ஆலங்குடி
கோள்களில் கொற்றவன் குருபகவான் என்பது ஆன்றோர் வாக்கு. குருபலன் வந்துவிட்டது என்றாலே திருமணம் கூடிவரும், சுபச்செய்திகள் தேடிவரும், நன்மைகள் நாடிவரும் என்பது எல்லோரிடத்திலும் காணப்படும் ஆழ்ந்த நம்பிக்கை. மற்ற கிரகங்களைவிட குருவிடத்திலே தான் அந்த எதிர்பார்ப்பு. எல்லா சிவன் கோயில்களிலும் குருபகவான் தக்ஷிணா மூர்த்தியாய் கல்லால மரத்தினடியில் உபதேசஞ்செய்கின்ற வடிவில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் சிலையாகக் காணலாம். மற்ற தெய்வங்களுக்காக எழுப்பப்பட்ட கோயில்களில் இவ்வாறு காணப்படும் குரு பகவானுக்கு ஆலங்குடியில் அவனுக்கென்றே அமைந்த கோயில் ஒன்றிருக்கின்றது. நவகிரக ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. ஆலங்குடி மட்டுமே "குரு ஸ்தலம்" என்ற பெருமைக்குரியது.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவை. இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால் "திருக்கருகாவூர்" முல்லைவனம் என்று அழைக்கப்படுகிறது. இதனை விடியற்கால வழிபாடாக ஆரம்பிக்கவேண்டும். அடுத்து இரண்டாவதாக, "அவளிவனநல்லூர்" பாதிரி வனம் என்று சிறப்பிக்கப்படுகிறது. காலை வழிபாட்டிற்குரியது. மூன்றாவதாக "அரதைப் பெரும்வழி. வன்னிவனம் என்றழைக்கப்படும் இத்தலம் உச்சிக்கால வழிபாட்டிற்குகந்தது. நான்காவதுதான் "ஆலங்குடி" என்றழைக்கப் படும் "திரு இரும்பூளை" ஆகும். இது பூளை வனம் என்றும் காசிவனம் என்றும் அழைக்கப்படும். மாலை நேரத்து வழிபாட்டிற்குகந்தது. இறுதியாக, "திருக்கொள்ளம்புதூர்" என்பது வில்வவனம் என்று சிறப்பித்துக் கூறப்படும். பஞ்ச ஆரண்யத்து வரிசையின் இறுதியில் உள்ள இத்தலம் அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது. சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக சிவத்தலங்களில் மூலவர் சிவனாக இருப்பதும் அந்த சந்நிதிக்கு மேலே கோவிலின் கோபுரம் திகழ்வதும் வழக்கம். இங்கு ஆபத்சகாயேச்வரர் என்று அழைக்கப்படும் மூலவர் வீற்றிருக்கும் கிழக்குத் திசையில் கோபுரம் இல்லை. மாறாக குருஸ்தலம் என்ற பெருமைக்குப் பொருத்தமாக குரு பகவானுக்கு உரிய தெற்கு வாயிலில் ஐந்தடுக்குக் கோபுரம் அழகாக அமைந்திருப்பது ஒரு சிறப்பாகும்.

"ஆலம் உண்ட பெருமான் உறையும் ஆலங்குடி' என்று சுந்தரர் தேவாரம் குறிப்பிடும் இறைவன் இங்கு ஆபத்சகாயேச்வரர் என்று பெயர் பெற்றதற்குப் புராண வரலாறு ஒன்றுண்டு. பார்வதி தேவி ஒருமுறை தம் தோழியருடன் பந்து வி¨ளையாடிக் கொண்டிருந்த போது மேலே சென்ற பந்தைப்பிடிக்க உயர்த்திய கையை சூரியபகவான் தம்மை தேவியார் நிற்கும்படி கூறுவதாக எண்ணித் தாமும் தேவியின் கட்டளைக்குப் பணிந்து நின்றுவிட்டார்.

நாட்களை முறைப்படுத்தும் சூரியனின் செயல் இதனால் தடைப்பட பூமியின் சுழற்சியும் ஸ்தம்பித்தது. இதனால் சினங்கொண்ட இறைவன் சாபத்தால் தேவியானவள் பூலோகத்தில் காசிவனத்தில் மகாமதி என்னும் பக்தருக்கு மகளாகப் பிறந்து பின்னர் இறைவனைக்குறித்துத் தவம் இயற்றினார் என்றும், தக்க தருணத்தில் தம்மை நாடி வந்து மணமுடிக்க வேண்டும் என்று முன்னரே வேண்டிக் கொண்டதால் இறைவனும் ஆலங்குடி வந்து இறைவியை மணந்து கொண்டதாகப் புராணச் செய்தியால் அறியலாம்.

இவர்களுக்குத் திருமணம் நடைபெற்ற இடம் "திருமணமங்கலம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள தேவி "ஏலவார்குழலி" என்ற நாமமுடையவர். சனி பகவானுக்கு காகம் வாகனம் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இந்தக் கோயிலில் மட்டுந்தான் கருடன் வாகனமாகக் காணலாம். இது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.

பூளைவனம்: பூளைச்செடி என்பது மருத்துவ குணமுடையது. துளசி வேப்பிலை போன்றே இதற்கும் மருத்துவ மஹிமை உண்டு. அதே நேரத்தில் துளசிக்குரிய காரமோ வேப்பிலைக் குரிய கசப்போ கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றும் இத்தலத்தில் ஏராளமான பூளைச்செடிகள் மண்டிக் கிடக்கின்றன. தேவர்களைக் காக்கும் பொருட்டு ஆலம் உண்டான் என்பதால் அவன் எழுந்தருளியுள்ள இத்தலம் ஆலங்குடி ஆயிற்று. இங்குள்ள இறைவன் கல்லில் உளியால் செதுக்கப்படாமல் ஸ்வயம்புவாகத் தோன்றியவன். மற்ற கோயில் களில் தக்ஷிணாமூர்த்தி உத்சவ மூர்த்தியாக இடம் பெற்றதில்லை. இங்கு குருஸ்தலம் என்பதால் உத்சவமூர்த்தியாகவும் இடம் பெற்றுள்ளார். "வசைபாடக் காளமேகம்" என்பார்கள். சிலேடையாகப் பாடுவதிலும் வல்லவர் காளமேகம். சிலேடையில் காளமேகம் இத்தலத்து இறைவனைப் பற்றிப் பாடியுள்ள ஒரு பாடல் இதோ:

ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார்? - ஆலம்
குடியோனே யாகில் குவலயத்தோ ரெல்லாம்
மடியாரோ மண்மீதினில்?

இதன் சிலேடைப் பொருளை இனி பார்ப்போம்.

முதலாவதாக, ஆலங்குடியைத்தன் இருப்பிடமாகக் கொண்டவனை ஆலாலம் உண்டவனை ஆலங்குடிக்கமாட்டான் என்று யார் சொன்னார் ஆலங்குடியான் என்றால் ஆலங்குடி என்ற ஊரைச் சேர்ந்தவன் என்றும் ஆலங்குடிக்க மாட்டான் என்றும் இருபொருள். அவன் ஆலங்குடிக்கவில்லை யென்றால் உலக மக்கள் இறந்திருப்பார்களல்லவா? எப்படிப்பட்ட அருமையான சுவைத்து மகிழ வேண்டிய சிலேடைப்பாடல் இது!!

டாக்டர். அலர்மேலு ரிஷி

© TamilOnline.com