மறு பரிசீலனை
போர் 'வெற்றிகரமாக' முடிந்து விட்டது. ஆனால் சில நெருடல்கள்: பயங்கரவாதத்தை அழிப்பது முக்கிய நோக்கங்களில் ஒன்று. எந்த சவுதி அரேபியாவின் துணையுடன் போர் நடத்தப்பட்டதோ, அதே நாட்டில் எதிர்பாராத மற்றும் திட்டமிட்ட தாக்குதல் நடந்துள்ளது. போரின் வெற்றிக்கும், சவுதியின் உதவிக்கும் என்ன பொருள்? அமெரிக்கா தன் அடிப்படைக் கணக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறுகிய காலக் கண்ணோட்டம் பலனளிக்காது.

ஒவ்வொரு 'போருக்குப்' பின்னரும் அமெரிக்காவின் பொறுப்புகள் அதிகரிக்கின்றன. எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றன. எதிர்ப்புகளும் தான். இதைச் சமாளிப்பது எளிதல்ல. அமெரிக்க அதிபருக்கும் அவர்தம் ஆலோசகர்களுக்கும் நல்ல திட்டங்களும் யோசனைகளும் தோன்றினால் நாட்டுக்கும் உலகுக்கும் நல்லது. தோன்றுமென்று நம்புவோம்.

எழுத்தாளர் சு. சமுத்திரம் அவர்கள் மறைவு எதிர்பாராதது. வாழ்வு நிலையை வெறுமனே ஆவணப்படுத்தும் பார்வையாளனாகத் தன்னைக் கருதாத எழுத்தாளர். தன் எழுத்தும், தானும் சமூகத்தில் தாக்கத்தை மட்டுமன்றி மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று முயன்றவர். அவருடன் கருத்தில் மாறுபட்டவர்களும் மதிக்கும் செயல் வேகம் கொண்டவர். அவரது குடும்பத்தினருக்குத் தென்றல் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

சமீபத்தில் 'துமாரி அம்ரிதா' என்ற இந்தி நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. ஷபானா ஆஸ்மி மற்றும் ·பாருக் ஷேக் - இருவர் மட்டும் நடித்தது. சொல்லப்போனால் நடித்தது என்பது சரியா என்று தெரியவில்லை. மேடையில் இரண்டு மேசை மற்றும் இரண்டு நாற்காலிகள் - இருவரும் ஒருவருக்கு ஒருவர் (35 ஆண்டுகளில்) எழுதிய கடிதங்களைப் படிக்கிறார்கள் - நாற்காலியில் அமர்ந்த வண்ணம். குரல் ஏற்ற இறக்கங்கள் கூட அதிகமில்லை. இந்த மிகக் குறைந்த பின்னணியைக் கொண்டு மொழி தெரியாத எனக்கும் பெரிதும் புரியும் வகையில் அமைக்கப் பட்டிருந்தது. இயக்குனர் மற்றும் நடித்தவர்களை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.

இந்தியர்கள் அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் அமெரிக்காவில் சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த மாதம் தென்றல் இதழுக்காக நேர்முகம் கண்டிருக்கும் சோமசேகர், Showstopper என்ற புத்தகத்தின் மூலம் நம்மில் பலருக்குத் தெரிந்தவர்தான். அந்தப் புத்தகத்தைப் படிக்காதவர்கள் உடனே அதையும் அதற்குப் பல வருட முன்னோடியான Soul of a new machine புத்தகத்தையும் தேடிப் படியுங்கள்.

மீண்டும் சந்திப்போம்,
பி. அசோகன்
ஜூன் - 2003

© TamilOnline.com