வானியல் மேதை சுப்பிரமணியன் சந்திரசேகர்
விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை எந்தத் துறையாக இருந்தாலும் அதில் தமிழர்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். அந்த வகையில் நவீன விஞ்ஞான கணித ஆராய்ச்சிகளிலும் சில தமிழர்கள் ஈடுபட்டு வியத்தகு சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். அந்தச் சாதனைகளுக்காக, உலக அளவில் மிக உயர்ந்த பரிசாகக் கருதப்படும் 'நோபல் பரிசு' பெற்ற பெருமையும் தமிழர்களுக்கு உண்டு. இந்த உயரிய பரிசு பெற்ற தமிழர்களின் வரிசையில் வானியல் மேதை சுப்பிரமணியன் சந்திரசேகர் (1910-1995) குறிப்பிடத்தக்கவர். விண்வெளி பெளதீகம் பிரிவுக்காக 1983 ஆம் ஆண்டு, இந்தப் பரிசு இந்தப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

''எப்பொழுதுமே என் வேலைகளுக்கான அங்கீகாரம் பல நாட்களுக்குப் பின்புதான் கிடைக்கிறது'' என்று ஒரு பேட்டியில் சந்திரசேகர் குறிப்பிட்டதுபோல், எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய கெளரவமும் பாராட்டும் காலம் தாழ்த்தி, 73ஆம் வயதில்தான் இவருக்குக் கிடைத்தது.

சந்திரசேகர் பிரிட்டிஷ் இந்தியாவின் லாகூரில் 19.10.1910 அன்று பிறந்தார். சுப்பிரமணிய ஐயர்-சீதாலெஷ்மி தம்பதிகளின் பத்து பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையாக இவர் பிறந்தார். அங்கு அரசாங்க நிதித்துறையகத்தில் வேலை பார்த்த இவரது அப்பாவுக்கு 1918ல் மாற்றல் ஆனதால் குடும்பத்தோடு அனைவரும் சென்னைக்கு வந்தார்கள். அதன்பிறகு 1921ல் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பள்ளி வயதில் மற்ற மாணவர்களைக் காட்டிலும், கணிதத்தில் அல்ஜிப்ரா, ஜியாமெட்ரி போன்ற பிரிவுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்தப் பிரிவுகளில் நல்ல தேர்ச்சியும் சிறந்த புலமையும் பெற்றதனால் பள்ளியிலும், வீட்டிலும் பலரது பாராட்டையும் பெற்றார்.

தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் துறையில் சேர்ந்தார். குறிப்பாக விண்வெளி இயற்பியலில்(Astrophysics) அதிக ஆர்வம் காட்டினார். அப்போது ஜெர்மன் நாட்டு இயற்பியல் நிபுணர் அர்னால்டு சோமர் மீல்ட் என்பரைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கி¨த்தது. 'இயற்பியலில் எவ்வளவு படித்திருக்கிறாய்?' என்று அந்த நிபுணர் கேட்டதற்கு, ''அணு அமைப்பைப் பற்றித் தாங்கள் எழுதிய புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை முழுவதுமாக படித்துப் புரிந்திருக்கிறேன்'' என்று பெருமிதத்துடன் பதில் சொன்னார். இதைக் கேட்டதும், சந்திரசேகர் குறிப்பிட்டுச் சொன்ன புத்தகம் எழுதப்பட்டதற்குப் பிறகு, இயற்பியலில் ஏற்பட்ட பெரும் வளர்ச்சிகளையும், பல புதிய கண்டுபிடிப்புகளையும் பற்றி அந்த நிபுணர் இவருக்கு ஈடுபாட்டோடு விளக்கம் கொடுத்தார். அணு ஆராய்ச்சியின் புதுமைகளை அறிந்து கொள்வதில் சந்திரசேகருக்கு ஆர்வம் ஏற்பட இந்தச் சந்திப்பு முக்கிய காரணமாக இருந்தது.

கல்லூரிப் படிப்பின் போது ஆர்தர் ஸ்டான்லி எடிங்டன், ரால்ப் ஹோவர்ட் பவுலர் ஆகியவர் களுடைய நட்சத்திரங்களின் வாழ்க்கைச் சக்கர ஆராய்ச்சியால் கவரப்பட்டவர். அனைத்து நட்சத்திரங்களும் பிறந்து பின் நூறாயிரங்கோடி ஆண்டுகள் வாழ்ந்து பின்பு இறக்கின்றன என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருந்தனர். இந்த முடிவுகள் பற்றிய ஆழ்ந்த கேள்விகளை தனக்குள் தேடிக் கொண்டார்.

இந்தத் தேடல்களின் ஊடே, இளங்கலை பட்டப் படிப்பை 1930களில் முடித்தார். மேலும் இதே துறையிலேயே ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினார். கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் தலைமை ஆசிரியர் பைசன் (ஆங்கில நாட்டவர்) என்பவர் இங்கிலாந்தில் படிப்பதற்கு உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்தார்.

'நட்சத்திரங்களின் உள்அமைப்புத் தன்மை' (The Internal Constitution of the Stars) என்ற எடிங்டனின் புத்தகத்தில்,'' ஒவ்வொரு நட்சத்திரமும் தனக்குரிய எரிபொருள் செலவானவுடன், தன்னுடைய சொந்த கனத்தின் அழுத்தத்தினால் சுருங்கி, சுமார் பூமி அளவுள்ள வெண்மையான, அடர்ந்த, அனலுள்ள உருளைகளாக மாறுகிறது. இவையே வெள்ளைக் குள்ளர்கள் என்று வழங்கப்படுகிறது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இங்கிலாந்து செல்ல நீண்ட கப்பல் பயணத்தை மேற்கொண்டிருந்த போது,அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த வாதத்தை சந்திரசேகர் தீவிரமாக ஆராய்ந்தார். அதில் அடிப்படைக் குறைப்பாடு இருப்பதாக இவருக்குத் தோன்றியது. அதனைத் தொடர்ந்து 'குவாண்டம் தியரி', 'குவாண்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ்' ஆகிய கோட்பாடுகளை உபயோகித்து, ''கனம் குறைவான சிறிய நட்சத்திரங்கள் மட்டுமே வெள்ளைக் குள்ளர்களாக நிலைக்கின்றன'' என்ற முடிவுக்கு வந்தார். அதன்படி 'சூரியனைவிட 144 மடங்கு அதிகத் திறனுள்ள நட்சத்திரங்கள் இவ்வாறு செயல்படுவதில்லை. சுருங்கிக் கொண்டிருக்கும் பெரிய நட்சத்திரத்தின் மிதமிஞ்சிய ஈர்ப்பு சக்தியானது, நட்சத்திர வாயுவிலுள்ள எலெக்ட்ரானை வேகமாக நகர்த்தும். அத்தகைய அழுத்தம் வெறும் வேகத்துக்கு இணையானதாக இருக்கும்' என்று கணித்தார். இதற்கு 'ரிலேடிவிஸ்டிக் டிஜென்ரசி' (Relativistic Degeneracy) என்று பெயரிட்டு அழைத்தார்.

இதன்மூலம்,'மிதமிஞ்சிய அழுத்தத்தால், நட்சத் திரம் வெண்குள்ள நிலையை அடையாமல் சுருங்கிக் கொண்டுதான் இருக்கும்' என்பதை ஆதாரப் பூர்வமாகக் கூறினார். நட்சத்திரங்களின் இந்த செயல்பாடு விசித்திரமாக இருந்தாலும் இயற்கையின் எண்ணற்ற அதிசயங்களில் இதுவும் ஒன்று. தனது இந்தப் புதிய கண்டுபிடிப்புக்குரிய ஆதாரங்களைத் திரட்டிப் பல கடினமான கணக்குகளின் மூலம் இதை நிறுவி விடலாம், என்ற கனவுகளுடன் கப்பலிலிருந்து சந்திரசேகர் இறங்கினார். ஆனால் இங்கிலாந்து அனுபவம் இவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேலும் இரு ஆண்டுகள் ''இறக்கும் நட்சத்திரங்களைப்'' பற்றி ஆராய்ந்தார். எடிங்டனும் இவருடைய பணியில் இவரை உற்சாகப்படுத்தி வந்தார். 1931 இல் தாயார் இறந்த செய்தி இவரை ரொம்பவும் பாதித்தது. மனஅழுத்தத்திலிருந்து விடுபட ஐரேப்பாவின் வேறு இடங்களுக்குச் செல்ல முடிவெடுத்தார்.

ஜெர்மன் நாட்டிலுள்ள ஒரு இயற்பியல் நிறுவனத்தில் ஒருமாத காலம் வேலை பார்க்கும் எண்ணத்துடன் சென்று வெண்குள்ளர்களைக் குறித்த கணிதக் கணக்குகளைச் செய்து முடித்தார். 1934 ஆம் ஆண்டு இது குறித்த முழுமையான கோட்பாட்டை நிறுவினார்.

1933லேயே டாக்டர் பட்டத்தைப் பெற்றாலும், சாதனை என்னும் பாதையில், இன்னும் பல தூரங்களை கடக்க வேண்டி இருந்தது. 1936 செப்டம்பரில் கல்லூரியில் சந்தித்துக் காதல் கொண்ட லலிதா துரைசாமியை மணந்து கொண்டார்.

மென்மேலும் பல சாதனைகளுக்கு வழிவகுக்கக் கூடிய அரிய கண்டுபிடிப்பை இரண்டு கட்டுரைகளாக ராயல் வானவியல் கழகத்திடம் (Royal Astronomical Society) வழங்கினார். அதையடுத்து அந்தக் கழகத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் தான் கண்டறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளும்படி சந்திரசேகருக்கு அழைப்பு வந்தது.

சந்திரசேகர் பேசவிருந்ததற்கு முதல் நாள் கூட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்த நிகழ்ச்சி நிரல் அனுப்பட்டது. அதைக் கண்ட சந்திரசேகர் அதிர்ந்தார். ஏனெனில் இவருக்கு அடுத்த பேச்சாளராக எடிங்டன் இருந்தார். இருவரும் வேலையிடத்தில் தொடர்ந்து சந்தித்து வந்தபோதிலும், தானும் இதே துறையில் ஆராய்ச்சி செய்வதை சந்திரசேகரிடம் எடிங்டன் ஒருபோதும் சொன்னதில்லை.

சந்திரசேகர் தனது உரையில் 'அதிகப்படியான வெண்குள்ளர்களுக்கு 1.44 சூரிய திணிவுகள் மட்டுமே இருக்கும் என விளக்கினார். இதுவே இப்பொழுது ''சந்திரசேகரின் எல்லை'' என்று வழங்கப்படுகிறது. இவருடைய இந்தக் கண்டுபிடிப்பு 'கருந்துளைகள்' போன்ற அமைப்புகளின் ஆராய்ச்சிக்கு வழிகாட்டியது. (bold)1.44 சூரிய திணிவுகள் அளவிற்கு அதிகமாக இருக்கும் நட்சத்திரம், அதீத அழுத்தத்தால் சுருக்கிக் கொண்டே போகிறது.(bold) இதுவே சந்திரசேகரது கண்டுபிடிப்பு. இதைப் பலவித கணிதக் கணக்குகளுடன் இக்கூட்டத்தில் விவரித்தார்.

இவருக்குப் பிறகு பேசிய எடிங்டன் இவருடைய கோட்பாட்டை வெகுவாகத் தாக்கினார். இவரது உழைப்பை கேலிக்குரியதாக மாற்றிவிட்டார். தனது அயராத உழைப்புக்காக நன்மதிப்புக் கிடைக்கும் என்றிருந்த வேளையில் ஏற்பட்ட இத்தாக்குதலால் சந்திரசேகர் பெரிதும் மனமுடைந்தார்.

சந்திரசேகருக்கும் எடிங்டனுக்கும் இடையில் நட்புறவு இருந்தாலும், சந்திரசேகரின் கண்டு பிடிப்பையும் கோட்பாட்டையும் தாக்கிப் பேசுவதை முழுமூச்சாகவே கொண்டு எடிங்டன் செயல்பட்டார். 1935 இல் நடைபெற்ற சர்வதேச விண்வெளிக் கூட்டத்தில், எடிங்டன் ஒரு மணி நேரம் சந்திரசேகரை தாக்கிப் பேசினார்.

அறிவியல் களத்தில் இருவரும் போரிட்டு வந்தாலும் சொந்த வாழ்வில் அடிக்கடி சந்தித்தும் கடிதம் எழுதியும் வந்தனர். 1944 இல் எடிங்டன் காலமானார். ஆனாலும், எடிங்டனுக்கும் இவருக்கும் இருந்த மோதல் காரணமாக பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் இவருக்கு வேலை கிடைக்காமல் போனது.

1937ஆம் ஆண்டு இங்கிலாந்தை விட்டு அமெரிக்க நாட்டின் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இணை ஆராய்ச்சியாளராகப் பதவி ஏற்றார். பின்னர் இணைப் பேராசிரியராகவும் (1942), பேராசிரியராகவும் (1944) பின்பு சிறப்புப் பேராசிரியராகவும் உயர்வு பெற்றார்.

அப்போது 'நட்சத்திர அமைப்பு குறித்து ஆராய்ச்சி ஓர் அறிமுகம்' என்னும் புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் இருபது வருடங்களுக்குப் பிறகுதான் அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்து கொண்டனர்.

தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நட்சத்திரங்களின் இயக்கவிதியை ஆராய்ந்தார். குறிப்பாக 'ப்ளியடாஸ்' (Pleiadas) எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தில், தனிப்பட்ட நட்சத்திரங்களிடையே ஏற்படும் உராய்வில் கவனம் செலுத்தினார்.

இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்கப் போர் இலாகாவிற்கு ஆலோசகராகப் பணியாற் றினார். இச்சமயத்தில் அரசாங்கம் சிகாகோ பல்கலைக்கழகத்தைத் தன்னுடைய உயர் இரகசிய அணு ஆயுத சோதனைக்காகத் தேர்ந்தெடுத்திருந்தது. இது சம்பந்தமான சில ஆராய்ச்சிகளிலும் சந்திரசேகர் பங்கெடுத்துக் கொண்டார்.

கற்பித்தல், ஆராய்ச்சி என்னும் நிலைகளில் அதிக கவனம் குவித்து செயல்பட்டார். கேம்பிரிட்ஜில் அவருக்குத் தோழராகவும் ஆசிரியராகவும் இருந்த பவுலருடன் நோபல் பரிசைப் பெற்றார். ''ஆராய்ச்சி யில் அதிக நாட்டம் கொண்டிருந்தமையால் தன்னுடைய மற்ற ஆர்வங்களை இழக்க நேரிட்டது'' என்பதை சந்திரசேகரே ஒத்துக் கொள்கிறார்.

அறிவியலில் ஒருமுகப்பட்ட அர்ப்பணிப்பு, தீவிர உழைப்பு, விடாமுயற்சி போன்றவற்றால் சாதனை நிகழ்த்த முடியும் என்பதை சந்திரசேகர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.


தெ. மதுசூதனன்

© TamilOnline.com