்அரிப்பைத் தடுக்கப் பயன்படுத்தலாமா என்று யோசிக்கலாமே!

அமெரிக்காவில் உள் நாட்டு யுத்தம் வருவதற்கு முன்பாகவே லூசியானா மாநில விவசாயிகள் வெட்டிவேரை இந்தியாவிலிருந்து வரவழைத்து, பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த வெட்டிவேரைப் பிரபலப்படுத்த 1996ல் தாய்லாந்து, சர்வதேச மாநாட்டைக் கூட்டியது. கிட்டத்தட்ட 40 தேசங்கள் இதில் கலந்து கொண்டன. இந்த மாநாட்டில் வெட்டிவேரை ''அதிசயப் புல்'' என்று புகழ்ந்தார்கள்.

ஹெர்குலிஸ் சுந்தரம்

© TamilOnline.com