விந்தன்
தமிழ் படைப்புலகில் விந்தையான எழுத்து களைக் கொண்டு, முற்றிலும் வேறுபட்ட கதைக்களங்களைக் கையாண்டு எழுத்துலகில் நுழைந்தவர் விந்தன்.

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் என்னும் சிற்றூரில் வேதாசலம் - ஜானகியம்மாள் தம்பதிகளின் மகனாக 22.9.1916இல் பிறந்தார் கோவிந்தன் என்ற விந்தன். வறுமை மிகுந்த வாழ்க்கையில் நடுநிலைப் பள்ளி கல்வியைக்கூட முடிக்காமல் தந்தையோடு வேலைக்குப் போனார். ஆனால் நோஞ்சான் போல் இருந்த கோவிந்தனால் கருமான்பட்டறையில் வேலையைத் தொடர முடியவில்லை. கோவிந்தனிடம் படிப்பார்வம் இருந்ததால் இலவச இரவு நேரப் பள்ளியில் சேர்ந்து படித்தார்.

பின்னர் ஓவியம் கற்க விரும்பி சென்னை ஓவியக்கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அதற்கான வசதி இல்லாததால் ஓவியப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். பின்னர் ஜெமினி ஸ்டூடியோவில் விளம்பரப் பிரிவில் ஓவியராகச் சேர்ந்தார். ஆனால் அங்கு அவரால் நிலைத்திருக்க முடியவில்லை. வறுமையும் துன்பமும் அவரை ஆட்கொண்டிருந்தது.

'தமிழரசு' அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாகச் சேர்ந்தார். இங்கு பல்வேறு தமிழ் அறிஞர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அச்சுத்தொழிலில் தேர்ச்சி பெற்று வந்தாலும் வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து 'ஆனந்தபோதினி', 'தாருல் இஸ்லாம்' போன்ற அச்சகங்களுக்கு மாறி அனுபவமிக்க கம்போசிட்டராக 'ஆனந்த விகடன்' அச்சகத்தில் சேர்ந்தார்.

பின்னர் 'கல்கி' பத்திரிகையில் தொழிலாளியாக இணைந்து கல்கியின் பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியவரானார். எழுத்தின் மீது இருந்த ஆர்வமும் வித்தியாசமான சிந்தனையும் இவரை எழுதத் தூண்டின. கல்கியும் அவரை ஊக்குவித்தார். கல்கியின் 'பாப்பா மலர்' பகுதியில் வி.ஜி என்னும் பெயரில் எழுதினார். கல்கி தான் 'விந்தன்' என்று பெயர் வைத்துக் கொள்ளச் சொன்னார்.

ஒரு தொழிலாளியாக நுழைந்த கோவிந்தன், விந்தன் என்ற எழுத்தாளராகி கல்கி ஆசிரியர் குழுவில் துணையாசிரியராகத் தகுதி பெற்றார். இந்த நியமனம் ஆசிரியர் குழுவில் இருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு தொழிலாளி, துணையாசிரியராக இருப்பதா என்று கல்கியிடம் போராட்டம் நடத்துமளவிற்கு நிலைமை வளர்ந்தது. ஆனாலும் கல்கியின் அரவணைப்பு இருந்தமையால் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து எழுத்தாளராக மேலும் பரிணமிக்கத் தொடங்கினார்.

1946இல் விந்தனின் 'முல்லைக்கொடியாள்' என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தொழிலாளராக வாழ்ந்து வந்தவர்கள் இலக்கியப் படைப்பாளிகளாக மாறி, இலக்கியப் பொருளில் கதைக் களங்களில் புதிய அம்சங்களைப் புகுத்தும் ஓர் எழுத்தாளர் பரம்பரை தமிழில் தோன்றியது. இந்தப் பரம்பரையில் முக்கியமானவர் தான் விந்தன்.

அதாவது படித்த மேல்தட்டு வர்க்கத்தினருக்கே எழுத்தும் பத்திரிகையும் ஏகபோக உரிமை என்று எண்ணிய காலத்தில் அதற்கு மாறான சமூகப் பின்புலத்தில் இருந்து எழுத்துத் துறைக்கு வந்தவர் விந்தன். சமுதாயத்தின் அடிநிலை மக்கள், நகர்ப்புற உதிரித் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள், கிராமப்புற மக்கள் என பலதரப்பட்ட மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை அந்த மனிதர்களை உயிரோட்டத்துடன் வெளிப்படுத்தினார்.

''விந்தன் உழைப்பாளி மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர். ஏழை எளியவர்கள் தொழிலாளிகள், பாட்டாளிகள் சுகதுக்கங்களை இதயம் ஒன்றி அனுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர். அந்த உணர்ச்சி களால் இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகள் பலவற்றை அவர் திறம்பட எழுதியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணி தூக்கம் இல்லாமல் தவிர்க்க நேரிடும்'' என்று, முல்லைக்கொடியாள் கதைத் தொகுதிக்கு கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய முன்னுரை விந்தனது சிறப்புகளை நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இவ்வாறு எழுதி வந்த விந்தனின் படைப்புலகு, கருத்துநிலை சார்ந்த ஓர் அடையாளத்தை வழங்கியது. இந்தப் போக்கு கல்கியில் விந்தன் தொடர்ந்து பணியாற்றுவதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆதரித்தோராலேயே வேண்டப்படாதவராக மாறினார். இதனால் கல்கியில் இருந்து விலகினார்.

பின்னர் 'மனிதன்' என்னும் பத்திரிகையை நடத்தினார். சிறிது காலம் திரைப்பட உலகிலும் நுழைந்து பார்த்தார். அன்பு (1957), கூண்டுக்கிளி (1954), குழந்தைகள் கண்ட குடியரசு (1960) உள்பட ஏழு படங்களுக்கு வசனம் எழுதினார். ஆனால் அவரால் எதிலும் முழுமையாக ஒட்ட முடியவில்லை. தான் காணும் சமூகக் குறைபாடுகளைத் தனது எழுத்தில் காட்டும் ஆர்வம் மட்டும் குறையவில்லை.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதை, வாழ்க்கை வரலாறுகள், திரைப்படம் என பல்வேறு களங்களில் விந்தன் தனது பார்வையைச் செலுத்தினார். ஆனால் அவரது வறுமை, துன்பம் மட்டும் அவரை விட்டு விலகவே இல்லை. தினமணி பத்திரிகையில் துணையாசிரியராக இருந்த போதுதான் 'எம்.கே.டி. பாகவதர் கதை', 'சிறைச்சாலை சிந்தனை' என்னும் தலைப்பில் நடிகர் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை எழுதி வந்தார். மணிவிழா காணவிருந்த நேரத்தில் விந்தன் 30.6.1975 இல் காலமானார்.

ஆனால் தமிழ் இலக்கிய உலகில் அவர் விட்டுச்சென்ற இலக்கியப்படைப்புகள் அவருக்கான தகுதியை அடையாளம் காட்டுபவையாகவே உள்ளன. ஆனால் விந்தனுக்கான இடம் இன்னும் சரிவர கணிக்கப்படாமலேயே உள்ளது.

விந்தனின் படைப்புகளில் சில...

விந்தன் கதைகள் இரண்டு பாகம்

நாவல்கள்

கண் திறக்குமா?
பாலும் பாவையும்
மனிதன் மாறவில்லை
சுயம்வரம்
காதலும் கல்யாணமும்
அன்பு அலறுகிறது

மற்றும்

குட்டிக்கதைகள்
பசி கோவிந்தம்
ஓ, மனிதா!
மிஸ்டர் விக்கிரமாதித்தன்

தெ. மதுசூதனன்

© TamilOnline.com