உபதேசத்திற்கா - உபயோகத்திற்கா?
சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடம், கீதைக்குப் பேரூரை வழங்கிக் கொண்டிருக்கிறார் சுவாமிஜி. ஆண்களும், பெண்களுமாக முப்பதுபேர் அவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருப்பவர்கள். வர்ணாஸ்ரம தர்மத்தின் மூன்றாவது படியான வானப்ரத்ஸ்தத்தில் இருந்து கொண்டு சந்நியாஸ தர்மத்தில் அடிஎடுத்து வைப்பவர்கள். இவர்கள் வாழ்நாளில் எத்தனையோ முறை கீதை உபன்யாசம் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் அர்ஜூனனைப் போல் மீண்டும் மீண்டும் சந்தேகம். அதனால் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள்.

விஜயா தினமும் தவறாமல் சுவாமிஜியின் கீதையைக் கேட்கப் போவாள். இதைப் புத்தகம், குறிப்பு எடுத்துக் கொள்ள நோட்டு, பென் (pen) சகிதம் முதல் வரிசையில் ஆஜர் ஆவாள். சுவாமிஜியின் வாயிலிருந்து விழும் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் 'கபார்' என்று உடனே நோட் புக்கில் குறித்துக் கொண்டுவிடுவாள். அறுபது வயதைக் கடந்த அவள், சுமார் நாற்பது வருடங்களாகப் 'பகவத் கீதை லெக்சர்' எங்கு நடந்தாலும் அதைத் தவறாமல் கேட்பாள். அவளுக்குக் கீதையிலுள்ள பதினெட்டு அத்தியாயமும் மனப்பாடம். சுவாமிஜியே உபன்யாசத்தில் சிறிது தடுமாறினாலும், உடனே அந்த கீதை ஸ்லோகத்தின் வரியை எடுத்துக் கொடுத்துவிடுவாள். அருகே உள்ளவர்கள் அவளுடைய அறிவை அதிசயமாகப் பார்ப்பார்கள். அதனால் அவளுக்குக் கர்வமும் கூட.

பக்கத்து வீட்டில் வசித்த சரளாவிற்குக் கிட்டத்தட்ட இதே வயதுதான். விஜயா தினமும் தவறாமல் கீதை வகுப்புக்குப் போவதையும் 'படபட'வென்று கீதை ஸ்லோகங்களைப் படிப்பதையும் கண்டு சரளா அதிசயப்படுவாள். இந்த ஜன்மத்தில் இது நம்மால் முடியாது. நாம் ஜன்மம் எடுத்ததே வீண். இருந்தால் விஜயா மாதிரி இருக்க வேண்டும் என்று எண்ணி மறுகுவாள்.

ஒருநாள் சரளா விஜயாவிடம் ''விஜயா நீ தினமும் கீதை கிளாஸ¤க்குப் போகிறாயே, அங்கே என்ன சொல்கிறார்கள்'' என்று கேட்டாள். அதற்கு விஜயா, அதுவா அங்கே சுவாமிஜி பகவத் கீதைக்கு அர்த்தம் சொல்கிறார்'' என்றாள்.

அதற்கு சரளா, ''கீதை என்றால் என்ன? கிருஷ்ணனைப் பற்றின கதையா?'' என்று ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தில் கேட்டாள்.

விஜயா 'கலீர்' என்று சிரித்துவிட்டு, கீதை கிருஷ்ணனைப் பற்றின கதை இல்லை. கிருஷ்ணனே நமக்குச் சொல்லும் நீதி. இதுகூட உனக்குத் தெரியாதா?'' என்றாள். அவளுடைய அலட்சிய சிரிப்பையும், அவள் குரலில் உள்ள அகங்காரத்தையும் கேட்டு சரளா மிகவும் வருத்தப்பட்டாள். ''இதுகூடத் தெரியாத ஜன்மம் நான் ஒருத்திதான் இருப்பேன் போலிருக்கு" என்று நினைத்து அவள் மனம் வெறுத்து விட்டது.

மறுநாள் காலை பொழுது விடியும் முன்பே சரளா எழுந்து விட்டாள். தினமும் இதுதான் வழக்கம். ''ப்ரஹ்ம முகூர்த்தத்தில் எழுந்தால்தான் அவள் வீட்டு வேலைகள் முடியும்.

வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு, குளிக்க வெந்நீர் போட்டு, காபி டிகாஷன் போட்டு, பாலைக் காய்ச்சி என்று மடமடவென்று வேலையில் இறங்கினாள். மாமனார், மாமியார், கணவன், காலேஜ் போகும் பெண், ஸ்கூலுக்குப் போகும் பிள்ளை, மாமனாரின் அம்மா என்று கூட்டுக் குடும்பம் அவளுடையது. இதில் அவளைத் தவிர வீட்டு வேலை செய்பவர்கள் யாரும் இல்லை. சிலருக்கு வயோதிகம் காரணம். சிலருக்கு நேரமின்மை காரணம். அதனால் அவள் யாரையும் எதிர்பார்ப்பதில்லை.

'மடமட'வென்று குளித்துவிட்டு வீட்டு வேலைகளை ஆரம்பித்ததும் ''சரளா, அம்மா சரளா, யேய் சரளா'' என்று பலவிதமாக அவள் பெயர் கூப்பிடப்படும். குரலிலிருந்தும், கூப்பிடும் விதத்திலிருந்தும் கூப்பிடுபவர் யார் என்று தெரிந்து கொண்டு, அவர்களுடைய தேவைகளைக் கவனிப்பாள். மாமனார், மாமியார், பாட்டி இவர்களுக்குப் பல் தேய்க்க, குளிக்க வெந்நீர் வைத்துக் கொடுத்துவிட்டு, மாமனார் சந்தியாவந்தனத்திற்கு ரெடி பண்ணி விடுவாள். சமையலைக் கவனித்துக் கொண்டே கணவனுக்கு ஆபீஸ் போக டிரெஸ் ரெடி செய்து வைத்துவிட்டு, ஸ்கூலுக்குப் போகும் பிள்ளையின் புத்தகங்களை எல்லாம் தேடி எடுத்து வைத்து, வாசலில் வந்து கத்தும் கறிகாய்காரிக்கும் பதில் சொல்லிவிடுவாள். மனைவியாக, தாயாக, மருமகளாக, வீட்டு எஜமானியாக கடமைகளைச் செய்ய வேண்டும் - செய்வாள். சிறிது கூட முகம் சுளிக்க மாட்டாள்.

மாமியார், ''அம்மா சரளா, வெந்நீர் சுடவே இல்லையே. அப்படியே குளிச்சுட்டேன். எனக்கு மார்சளி கட்டினா உனக்குத்தான் கஷ்டம்'' என்றாள். ''அப்படியாம்மா, நாளைக்கு நன்றாக கொதிக்க வச்சு தரேன்'' என்றாள் சரளா.

உடனே பாட்டி தன் பங்குக்கு, ''சரளா, என் மடிபுடவையை ஒத்தையா காயப் போடலையா... காயவே இல்லையே... வேலை செஞ்சா போறாது... சரியா செய்யணும்... பெரியவாளுக்கு ஏத்த மாதிரியா செய்யணும்'' என்றாள்.

''சரி பாட்டி... நாளைக்கு ஒத்தையாவே போடறேன்... இன்னிக்குத் தப்பாயிடுத்து'' என்றாள் சரளா.

"சரளா என் விபூதி டப்பா, ஜப மாலை எங்கே போயிடுத்து...தேடிக் குடு பார்க்கலாம்'' இது மாமனார்.

இதற்குள் பிரஷர் குக்கர், ''உடனே என்னை அடெண்ட் பண்ணாவிட்டால் நான் வெடித்துவிடுவேன்'' என்பதுபோல் ஐந்தாவது முறையாக உரக்கக் கத்தியது. அதற்கு வாய் இருந்தால் அதுவும் தன் பங்கிற்கு சரளா என்று கூப்பிட்டிருக்கலாம். சரளா உடனே ஓடிப் போய் அதை நிறுத்திவிட்டு ஜப மாலை தேடப் போனாள். உடனே பாட்டி, 'சரளா, அடுப்பை தொட்டக் கையை அலம்பிண்டு ஜப மாலை தேடு... அடுப்பு பத்து'' என்றாள்.

''இல்லை பாட்டி'' கையை அலம்பிண்டு தான் வந்தேன் என்றாள் - அதே புன்முறுவலுடன்.

'சரளா - யேய் சரளா.. அப்பா அம்மாவை அப்புறம் கவனிக்கலாம் - முதல்லே என்னைக் கவனி, எனக்கு ஆபீஸ¤க்கு நேரமாச்சு - டிரஸ் ரெடியா'' என்றான் அவள் கணவன்.

''டிரஸ் அப்பவே ரெடி பண்ணிட்டேனே... இதோ நொடியில சமையல் ரெடி பண்ணிடறேன்'' என்று சமையல் அறைக்குப் பறந்தாள் சரளா. பத்து நிமிஷத்தில் மணக்க மணக்க வத்தல் குழம்பு, ரசம், பருப்பு துவையல், உருளைக் கிழங்கு ரோஸ்ட் கறி எல்லாம் ரெடி.

டிரஸ் செய்து கொண்டு நேரே சாப்பாட்டு டேபிளில் வந்து உட்கார்ந்த அவள் கணவன் கணேஷ், ''சமையல் பிரமாதம் போ. டிவிலே வர மசாலா பொடி விளம்பரம் மாதிரி வாசனை என்னை அப்படியே இழுக்கிறது. ஆபீஸ் மட்டும் பத்துமணிக்கு ஆரம்பம் ஆரதா இருந்தா ஒரு பிடி பிடிப்பேன் சமையல் செய்த உன் கைக்கு ஒரு ஜதை தங்கவளையல் போடணும்'' என்று ஓஹா என்று புகழ்ந்தான். "ரொம்ப புகழாதீங்க'' என்றாள் சரளா புன்முறுவலுடன்.

''அம்மா...'' உரத்த குரலில் மகள் மஹிமா.

''என்னம்மா நீ என்னுடைய சுரிதாரை கொஞ்சம் பார்த்து வைக்கக் கூடாதா, ஒரே கசங்கல்... நான் இன்னிக்கு எது போட்டுக்கனும்னு நினைச்சனோ அது நடக்காது... போம்மா நீ, உனக்கு வரவர என்னைப் பத்தி அக்கரையே இல்லை. நான் காலேஜூக்குப் போனா என்னை மறந்துடறே'' என்று படபடவென்று அடுக்கிக் கொண்டே போனாள்.

"இது இல்லாவிட்டால் என்ன! வேற டிரஸ்ஸே இல்லையா...ரொம்பதான் விரட்டரையே... நான் என்ன சும்மாவா இருக்கேன்... இந்தக் குடும்பத்தில் உழைக்கும் கரங்கள் என்னுடையதுதான்'' என்று சரளாவும் தன் பங்கிற்குப் பொரிந்து தள்ளி இருக்கலாம். ஆனால் அது அவளுக்குப் பழக்கம் இல்லை. பதிலாக ''அப்படியாம்மா... இதோ நானே ஒரு நிமிஷத்தில் அயர்ன் பண்ணி தரேன். ஆசைப்பட்டதையே போட்டுக்கோ'' என்றாள் சரளா.

சரளா என்ன? பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில் சொன்ன 'ஸ்தீத ப்ரஞ்ஞன்' என்பவனின் மறு உருவமா? குளிரோ, வெய்யிலோ புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ, சுகமோ, துக்கமோ எதுவுமே இவளை பாதிக்காதா? எப்பவும் எப்படி இவளால் மனநிம்மதியுடன் புலன் அடக்கத்துடன் இருக்க முடிகிறது. பகவத் கீதை படிக்காவிட்டாலும் கீதையில் கண்ணன் சொன்னபடியே நடந்து கொள்கிறாளே... இவள் வாழ்க்கை அன்றோ பகவத் கீதையின் சாரம்!!

அதே போன்ற வாழ்க்கையில் நாற்பது வருஷங்களாக பகவத் கீதை விரிவுரையை விடாது கேட்கும் பக்கத்து வீட்டு விஜயாவின் வீட்டில் ஒரே சத்தம்.

அவசரமாக ஆபீஸீக்கு புறப்படும் அவள் கணவன், ''என்ன இன்னுமா சமையல் ஆகவில்லை" என்று கத்த அவளும் விடாமல் ''ஆகலைன்னா எப்படி முடியும். இந்த வீட்டிலே உழைக்கும் கரம் நான் ஒருத்திதான். மத்தவா எல்லாம் உண்ணும் கரங்கள்தான்" என்றாள்.

''என் டிரஸ் கசங்கி இருக்கேம்மா'' என்ற பெண்ணிடம் ''ஏண்டி, டிரஸ் கசங்கினா என்ன? வேறே போட்டுக்கோ... என் வேலையையே என்னாலே செய்ய முடியாது. எனக்கு நேரமாச்சு. கீதா கிளாஸ¤க்குப் போகணும்.. அதிலும் நேத்திக்கு சுவாமிஜி மிக அழகாகச் சொன்னார். ஒருநாள் கூட நான் கிளாஸ் மிஸ் பண்ண மாட்டேன். இந்த சனியன் பிடிச்ச வீட்டு வேலை ஒழியவே ஒழியாது'' என்றாள் கடுகடுப்புடன்.

'ஸ்தீத ப்ரஞ்ஞன்' என்றால் என்ன என்றுகூடத் தெரியாத சரளா அப்படியே வாழ்ந்து காட்டுகிறாள். இவள் ஒருபுறம், 'ஸ்தீத ப்ரஞ்ஞன்' என்பவளைப் பற்றி கண்ணன் கூறி உள்ள கீதையின் அத்தியாயத்தில் உள்ள எல்லா ஸ்லோகங்களையும் கரைத்துக் குடித்துவிட்டு அதன் படி நடக்காமல் தானும் நிம்மதியின்றி பிறரையும் நிம்மதியாக வாழவிடாமல் செய்யும் விஜயா ஒரு புறம்.

பகவத் கீதை - உபயோகத்திற்கா அல்லது உபதேசத்திற்கா!!!

விமலா வாசுதேவராவ்

© TamilOnline.com