தென்னிந்திய வரலாற்றின் மைல்கல்
சென்னையில் புத்தக வெளியீட்டுக்குப் பஞ்சமில்லை. வெளியிடப்படும் புத்தகங்களில் கவிதை, சிறுகதை போன்ற கலை இலக்கியப் படைப்புகள்தான் அதிகம். இந்தப் புத்தக வரிசையில் இருந்து மாறுபட்ட புத்தகத்துக்கான வெளியீட்டு விழா சென்னை மயிலை பாரதீய வித்யா பவனில் (15.04.03) நடைபெற்றது.

ஐராவதம் மகாதேவன் கடந்த 40 ஆண்டு களுக்கு மேலாக அரும்பாடுபட்டு எழுதிய 'Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D' என்ற நூல். தமிழக தொல்லியல் கழகம் சார்பில் கல்வியியலாளர் வா.செ. குழந்தைசாமி தலைமையில் வெளியீடு நடைபெற்றது. இந்நூலை க்ரியா பதிப்பகமும் ஹார்வர்டு பல்கலைக்கழகமும் இணைந்து வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல்துறை ஆணையர் க. அசோக்வர்தன் ஷெட்டி நூலை வெளியிட வா.செ. குழந்தைசாமி நூலைப் பெற்றுக் கொண்டார்.

வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் துறை சார்ந்த பல்வேறு அறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்வெட்டியல் துறைப் பேராசிரியர் எ. சுப்பராயலு (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்), தொல்லியல் துறைப் பேராசிரியர் ப. சண்முகம் (சென்னைப் பல்கலைக்கழகம்), கொடுமுடி சண்முகம் (தமிழக தொல்லியல் கழகம்), இரா. கலைக்கோவன் (திருச்சி இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம்), அ. பு. அறவாழி (தமிழ்நாடு சமணப் பேரவை), எஸ். ஸ்ரீபால் (முன்னாள் டிஜிபி, சமணத் தமிழறிஞர்), இரா. நாகசாமி (முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர்), எஸ். இராமகிருஷ்ணன் (க்ரியா பதிப்பகம்) உள்ளிட்ட பலரும் நூலின் சிறப்பு குறித்துப் பேசினார்கள். விழாவில் பல்வேறு எழுத்தாளர்கள், ஆய்வாளர் கள், மாணவர்கள் மற்றும் சமண அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஹார்வர்டு பல்கலைக்கழகம் கீழ்த்திசை ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 1891 முதல் பல்வேறு ஆய்வு நூல் களையும் (Harvard Oriental Series) வெளியிட்டு வருகின்றது. இதுவரை வெளியிட்ட நூல்களில் பெரும்பாலானவை வடமொழி பற்றிய நூல்க ளாகவே இருந்தன. இந்த நூல் வரிசையில் தமிழ் பற்றிய நூல் எதுவும் வெளிவரவில்லை. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு தமிழ் தொடர்பாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூல் தமிழக வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் ஓர் பாய்ச்சல் ஏற்படுத்தக்கூடிய நூல். ''எதிர்கால ஆய்வாளர்களுக்கு உதவும் வகையில் களஞ்சியம் போல் நூலைத் தொகுத்திருக்கிறார்'' என்று தலைமையுரையில் வா.செ. குழந்தைசாமி குறிப்பிட்டது மிகையான கூற்றல்ல.

தமிழகத்தில் பல ஊர்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட 'பிராமி' எழுத்துக் கல்வெட்டுகள் பல அரிய தகவல்களை நமக்குத் தருகின்றன. இவற்றைக் கண்டறிவதில், சிறப்பான முறையில் படித்துப் பொருள் கொள்வதில் அறிஞர்கள் பெரிதும் உழைத்திருக்கிறார்கள். இவ்வாறு உழைத்து வருபவர் களுள் முன்னணியாக உள்ளவர் ஐராவதம் மகாதேவன். தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டமையும் அதன் வாசிப்பும் வரலாறு எழுதியல் முறையில் புதிய தெளிவுகளை உருவாக்கியது. தமிழ் பிராமி கல்வெட்டு வாசிப்பில் ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பு முக்கியமானது. அவரது தொடர்ந்த ஈடுபாடு உழைப்பின் பயனாகவே தற்போது இந்நூலை வழங்க முடிந்துள்ளது.

1966இல் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ்மாநாட்டில் அவர் அளித்த கட்டுரையும் அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகளும் சங்க இலக்கிய ஆய்வுக்குப் புதிய திசையைக் காட்டி வருகின்றன. தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த நூலும் தமிழக வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் உள்ளிட்ட துறைகளில் புதிய கருவூலங்களை நோக்கிப் பயணிக்கும் சாத்தியப்பாட்டைக் கொண்டுள்ளன.

'கல்வெட்டியலில் ஓர் எழுத்து இரண்டு எழுத்து மாறினாலும் கருத்து மாறிவிடும். ஆனால் ஐராவதம் மகாதேவன் கல்வெட்டு ஆய்வாளராக மட்டுமன்றி வரலாற்று ஆசிரியராகவும் உழைத்து ஒவ்வொரு எழுத்தையும் தடவிப் பார்த்து மிகச் சரியாக ஆய்வு செய்துள்ளார். வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்நூல் மிகப் பெரிய கொடை'' என்று கல்வெட்டியல் பேராசிரியர் எ. சுப்பராயலு குறிப்பிட்டார்.

கிபி 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி 17ஆம் நூற்றாண்டு முடிய உள்ள காலத்து தமிழ்நாட்டு வரலாறு பெரும்பாலும் கல்வெட்டுகளை அடிப்படையாக வைத்தே எழுத வேண்டி உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவில் பிற பகுதிகளின் வரலாறுகளுக்கும் பொருந்தும். அக்காலத்தைப் பற்றிய எந்த வரலாற்று நூலை எடுத்துப் பார்த்தாலும் இது விளங்கும். இலக்கியங்கள் ஓரளவே மூலச் சான்றுகளை வழங்கி உள்ளன.

இலக்கியங்களின் காலங்களேகூட கல் வெட்டுச் செய்திகளின் துணை கொண்டுதான் நிறுவப்பெற்றுள்ளன. மற்ற வரலாற்று மூலங்களை விட கல்வெட்டுகள் நம்பத்தகுந்தவை. ஏனெனில் இவை பொறிக்கப்பட்ட காலத்திற்குப் பின் பெரும்பாலும் எந்த மாற்றத்தையும் அடைவ தில்லை. ஆனால் இலக்கியங்களில் ஏடு பெயர்த்தெழுதுவோரால் பல மாற்றங்களும் இடைச்செருகல்களும் புகுத்தப்பட அதிகமான வாய்ப்புண்டு. அப்படி நடைபெற்றதற்குப் பல உதாரணங்களும் உண்டு.

இந்நூல் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு சிறந்த வரலாற்று உண்மைகள் வெளிப்படுவதற்கான முழுச்சாத்தியப்பாட்டைக் கொண்டுள்ளது. பெரும்பாலான கல்வெட்டுகளுக்குக் காலத்தை கணித்தறிவது எளிது. வரலாற்றுக்குக் காலம் இன்றியமையாத தேவையாகும். ஆகவே தமிழ்நாட்டு வரலாற்றின் காலக்கணிப்பில் கல்வெட்டுகள் முக்கியமான வரலாற்றுச் சான்றாகவே கொள்ளப்படும். முறையான வரலாற்றாய்வுகளை மேற்கொள்ள வேண்டுமானால் ஐராவதம் மகாதேவனின் இந்நூல் புதிய திசையைக் காட்டும். இக் கருத்தை இத்துறைசார் ஆய்வாளர்கள் பலரும் ஏற்றுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு ஐராவதம் மகாதேவனின் ஆய்வுத் திறமை உள்ளது.

இந்நூலில் கிமு 3ம் நூற்றாண்டின் இறுதி, அதாவது கல்வெட்டுத் தடயம் கிடைத்திருக்கும் காலத்திலிருந்து கிபி 6ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் தமிழில் இதுவரை கிடைத்துள்ள எல்லாக் கல்வெட்டுகளையும் தொகுத்துக் கொடுத்துள்ளார். மேலும் அவற்றின் படமும், அவை இருக்கும் இடம் பற்றிய தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகளையும் வரன்முறையாகப் பரிசிலித்து அவை பற்றியும் பதிவு செய்துள்ளார். தனது ஆய்வு நோக்கில் காலத்தையும் கொடுக்கிறார். ஆக மொத்தம் 89 தமிழ் பிராமி கல்வெட்டுகள் 21 வட்டெழுத்து கல்வெட்டுகள் இத்தொகுப்பில் பதிவு செய்யப் பட்டுள்ளன. 'பிராமி' கல்வெட்டுகளைக் கண்டு பிடித்த நமது முன்னோர்கள் அவற்றைக் கண்ட றிய எடுத்துக் கொண்ட முயற்சிகள், செலவழித்த உழைப்பு, விடாமுயற்சி அனைவராலும் வியந்து போற்றுவதற்குரியது. எட்டமுடியாத குகைகளில் ஏறி இறங்கி வரலாற்றுக் கருவூலங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த ரீதியில் தான் ஐராவதம் மகாதேவனின் உழைப்பு, அர்ப்பணிப்பு புரிந்து கொள்ளப்படவேண்டும்.

ஒரு நிறுவனம் சார்ந்து பல்கலைகழக மட்டத்தில் பலரைக் கொண்டு செய்ய வேண்டிய பணியைத் தனி ஒரு மனிதராக இருந்து, புலமை யின் முக்கியத்துவம் குறையாமல் புலமை நேர்மையோடு இந்நூலை எழுதியிருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. தமிழ் சூழலில் உ.வே.சாமிநாதய்யர், மயிலை. சீனி வேங்கடசாமி போன்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவராகவே ஐராவதம் மகாதேவன் உள்ளார்.

ஐராவதம் மகாதேவனின் இந்நூல் தென்னிந்திய வரலாற்றின் மைல்கல் என்பதை வரலாற்று அறிஞர்கள் எல்லாருமே ஏற்றுக் கொள்வார்கள். இந்நூல் வருகை புதிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகள் பெருகவும். காலக்கணிப்பு, தமிழக வரலாறு பற்றிய புதிய முடிவுகளுக்கு வரவேண்டிய நிலையும் ஏற்படலாம்.

வரலாற்றுத் தொடர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாயம் பற்றிய சிந்தனைக்கும் ஐராவதம் வழங்கியுள்ள இந்நூல் பெரும் கொடை. அவர் பாராட்டப்பட வேண்டிய பெருந்தகை. அவர் வழியில் ஆய்வாளர்கள் இன்னும் பலர் பெருக வேண்டும்.

'Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D'
ஆசிரியர்: ஐராவதம் மகாதேவன்
வெளீயிடு: க்ரியா பதிப்பகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம்
பக்கம்: 760

தெ. மதுசூதனன்

© TamilOnline.com