ட்ரூமேன் விருது வென்ற அமெரிக்கத் தமிழர்கள்
இந்த ஆண்டு இரண்டு தமிழ் அமெரிக்க இளைஞர்கள் $30,000 மதிப்புள்ள அமெரிக்க அரசின் ட்ரூமன் அறக்கட்டளைப் பரிசு பெற்றுள்ளார்கள். மறைந்த அமெரிக்க அதிபர் ஹாரி எஸ் ட்ரூமன் நினைவாக, இந்த அறக்கட்டளையை அமெரிக்க அரசு நடத்துகிறது.

கல்லூரி மாணவர்களில், பொதுத்தொண்டில் ஈடுபாடுள்ள மற்றும் தலைமைத் திறமையுள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களது பட்டப்படிப்புக்கும், தலைமைப்பயிற்சிக்கும் நிதியுதவி அளிப்பதோடு, தங்களைப் போலப் பொது வாழ்வில் முத்திரை பதிக்கத் துடிக்கும் மற்ற மாணவர்களின் அறிமுகத்தையும் நட்பையும் ஏற்படுத்திக் கொடுப்பதுதான் இதன் முக்கியக் குறிக்கோள். தன்னலம் கருதாது பொதுநலம் விழைந்து, புதியதோர் உலகம் செய்வோம் என்ற துடிப்பும், அறிவும், தலைமை ஆற்றலும் வாய்ந்த இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்கள் பொதுவாழ்வில் சிறப்புற ஈடுபட வாய்ப்புகள் அமைத்துக் கொடுத்து வந்திருக்கிறது இந்த அறக்கட்டளை. இந்தப் பரிசைப் பற்றிய செய்திகளை http://www.truman.gov என்ற வலைத்தளத்தில் காணலாம். இவ்வாண்டு இந்த விருது பெற்ற தமிழ் அமெரிக்கர்கள் மீனா கண்னன், மற்றும் கணேஷ் சீதாராமன்

குமாரி மீனா கண்ன், அலபாமா:

மீனா, மோபில், அலபாமாவில் பிறந்து வளர்ந்து, புகழ் பெற்ற வாஷிங்டனின் ஜார்ஜ் டவுன் (Georgetown) பல்கலைக்கழகத்தில் பயில்கிறார். இவர் பன்னாட்டு அரசியலை (International Politics) முதன்மைப் பாடமாகவும், நீதி மற்றும் அமைதி ஆய்வுகளைச் சான்றிதழ்த் துணைப்பாடமாகவும் கற்று வருகிறார். தற்போது மனிதாபிமானத் தலையீடுகளைச் (humanitarian intervention) சட்டம் மற்றும் அறக்கண்ணோட்டத்தில் (legal and moral aspects) ஆய்ந்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்.

ஜார்ஜ்டௌனில் படிக்கும்போதே வாஷிங்டன் பெருநகர்ப் பகுதியில் அகதிகளின் பாதுகாப்பு முதல் விலைமாதர் சிக்கல்கள் வரை பல்வேறு பிரச்சனைகளைக் கையாளும் அரசு சார்பற்ற அமைப்புகளில் தொண்டாற்ற முன்வந்தார். மேற்கொண்டு பன்னாட்டுப் பொதுச் சட்டத்தில் (Public International Law) பட்டப்படிப்பும், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டத்துறையில் (International Humanitarian Law) முதுநிலை பட்டப்படிப்பும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். புத்தகங்கள், புகைப்படக் கலை, கால் பந்தாட்டம், திரைப்படம் பார்ப்பது போன்றவை இவருக்கு மிகவும் பிடித்தவை.

கணேஷ் சீதாராமன், ஜோர்ஜியா:

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசுத் துறைப் படிப்பை மேற்கொண்டுள்ள கணேஷ் தற்பொழுது தன் முதல் புத்தகமான ''கண்ணுக்குத் தெரியாத குடிமக்கள்: செப்டம்பர்11க்குப் பிறகு இளைஞர் அரசியல் (Invisible Citizens: Youth Politics After September 11) வெளி வருவதை ஆவலோடு எதிர்நோக்கி யிருக்கிறார். இவர் ஹார்வர்டு அரசியல் சங்கத்தின் தலைவர் மற்றும் ஹார்வர்டு அரசியல் கழகத் தில் மாணவர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் மட்டுமல்லாமல் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்குக் குடிமை (civics) கற்பிக்கிறார். ஹார்வர்டு கிரிம்சன் (The Harvard Crimson) பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார். அனுபவமிக்க தேர்தல் பேச்சாளரான இவர் ஜன நாயகக் கட்சியின் தேசியக் குழுவிற்கும், ஏபிசி செய்தி நிறுவனத்தின் புலனாய்வுப் பிரிவிலும் பணியாற்றியிருக்கிறார். பன்னாட்டு உறவு பற்றிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ளவிருக்கிறார். பயணச் சுற்றுலாக்கள் மேற்கொள்வதும், இலக்கியங்கள் படிப்பதும் இவருக்கு மிகவும் பிடித்தவை.

© TamilOnline.com