க. சட்டநாதன்
தமிழில் ஈழத்துப் படைப்புலகம் தனித் தன்மையையும் பல்வேறு புதிய பரிமாணங்களையும் கொண்டுள்ளது. ஈழத்துத் தமிழ்மக்கள் எதிர் கொண்டிருக்கும் 'போரும் வாழ்வும்' அவர்களது படைப்புக் கண்ணோட்டத்தை, படைப்புக் களத்தை ஆழமாக்கியுள்ளது. அனுபவத் தள விரிவுக்கேற்ப மன இயக்கம் ஆழமான மனிதாயப் பிரச்சனைப் பாடுகளின் எடுத்துரைப்பைப் படைப்பு வெகு இயல்பாக்கிவிடுகிறது.

தலைமுறைகளைக் கடந்து 'போரும் வாழ்வும்' ஒவ்வொருவர் வாழ்விலும் அவரவர் அனுபவ அறிவு முதிர்ச்சிக்கேற்ப பகிர்ந்து கொள்ளலைச் சாத்தியப்படுத்துகிறது. இந்த ரீதியில் படைப்பாளிகள் பலர் தமது படைப்புலகில் இயங்கி வருகின்றனர். இவர்களுள் ஒருவர் தான் க. சட்டநாதன்.

1970களின் ஆரம்பத்தில் எழுத்துலகில் நுழைந்தவர் கனகரத்தினம் சட்டநாதன். இவர் யாழ்ப்பாணம் வேலனைக் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். சென்னை விவேகானந்தா கல்லூரியில் பயின்று பி.எஸ்.சி பட்டம் பெற்றவர். ஆசிரியப் பணியை மேற்கொண்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் நவீன கலை இலக்கியத் துறையில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். மார்க்ஸிம் கார்க்கி, அன்டன் செக்கோவ் , புதுமைப்பித்தன், கு.பா.ராஜகோபாலன், ஜெயகாந்தன், ஜானகி ராமன் உள்ளிட்ட ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டவர். தீவிர வாசிப்பு, அது ஏற்படுத்திய தாக்கம் அவரை படைப்புத்துறையில் தள்ளியது.

1970களில் கொழும்பில் இருந்து வெளிவந்த வீரகேசரி இதழில் 'நாணயம்' என்ற சிறுகதையை முதன்முதலில் எழுதினார். தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். எழுத்துத் துறையுடன் மட்டுமல்லாமல் பத்திரிகைத் துறையிலும் பணியாற்றினார். 1972-74 காலப் பகுதியில் ஈழத்தில் வெளிவந்த 'பூரணி' என்ற இலக்கிய இதழின் இணையாசிரியர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். சிறிது காலம் 'வீரகேசரி' பத்திரிகையிலும் பணியாற்றியுள்ளார்.

க. சட்டநாதன் எழுத்துலகில் பிரவேசித்த காலம் இளம் தலைமுறையினர் பிரவேசித்த காலம். சிறுகதையின் உருவம், உள்ளடக்கம், மொழிநடை ஆகியவற்றில் சில புதிய போக்குகள் வெளிப்படத் தொடங்கியுள்ள காலம் இது. கலைத்தன்மை, சமூக அக்கறை ஆகிய இரண்டுமே ஒரு படைப்பின் சமநிலைக்கூறுகள் என்ற புரிதலும் உணர்வோட்டமும் தலையெடுத்த காலப்பகுதி. இக்காலப்பகுதியில் தோன்றிய எழுத்தாளர்களுள் சட்டநாதன் தனித்தன்மை பெற்றவர். இவரது படைப்பாளுமை அவருக்கான தனியான அடையாளத்தை வழங்குகிறது.

தீவிர வாசிப்பும் தேடலும் மிக்கவராக இருந்தாலும் எழுதிக்குவிக்கும் எழுத்தாளர் அல்ல. இவர் எழுத்தின் தொகை குறைவு தான். ஆனால் சமூகப்பிரக்ஞையும் கலைப்பிரக்ஞையும் ஒத்தியங்கும் ஆழமான மனிதநேயத்தை மைய இழையாகக் கொண்டிருக்கும் இவரது படைப்புலகு. இதுவே இவருக்கான தகுதிப்பாட்டை நிர்ணயித்துவிடுகிறது.

ஆழமான மனிதநேயம், அதனை அனுபவ முழுமையுடன் வாசகருக்கு தொற்றவைக்கவுள்ள சொல்லாட்சி எடுத்துரைப்பு என்பன இவரது படைப்பாளுமைகள். இவற்றை உணர்வுப்பூர்வமாக பேணிக் கொள்வதில் தீவிர அக்கறை கொண்டவர்.

நவீன சினிமா, இசை, ஓவியம் உள்ளிட்ட துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இத்துறைசார் புலமை அவரது படைப்பாளுமையில் நன்கு பளிச்சிடும். இவை படைப்புலகின் ஆழகியல் கூறுகளின் தர்க்கத்துக்கு வளம் சேர்ப்பவையாகவும் இருக்கும்.

இவரது படைப்புகள் பல்வேறு தமிழ் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. மேலும் சர்வதேச ஆங்கில இதழ்களிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. குறிப்பாக Journal of South Asian Literature vol.22; Asian Studies Centre, Michigan State University, USA, The Pengunin New Writing in Srilanka உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்துள்ளன.

சட்டநாதன் கதைகள் ''பிளறிக் கொண்டு அட்டகாசம் செய்யும் யானையைப் போலன்றி மிக அடக்கமாகவும் மனிதத்தன்மையோடும் தனது பாத்திரங்களை நோக்கி அவர்களுடைய உறவு களின் ஊடாக சமுதாயத்தைப் பற்றி குறிப்பாக, யாழ்பாண சமுதாயத்தைப் பற்றி நாசூக்காக தமது கதைகள் மூலம் சிந்திக்கத் தூண்டினார்'' என உலா முன்னுரையில் ஏ.ஜெ. கனகரத்தினா குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. இது முற்றிலும் சட்டநாதன் படைப்புலகில் இயல்பாகவே உள்ளது.

'போரும் வாழ்வும்' கூட இவரது படைப்புலகில் மனிதாயப்பட்ட உணர்வோட்டத்தின் வெளிப் பாடாகவே பதிவு செய்யப்படுகிறது. இராணுவ ஆக்கிரமிப்புச் சூழல்களில் மனிதம் படும்பாடு மிகுந்த இயல்பாகவே அவை ஏற்படுத்தும் வலி, வேதனை, இழப்பு, எதிர்ப்பு, கொதிப்பு உள்ளிட்டவற்றின் தாக்கம் வாசகருக்குத் தொற்ற வைக்கப்படுகிறது.

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகில் சட்டநாதன் மிகக்குறைவான கதைகள் எழுதினாலும், அவர் தனித்து அடையாளம் காட்டும் எழுத்தாளராகவே உள்ளார். ஈழத்துச் சிறுகதையின் வளர்ச்சிக்கு, சட்டநாதன் கதைகள் வளமானவையாகவே உள்ளன.

சிறுகதைத் தொகுப்பு : -
மாற்றம் 1980
உலா 1992
சட்டநாதன் கதைகள் 1995

தெ. மதுசூதனன்

© TamilOnline.com