அக்பர் - பீர்பால் கதை
காபூல் பேரரசரின் சோதனை

அக்பர் அரியணையில் அமர்ந்திருந்தார். அவையில் இருந்தவர்களைப் பார்த்து அவர்,'' அவையோர்களே! காபூல் பேரரசர் நமக்கு ஒரு சோதனை வைத்துள்ளார். அவர் ஓர் ஆட்டை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார். அத்துடன் ஒரு ஓலையும் அனுப்பியிருக்கிறார். அதில், “ஆட்டிற்கு ஒரு மாதம் வயிறு முட்ட உணவு அளிக்க வேண்டும். ஆனால், அதன் எடை குறைய வேண்டும். எடை குறைந்ததற்குக் காரணமும் தர வேண்டும்.'' என்று எழுதியிருக்கிறது.

''நமக்கு விடப்பட்ட சவால் இது. உங்களில் யார் இந்தச் சவாலை ஏற்றுக் கொள்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

எல்லாருமே அமைதியாக இருந்தார்கள். யாருமே ஆட்டை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை.

பீர்பால் எழுந்தார். ''பேரரசே! இந்த ஆட்டை வளர்க்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

உங்கள் நம்பிக்கைக்கு உரிய யாரேனும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் இந்த ஆட்டிற்குக் காலையிலும் மாலையிலும் வயிறு முட்ட உணவிடும் பொறுப்பை ஒப்படையுங்கள்.

ஒரு மாதம் கழித்து இந்த ஆட்டை எடை குறைந்த நிலையில் இங்கே நான் கொண்டு வருகிறேன்'' என்றார்.

பீர்பால் சொன்னதை அவையினர் யாருமே நம்பவில்லை.

'இந்த முயற்சியில் அவர் தோற்கத்தான் போகிறார்' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

வீரன் ஒருவனைப் பார்த்து அக்பர், ''இந்த ஆட்டிற்கு நாள்தோறும் வயிறு முட்ட உணவிடும் பொறுப்பு உன்னைச் சேர்ந்தது. சரியாக உண்ணாவிட்டால் உடனே என்னிடம் சொல்ல வேண்டும்.'' என்றார்.

''பேரரசே! அப்படியே செய்கிறேன்'' என்றான் அந்த வீரன்.

ஒரு மாதம் ஓடிற்று.

எலும்பும் தோலுமாகக் காட்சி அளித்த ஆட்டைப் பீர்பால் அரசவைக்கு ஓட்டி வந்தார்.

''பேரரசே! நீங்கள் என்னிடம் ஒப்படைத்த ஆடுதான் இது. நாள்தோறும் உணவு உண்டும் எப்படி இருக்கிறது? பாருங்கள்'' என்றார்.

அக்பரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. 'பீர்பால் என்ன மாயம் செய்தீர்?'' என்று வியப்புடன் கேட்டார்.

''பேரரசே! இதில் மாயமும் இல்லை. மந்திரமும் இல்லை. நீங்கள் அனுப்பிய வீரன் இதற்குக் காலையிலும் மாலையிலும் வயிறார உணவு போட்டான். இதுவும் நன்கு சாப்பிட்டது.

உணவு உண்ணும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இதை ஓர் ஓநாயின் எதிரில் கட்டிப் போட்டேன். எப்பொழுது ஓநாய் தன்னைக் கொல்லுமோ என்று அஞ்சி நடுங்கியபடியே இருந்தது ஆடு.

உண்ட உணவு அச்சத்தின் காரணமாக இதன் உடலில் ஒட்டவில்லை. ஆடு மெலிந்ததன் ரகசியம் இதுதான்'' என்று விளக்கம் தந்தார் பீர்பால்.

மகிழ்ச்சி அடைந்த அக்பர், ''பீர்பால்! உம் அறிவுக் கூர்மைக்கு எல்லையே இல்லை. உம்மால் காபூல் பேரரசரின் சோதனையில் வெற்றி பெற்றேன். என் பாராட்டுகள்'' என்று புகழ்ந்தார்.

© TamilOnline.com