சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளித்திரை கண்ட வெட்டுக்கள்
முதன் முதலாகத் தமிழ் சினிமாவின் வரலாற்றுப் பரிமாணத்தை வெளிப்படுத்துவதில் ஈடுபட்டவர் தியடோர் பாஸ்கரன். 1977- இல் Journal of Tamil Studies ஆய்விதழில் வெளியான இவரது Birth of a Medium: Silent cinema in South India கட்டுரை தமிழ்த் திரை ஆய்வின் முதல் புலமை முயற்சி. தொடர்ந்து இவரது கட்டுரைகளும் நூல்களும், திரையியல் பற்றிய ஆய்வு முயற்சிகளுக்குப் புதிய வெளிச்சம் காட்டுபவை.

உலக வரலாற்றை நோக்கும்போது காலனி ஆதிக்க அரசுகள், கருத்துகளைப் பரப்பும் ஊடகங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, அவற்றைச் சிதைக்க முயன்றிருப்பதைக் காணலாம். இந்தியாவிலும் சினிமா வளர ஆரம்பித்தபோது, பிரிட்டிஷ் அரசு அதை ஒருவித பயத்துடனேயே அணுகியது.

பத்திரிகைகளைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க பிரிட்டிஷ் அரசு பல சட்டதிட்டங்களை அமலுக்குக் கொண்டு வந்தது. அதேபோல நாடகத்தையும் சினிமாவையும் கட்டுப்படுத்த முயற்சி செய்தது. 1896லேயே மும்பையில் தொடங்கிய சினிமா, சீக்கிரமே ஒரு பொழுது போக்குச் சாதனமாக வளர்ந்தது. பல நகரங் களில் தினசரிக் காட்சிகள் புதிதாகக் கட்டிய சினிமா அரங்குகளில் நடக்க ஆரம்பித்தன.

அப்போது சென்னையிலும் மும்பையிலும் பெரும்பாலும் அமெரிக்கப் படங்களே திரையிடப்பட்டன. இந்தப் படங்கள் மேற்கத்திய, வெள்ளைக்காரரைப் பற்றிய, அவர்களது கலாசாரம் பற்றிய தவறான கருத்துகளை, பார்க்கும் இந்திய மக்கள் மனதில் ஏற்படுத்தி விடுமோ என அஞ்சியது. இந்தியாவில் ஊடகத் தைத்தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என ஆங்கிலேயே அரசு எண்ண ஆரம்பித்தது.

விளைவு: இந்திய சினிமாட்டோகிராப் சட்டம்-1918. இதன் நோக்கம், ''சினிமாப் படங்கள் திரையிடுவதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், பொதுக் காட்சிக்கு ஒவ்வாத திரைப்படங்கள் காட்டப்படுவதைத் தடுப்பதும்'' ஆகும்.

1920ல் சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய நகரங்களில் திரைப்படத் தணிக்கைக் குழு நிறுவப்பட்டது. இங்கு சினிமா தணிக்கைக் குழுக்கள் செயல்பட ஆரம்பித்தன. இந்த மூன்று குழுக்களுக்கும் தலைவர் அந்தந்த ஊர் போலீஸ் கமிஷனர். இந்தக் குழுக்கள் செயல்பட ஆரம்பித்ததுமே அரசின் சாயம் வெளுத்தது. அரசியல் கருத்துக்கள் சினிமாவில் வரவிடாமல் தடுக்க ஆரம்பித்தார்கள்.

திரைப்படங்களில் சித்தரிக்கக்கூடாத காட்சிகளைத் தணிக்கை விதிகள் விளக்கி யிருந்தன. அரசியல், தொழிலாளி-முதலாளி போராட்டம், குறுநில மன்னர்களை நையாண்டி செய்தல், சமூகக் கலவரம் மூளக்கூடிய காட்சிகள் என்று 1918 சட்டம்தான் சினிமாத் தணிக்கைக்கு அடித்தளமாக அமைந்தது. அவ்வப் போது மாற்றங்களையும் புதிய பிரிவுகளையும் சேர்த்தபோதிலும் அதன் உரு மாறவில்லை.

ஒரு வெகுஜன கேளிக்கைச் சாதனமாக சினிமா வளர ஆரம்பித்தது. இந்தியாவில் படத்தயாரிப்பு தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டம் வலுப்பெற ஆரம்பித் திருந்தது. 1919ல் ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து, நாடெங்கும் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தது. எல்லா ஊடகங்களிலும் தங்களது கருத்துகளை தேசிய வாதிகள் பரப்ப முற்பட்டனர். அவற்றில் பத்திரிகை, நாடகம், கிராம·போன், சினிமா ஆகியவையும் அடங்கும். மக்களிடையே ஆதரவைத் திரட்ட இந்திய தேசியக் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. எழுத்தறிவு குறைந்த சமுதாயத்தில் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக திரைப்படம் விளங்க முடியும் என்பதையும் சுதந்திரப் போராட்டத்துக்கு இச்சாதனம் பயன்படுத்தப்படும் என்பதையும் பிரிட்டிஷ் அரசு உணர்ந்தது. சினிமா தணிக்கை எனும் கிடுக்கிப் பிடியை இறுக்கினார்கள். சென்னைத் திரையரங்குகளுக்குத் தணிக்கைக் குழு இன்ஸ்பெக்டர்கள் சென்று ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் உள்ளனவா எனச் சோதித்தனர். பல படங்கள் சின்னாபின்னப்படுத்தப்பட்டன. கோகினூர் பிலிம்சாரின் 'பக்த விதுரர்' (1921) பிரிட்டிஷாரின் கவனத்துக்கு வந்தது. இதன் கதை மகாபாரதத்தின் ஒரு பகுதி. இந்திய தேசப் படத்திலிருந்து பாரத மாதா வருவது போன்று இப்படத்தில் ஒரு காட்சி. விதுரருக்குப் பெயர் விதுர்ஜி. கதராடை அணிந்து காந்தி தொப்பியுடன் சர்க்காவில் நூற்பது காட்டப்பட்டது. சிறையில் விதுர்ஜி வாடுவதுபோல் ஒரு காட்சி. வரிகொடா இயக்கம் பற்றிய கருத்துகளும் படத்தில் காட்டப்பட்டன.

மதுரைக் கலெக்டருக்கு வந்தது கோபம். படத்தைத் தடை செய்தார். 'எழுத்தறிவற்ற கிராம மக்களின் மத்தியில், புராணக் கதைகள் மூலம் தேசியக் கருத்துக்களைப் பரப்புவது பிரிட்டிஷ் அரசுக்கு தீமை விளைவிக்கும்' எனத் தனது ஆணையில் குறிப்பிட்டார்.

இந்தியாவில் உருவாகும் கருத்துக்கள் மட்டுமின்றி, கடல்கடந்து வரும் கருத்துக் தாக்கம்கூட, எங்கே தங்கள் அரசை ஆடவைத்து விடுமோ என்ற கவலையும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இருந்தது. வெளிநாட்டிலிருந்து வரும் படங்களையும் துருவித் துருவிப் பார்த்த பிறகே திரையிட அனுமதித்தனர். அமெரிக்க சினிமாவின் பிதாமகர் எனப்படும் டி.டபிள்யு. கிரிபித் 1922ம் ஆண்டு தயாரித்த 'Orphans of the Storm' (புயலின் அனாதைகள்) என்ற படம் தடை செய்யப்பட்டது. பாஸ்டைல் சிறை தகர்ப்பு, கில்லட்டின் சிரச்சேதம் ஆகிய பிரெஞ்சுப் புரட்சியைச் சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் தடை செய்யப்பட்டது.

1925ல் ஐசன்ஸ்டீன் படைப்புகளுடன் சினிமா உலகப் பிரவேசம் செய்தது ரஷியா. உடனே பிரிட்டிஷ் அரசு அஞ்சியது. 'ரஷியாவிலிருந்து வரும் பிரசாரப் படங்களைப் பற்றி அதிகவனமாக இருக்க வேண்டும்' என்று சினிமாத் தணிக்கை வாரியத்துக்கு பிரிட்டிஷ் அரசு தாக்கீது அனுப்பியது. 'Batteship Potemkin' (போர்க் கப்பல் போடம்கின், 1925) என்ற ரஷியப்படம் வெளியானது. இப்படம் ஒரு திரைக்காவியம் என்று உலகம் முழுவதும் போற்றப்பட்டது. 'போல்ஷ்விக் புரட்சியை ஆதரிக்கும் இப்படம் ஒரு புரட்சிப்படம் என்று நன்றாகவே தெரிகிறது' என்று எழுதி மும்பை போலீஸ் கமிஷனர் முதலில் தடை செய்தார். பின் நாடெங்கும் தடை செய்யப்பட்டது. (இந்தத் தடை சுதந்திரத் துக்குப் பின்தான் நீக்கப்பட்டது) இதே போன்று 'Ivan the Terrible' என்ற ஐசன்ஸ்டீனின் படைப்பும் தடை செய்யப்பட்டது.

1931ல் தொடங்கப்பட்ட சட்ட மறுப்பு இயக்கம் அரசியல் கொந்தளிப்பை உருவாக்கியது. தணிக்கைகளை பிரிட்டிஷ் அரசு மேலும் இறுக்கியது. இந்திய சினிமாப் படைப்பாளிகளும் சளைக்கவில்லை.

தணிக்கையாளர்களின் கண்ணிலிருந்து காட்சிகள் தப்பப் பல உத்திகளைக் கையாண்டனர். ஊடகங்களைக் கட்டுப்படுத்த போலீசார், ரெவன்யூ அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

ஆர்.எஸ்.டி. செளத்ரி இயக்கிய Wrath (உக்கிரம், 1931) என்ற மெளனப்படம் சேலத்தில் திரையிடப்பட்டது. அதில் காந்திஜியைப் போன்றே உடை உடுத்தி, கைத்தடியுடன் அஹிம்சை, தீண்டாமை ஒழிப்பு பற்றிப் பிரசாரம் செய்யும் ஒரு பாத்திரம். மாவட்ட மாஜிஸ்திரேட் படத்தைத் தடை செய்தார்.

முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே உருவாகும் போராட்டத்தைத் சித்தரித்த 'Mill' (ஆலை, 1934) படம் இதே கதிக்கு உள்ளானது. முதலில் டேராடூனில் தடை செய்யப்பட்டு, பின் நாடெங்கும் அந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

சில சமயம், படம் உருவாகும் முன்னரே அதைப் படமாக்குவது தடை செய்யப்பட்டது. 'காங்கிரஸ் பெண்' என்ற படத்தை நேஷனல் தியேட்டர் காங்கிரஸ் தயாரிக்க முற்பட்டது. சர்க்காவில் நூல் நூற்று தன் குடும்பத்தைக் காப்பாற்றும் பெண் பற்றிய கதை. தணிக்கை வாரியம் கதையைப் படித்தது. இதைப் படமாகத் தயாரித்தால் திரையிட விடமாட்டோம் என்று தணிக்கை அதிகாரிகள் கூறிவிட்டனர். திட்டம் கைவிடப்பட்டது. முழுவதுமாகத் தயாரிக்கப் பட்ட 'மிஸ் சுகுணா' (1937) எனும் தமிழ்ப் படத்தையும், 'Search Light' (1937) எனும் ஹிந்திப் படத்தையும் வெளியிடவே அனுமதி கிடைக்கவில்லை.

சென்னை ராஜதானியில் 1937ல் நடந்த பொதுத் தேர்வில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1939வரை பதவியில் இருந்தது. அந்த இரண்டு ஆண்டுகள் சினிமாத் தணிக்கை முறை தள்ளி வைக்கப்பட்டது.

படைப்பாளிகளுக்கு மூச்சுவிட சமயம் கிடைத்தது போலிருந்தது. இந்தக் காலத்தில்தான் 'தியாக பூமி', 'மாத்ருபூமி', 'ஆனந்த ஆஸ்ரமம்' முதலிய நாட்டுப்பற்றைப் போற்றும் தமிழ்ப்படங்கள் வெளிவந்தன.

இப்படங்களில் தேசியக் கருத்துக்கள் இடம் பெற்றாலும் தணிக்கை இல்லாததால் தடை இல்லை.1939 செப்டம்பரில் ராஜாஜி அமைச்சரவை ராஜிநாமா செய்தது. 1940ல் இரண்டாவது முறையாக தியாக பூமி திரையிடப் படும் போதுதான் தடை விதிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் கச்சா பிலிம் தட்டுப்பாடு காரணமாக படங்கள் வருவது வெகுவாகக் குறைந்தது. போரை ஆதரித்துப் படம் எடுத்தால் கச்சா பிலிம் தரப்படும் என அரசு அறிவித்தது. 'பர்மா ராணி'யை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. 'கண்ணம்மா என் காதலி'யும் (1941) இத்தகைய ஒரு படமே.

கே. சுப்ரமணியம் எடுத்த 'மானசம்ரஷணம்' (1944) ஒரு யுத்த ஆதரிப்புப் படமாகவே எடுக்கப்பட்டது. தனது நாட்டுப் படங்களை வெளியிட மட்டுமே ஆங்கிலேயே அரசு ஆதரவு அளித்தது. பல்வேறு நாட்டுப் படங்கள் இங்கே திரையிடப்படவில்லை. தணிக்கைக்குப் பயந்து அரசியல்-சமுதாய பிரச்சனைகளை விடுத்தது. செறிவில்லாத படங்களையே பட முதலாளிகளும் இயக்குநர்களும் எடுக்க ஆரம்பித்தனர். ஆரம்ப ஆண்டுகளில் கடுமையான தணிக்கைக்கு இந்திய சினிமா உட்பட்டதால் வளர்ச்சி குன்றியதாக மாறியது.

தமிழ் சினிமா பெரும்பாலும் ஜனரஞ்சக கேளிக்கைக் சாதனமாகவே வளர்ந்ததற்கு ஆரம்பகாலத்தில் அதன் மீது திணிக்கப்பட்ட தணிக்கை முறையே காரணம்.

தியடோர் பாஸ்கரன்

© TamilOnline.com