பாரதி கலாலயா நிகழ்ச்சிகள்
வசந்தத்தை வரவேற்று திருமதி. நந்தினி ராமமூர்த்தி அவர்கள் நிகழ்த்திய கச்சேரி கடந்த மார்ச் மாதம் பாரதி கலாலயாவில் நடைபெற்றது. ஐந்து வயது இளம் சிறுமியாக இருந்த போதே இசை பயில ஆரம்பித்த இவர், முதலில் மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடமும், திருவனந்தபுரம் திரு. ஆர்.எஸ்.மணி அவர்களிடமும், அதைத் தொடர்ந்து நெய்வேலி திரு.சந்தானம் அவர் களிடம் இசை பயின்றார். தற்போது சென்னையில் பல சபாக்களில் பாடி வருகிறார்.

பாரதி கலாலயாவில் உயர் நிலை ஆசிரியை யாக இருக்கும் இவர், தனது மாணவிகளுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்கினார். திரு. ரவீந்திர பாரதி அவர்கள் தனது மாணவர் களுடன் மிருதங்கம் வாசித்தார். திருமதி.மைதிலி ராஜப்பன் அவர்கள் வயலின் வாசித்தார்.

நவராகமாலிகா வர்ணத்துடன் நந்தினி நிகழ்ச்சியை ஆரம்பித்தார். "தேவ தேவ","ஸ்ரீ சரஸ்வதி", "சரஸ ஸாமதான", "சரோஜ தள நேத்ரீம்", போன்ற கீர்த்தனங்கள் இடம் பெற்றன. மானசா, ப்ரசன்னா, மீரா,லாவண்யா உட்பட பல மாணவர்கள் இதில் பங்கேற்றார்கள். எல்லா மணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மாணவரோடு இணைந்து பாடப்பட்டது.

இரவீந்திர பாரதியின் மாணவர்கள், அர்ஜுன் மற்றும் நாராயணன் ஆகியோர்கள் நந்தினியின் மாணவர்களுடன் ஈடு கொடுத்து மிருதங்கம் வாசித்தார்கள். அவர்களுடன் திரு.ரவிந்திர பாரதியும் இணைந்து வாசித்து, நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தார். அவர்கள் மூவரின் தனி ஆவர்த்தனம் ஒரு திருவிழாக்கோலத்தை உருவாக்கியது. வந்திருந்த அனைவரையும் தாளம் போட வைத்து, பாரதி கலாலயாவின் லய நயத்தை நிரூபித்தார்கள்.

திருப்புகழுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. இந்தத் திருப்புகழின் சிறப்பு என்ன என்றால், தமிழர்களுக்கே வாயில் நுழையத் திண்டாடும் திருப்புகழினை டோவா என்கிற அமெரிக்க மாணவி கற்றுக் கொண்டு, நந்தினியுடன் சேர்ந்து பாடியதுதான்!

© TamilOnline.com