தமிழ் நாடு அறக்கட்டளை - தமிழ் விழா-2003
ஆண்டுகள் மூன்றுக்கு மேலாயினும் என்னை இன்னும் ஆண்டு கொண்டிருக்கும் சில நினைவுகள்...

தேதி: மே 6, 2000. இடம்: சென்னை.

108 டிகிரி வெயிலில் சென்னை நகரே அனல் பிழம்பாகத் தகித்துக் கொண்டிருக்க, 'தமிழ்நாடு அறக்கட்டளை மையம்' மட்டும் கருமமே கண்ணாய் ஒரு தேன் கூட்டின் சுறுசுறுப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பதினான்கு வயது சங்கீதா சொன்னது... "அப்பா இல்ல சார், நான் தான் ஸ்கூலுக்கும் போய்க்கினு, வேலையும் செஞ்சுக்கினு அம்மாவையும் பாத்துக்கினு... தமிழ்நாடு அறக்கட்டளையில் எனக்குக் கொறஞ்ச காசுக்குக் கிடைக்கிற இந்த டிரெயினிங்குக்கு அமெரிக்காவிலிருந்து உதவுற உங்க எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி சார்...".

கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிருக்கும் கருணை காட்டிடும் இறைவன் சங்கீதாவைப் போன்ற துளிருக்கு நீர் வார்த்திடாது போவானோ?

அந்தக் கன்றின் கண்களிரண்டும் நன்றியினால் ஒரு பக்கம் நனைந்திருந்தாலும், கண்ணின் மணிகளுக்குள் நம்பிக்கைச் சுடர், கனலாய்க் காய்வதைக் கண்டேன்.

சற்றுத் தள்ளி...கார்த்திக்...இப்ராஹீம்

எல்லா இளநெஞ்சிலும் இனம் தெரிந்த சோகம்...வறுமை என்றோர் இனம். என்றாலும் அந்த சோகப் பாறையையும் துளைத்துக் கொண்டு, "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்.."என்று வெளிப்படும் நம்பிக்கைத் துளிர்.

நித்தமும் துயர்க் கடலில் நீச்சலிட்டுக் கொண்டிருக்கும் எத்தனையோ சங்கீதாக்கள், கார்த்திக்குகள், இப்ராஹீம்களுக்கு தமிழ்நாடு அறக்கட்டளை மையம் ஓர் சாந்திநிகேதனம்.

சென்னையில் அறக்கட்டளை மையத்தை அமைத்திட வாரி வழங்கிட்ட தலைவர் திரு. ராம் துக்காராம் போன்றோரும் நம்மில் பலரும் கண்ட கனவு இன்று மெய்ப்படுவதை நேரில் பார்த்தவர்களும் மட்டுமே உணரமுடியும். எண் 9, டெய்லர்ஸ் வீதியில் தமிழ்நாடு அறக்கட்டளை, ஒரு குட்டிப் பல்கலைக்கழகத்தைப் போல் "ஜே!ஜே!" என்று பொறுப்போடு பணியாற்றி வருகிறது.

...மீண்டும் ஆண்டு கொண்டிருக்கும் அந்த நினைவுகள்...

வயிற்றிலிருக்கும் பிள்ளைச் சுமைக்காகத் தலையில் புல்கட்டு சுமக்கும் எத்தனையோ அன்னையர்...கல் உடைத்து மகளின் கல்யாணக் கடனடைக்கும் எண்ணற்ற தந்தையர்...ஏரில் பூட்டிய எருது துவண்டு விட்டாலும் தான் தளர்ந்து விடாமல் எருதினை ஏரிலிருந்து அவிழ்த்து, நிழலில் நீர் காட்ட விட்டுவிட்டுத் தன் தோளினை இன்னுமொரு நுகக்காலில் பிணைத்துக் கமலை நீர் இரைத்துக் கல்லு¡ரியில் படிக்கும் தன் தம்பிக்காக, தங்கைக்காகக் கற்பூரமாய்க் கரைந்து கொண்டிருக்கும் கணக்கிலடங்கா அண்ணன்மார்!...

தமிழ் நாட்டுக் கிராமங்களில் காலகாலமாய் நாம் கண்டும் கேட்டும் வரும் பிரத்தியேட்சமான உண்மைகள் இவை. நாலு முழ வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு அயராது உழைத்துஉழைத்து ஓடாய்த் தம்மைத் தேய்த்துக் கொண்டிருக்கும் துபோலும் எத்தனையோ 'பெரிசு'களை, இந்த அமெரிக்க மண்ணுக்கு வந்து உயர்ந்துள்ள நம்மில் பலர் நன்றாகவே அறிவோம்.

இவருக்கெல்லாம் நம் நன்றியை எப்படிக் காட்டலாம்?

சோகப்படும் போது கண்ணீர் வடிக்கலாம்; தாகப்படும் போது தண்ணீர் தரலாம்; அன்ன சத்திரம் ஆயிரம் வைக்கலாம்; ஆலயம் பதினாயிரம் நாட்டலாம்.. ஆனால், "அன்ன வையாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்..." என்று, என்றோ எழுதிச் சென்ற எட்டயபுரத்துக் கவிஞனின் வரிகள் இன்று வடிவெடுக்க வேண்டும் எனும் பெரு நோக்குடன் தமிழ்நாடு அறக்கட்டளை இந்த அமெரிக்க மண்ணின் தென் கோடியில் நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற ஓர்லாண்டோ மாநகரில் வருகின்ற ஜூலை நாலாம் நாள் தொடங்கி ஆறாம் நாள் வரை ஏற்ற மிகு தமிழ் விழாவினைக் கொண்டாடுவதில் பெருமையுறுகிறது.

தமிழ் நாடு அறக்கட்டளை - தமிழ் விழா-2003 குறித்த விளக்கங்களுக்கு www.tco2003.com வலைத் தளத்தில் வலை விரித்திடுக!

மேலும் விபரங்கள் வேண்டுமெனில் விழாக்குழுத்தலைவர் டாக்டர் சொக்கலிங்கம் MD அவர்களைத் தொலைபேசி எண் 863-385-5538 அல்லது tnfconvention2003@hotmail.com எனும் மின்னஞ்சல் வழியாக அணுகிடுக!

முனைவர் திருமதி பரிமளா நாதன் அவர்களை vsp1947@aol.com எனும் மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளுக!

கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, மகிழ்ந்திட அறக்கட்டளை வழங்கிடும் தமிழ்த் திருவிழா-2003 அரியதோர் வாய்ப்பு. என்றாலும், இவ்விழாவின் ஒப்பரிய நோக்கம் - தமிழ்த் திரு நாடுதன்னில் எண்ணற்ற ஏழையர் தயம் புழுங்கிக் கல்விக் கண்ணற்ற சேய் போல் கலங்கிடாதிருக்க.., திசை தெரியாது திகைத்து நிற்கும் விதவைப் பெண்டிருக்கு வழி காட்டிட.., இன்ன பிற நற்காரியங்களுக்கான பொருள் ஈட்டுவதேயாகும்.

டாக்டர் சொக்கலிங்கம் அவர்களின் இயக்கத்தில் அறக்கட்டளை எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேள்விக்கு
"கை கோர்ப்போம், கை கொடுப்போம்!"

கோம்ஸ் கணபதி

© TamilOnline.com