மே 2003 : வாசகர்கடிதம்
அமெரிக்க மண்ணில் தமிழ் மணம் பரப்பும் உங்கள் சேவையை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.

தென்றலை இங்கே உலாவவிடும் சிறந்த பணியை வாழ்த்துகிறேன். வாழ்க நீவிர். இவ்வையத்துக்குள் வளம் பல பெற்று. தமிழ் அன்னை சார்பில்.

Fremont நகரில் நாங்கள் தங்கியிருந்தபோது தென்றலின் சுவையினை - நவம்பர் 2002 முதல் மார்ச் 2003 வரை - பருகும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறோம்.

மு. நரேந்திரன்

******


‘தென்றலில்’ தவழ்ந்த எனக்குள் ஒரு சூறாவளியை ஏற்படுத்தியது ‘அமெரிக்காவின் போர்க்கோலம்’ கட்டுரை. விறுவிறுப்பான ஒரு நாவலைப் படிக்கும் உணர்வு ஏற்பட்டது. வார்த்தைகளில் வலிமை; வாக்கியங்களில் வேகம்; போருக்கான காரணங்களையும் அதன் விளைவுகளால் ஏற்படும் பேராபத்துகளையும் சினிமா கதாபாத்திரங்களின் வழியே விளக்கி, வார்த்தைகளின் மூலம் அதன் வரலாற்றை மிக அழகாக நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்ற விதம் அருமை. கட்டுரை முடிவில், அமெரிக்கா தான் அழித்த நாடுகளை மீண்டும் போரின் முடிவில் கட்டி வளர்த்திருக்கின்றது என்பதைப் பார்க்கும் போது, ஈராக்கை இப்படி அடிப்பது அணைக்கத் தானோ என்று தோன்றுகிறது.

மா. கதிரேசன்

******


நானும் என் மனைவியும் சான் ஓசேயில் உள்ள எங்கள் மகளின் இல்லத்திற்கு கோவையி லிருந்து வந்துள்ளோம். மிகவும் சுறுசுறுப்பாக உள்ள எனக்கு எப்படி பொழுதுபோகப் போகிறது என்று நினைத்து வந்தால் இங்குள்ள 15 தென்றல் இதழ்களைப் படிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது.

அதைப் படித்துவிட்டு தென்றல் மலர் எப்படி இருந்தது. எப்படி எல்லாம் வாழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். மற்றபடி இலக்கிய சுவை குறையாது, தரமான அச்சிட்டு வழங்கியதை உங்களுக்கு எழுதவேண்டும் என்று எங்கள் எண்ணக் குவியல்களைத் தென்றலுக்குப் புகழாரம் சாட்ட வேண்டும் என்று வரும்போது எங்களது அத்துணை பிரதிபலிப்புகளையும் எங்களுக்கு முன் பல வாசகர்கள் எழுதி விட்டார்கள்.

குறிப்பாக சொல்லவேண்டுமே, ஒரு தரமான பத்திரிகை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு தென்றல் ஒரு சிறந்த உதாரணம். அமெரிக்கா வாழ் நம்மவர்களைப் பற்றியும் மற்றும் இந்தியாவில் இருக்கும் அவர்தம் உறவினர்களுக்கு ஒரு இணைப்புப் பாலமாக செயல்பட்டு வரும் தென்றல் இதழுக்கு எங்கள் மனமார்ந்த ஆசிகள்.

K. ராஜகோபால்

******


அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்ததும் என் போன்ற தமிழார்வம் கொண்ட தமிழ் நெஞ்சங்கள் தேடுவது தமிழ் இதழ்களைத்தான். அந்தத் தேடலின் போது வீசியது உங்கள் 'தென்றல்'. சுகம் கண்டேன். தமிழமுதம் உண்டேன். வாழ்த்துகள்.

N.M. ஆதம்,
Alexander City, Alabama.

******


எங்கள் மகளின் பிரசவத்திற்கு உதவி செய்வதற்காக நாங்கள் கலி·போர்னியாவுக்கு வந்திருக்கிறோம். வந்த இடத்தில் மார்ச் மாத 'தென்றல்' இதழைப் படிக்க நேர்ந்தது.

Dr. அலர்மேல் ரிஷி எழுதிய 'வழிபாடு' கட்டுரை நிறைய தகவல்களுடன், குறிப்பாக நம்மாழ்வார் பாசுரத்தைக் குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்த விதம் மிக அருமை.

ஸ்ரீநாத் ஸ்ரீனிவாசன் அவர்களின் நேர்காணல் கட்டுரையும், இராணுவத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட துர்கா பாய் அவர்களைப் பற்றிய கட்டுரையும் மிகவும் பயனுள்ளதாகவும், படிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இருந்தது.

மொத்தத்தில் தென்றல் படிப்பதற்கு இனிமையான அருமையான ஒரு நல்ல இதழ். இந்தப் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

கண்ணன்

******


நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகள். உங்கள் எல்லோருடைய (Team) உழைப்பும் தென்றலில் நன்றாகத் தெரிகிறது. முகம் தெரியாத, எழுத்து மூலம் (தென்றலில் படித்ததை) அறிமுகமான ஒவ்வொருவர்க்கும் என் வாழ்த்து.

ஹேமா லஷ்மணன்

******


எங்கள் மகனோடு தங்குவதற்காக இங்கு வந்திருக்கிறோம். வந்த இடத்தில் தென்றல் இதழைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு இலவச இதழ் என்று கேள்விப்பட்டதும் எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

தென்றல் இதழில் இடம் பெற்றிருக்கும் விதவிதமான கட்டுரைகள் நிஜமாகவே என் மனதைக் கவர்ந்தன. தமிழ்ச் சமுதாயத்துக்கு தென்றல் இதழ் மூலம் நீங்கள் செய்து வரும் சேவை மிகவும் மதிக்கக்கூடியது. தென்றல் குழுவுக்கு எங்கள் பாராட்டுகள்.

M.M. கிருஷ்ணன், விசாலம் கிருஷ்ணன்,
Glendora

******

© TamilOnline.com