கீதாபென்னெட் பக்கம்
லாஸ் ஏஞ்சலஸில் வசிப்பதில் எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது என்று முழு மனதுடன் சொல்கிறேன்.

காரணம் - கடந்த ஜுன் மாதத்தில் மட்டும் இங்கே மூன்று வார இறுதிகளில் வரிசையாக கர்னாடக இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன. இதில் என்ன விசேஷம் என்றால் அந்த மூன்று கச்சேரிகளும் டீன் வயதுகளில் இருக்கும் அமெரிக்க தேஸி இளம் குருத்துக்களால் வழங்கப்பட்டவை. இது என்ன பெரிய விஷயம் என்று சாதாரணமாக கேட்டு விட வேண்டாம். நிச்சயமாக பெருமை அளிக்கக் கூடிய பெரிய விஷயம் தான்.

இந்த இளசுகள் வாரத்தில் ஐந்து நாட்களும் காலை ஏழு மணி சுமாருக்கு வாசலில் பஸ்ஸில் ஏறி அமர்ந்தால் வீடு திரும்பும் மதியம் மூன்று மணி வரை பள்ளியில் வேறொரு உலகத்தில் தான் இருக்கிறார்கள். அமெரிக்க சினேகிதங்கள், கலாசாரம், சரித்திரம் என்று நிறையவே குறிப்பிடலாம். ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு தான் எத்தனை விதமான மற்ற நடவடிக்கைகள்-அதாவது extracarricular activities? சரி- கர்னாடக சங்கீதம் கற்க உள்ளூரில் இருப்பவரிடம் போகலாம் என்றால், சென்னையில் மாதிரி வாரத்தில் ஐந்து நாட்களுக்கா போக முடியும்? ஸ்கூட்டர், பஸ் அல்லது ஆட்டோ பிடித்து தானாக பாட்டுக் கிளாஸ¤க்குப் போகும் பசங்களை அங்கே பார்த்திருக்கிறேன். ஆனால் அமெரிக்காவில் அம்மா அல்லது அப்பா தானே தங்களுடைய வேலைகளையும் முடித்து கொண்டு குழந்தைகளுக்காக சாரத்தியமும் பண்ண வேண்டியிருக்கிறது? அதுவும் வாரத்தில் ஒரே ஒரு நாள் தான்.

ரேடியோவில், கச்சேரிகளில் என்று எப்போது வேண்டுமானாலும் தனக்குப் பிடித்த கலைஞர்கள் அல்லது தங்கள் ஆசிரியரின் இசையை அடிக்கடி கேட்கும் வாய்ப்புகளும் இங்கு வளரும் குழந்தைகளுக்கு இல்லை. காம்பாக்ட் டிஸ்குகள் உதவலாம். அத்தோடு இது ஒரு வகுப்பு மட்டும் தானா? பரதநாட்டியம், ஸ்போர்ட்ஸ், இதெல்லாம் வேறு. நடுவில் ஹேரி பார்ட்டர் புது புத்தகம் ஒன்று தலையணை அளவில் புதியதாக வெளி வந்தால் போட்டிப் போட்டுக் கொண்டு அதை இரவு முழுதும் விழித்தாவது படித்து முடிக்க வேண்டாமா? சினேகிதர்களின் பிறந்த நாள் பார்ட்டிகளுக்குப் போக வேண்டாமா? இது எல்லாவற்றிற்கும் நடுவில் தான் இசைப் பயிற்சியும்.

சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு வந்திருந்த ஒரு வித்துவான் இப்படி வாரத்திற்கு ஒரு முறை போய் கற்றுக் கொள்ளுகிற சிறுமியிடம், 'உனக்கு காம்போதியில் எத்தனை, தோடியில் எத்தனை, கல்யாணியில், சஹானாவில், தர்பாரில், கரகரப்ரியாவில், தேவகாந்தாரியில் எத்தனை கிருதிகள் பாடம்?' என்று கேட்டாராம்.

ஒன்றொன்று தான் என்று அந்த பெண் சொல்லிய போது 'ம்....அதெல்லாம் போறவே போறாது. ஒவ்வொரு ராகத்திலும் குறைந்தது ஐந்தாவது பாடம் பண்ண வேண்டும்.." என்று புத்திமதி சொன்னார். இதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். என் தந்தை டாக்டர் எஸ் இராமனாதன் அவர்களுடன் பிறந்ததிலிருந்து கூடவே இருக்கிற பாக்கியம் என் உடன் பிறந்தவர்களுக்கும், எனக்கும் கிடைத்தது. அதனால் எங்கள் எல்லோருக்குமே பாடாந்திரம் என்றால் கணக்கு வழக்கு கிடையாது. அது மாதிரியே இன்று பிரபலமாக இருக்கிற அப்பாவின் மாணவ மாணவிகளும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடைய வகுப்பில் தான் இருப்பார்கள். அந்த மாதிரியான சூழ்நிலை இங்கே இருக்கும் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லையே!

நான் இவர்களைக் குழந்தைகள் என்று குறிப்பிட காரணம் இன்று பதினாறு, பதினேழு வயதில் கச்சேரி பண்ணும் அளவுக்கு இவர்கள் கற்றிருக்கிறார்கள் என்றால் - இது மெதுவாக நடக்கிற காரியம் தான் - அதாவது a slow process. குழந்தைப் பருவத்திலிருந்து கற்றால் தான் முடியும். அதனால் ஒவ்வொரு ராகத்திலும் பல கிருதிகள் பாடம் பண்ணுவது இங்கே நடைமுறையில் கடினம்.

சில குழந்தைகள் ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் இந்தியா சென்று மிகவும் உன்னிப்பாக அதாவது focused ஆக ஒரு ஆசிரியரிடம் கற்றுக் கொண்டு வருவதும் உண்டு. அல்லது சில பெற்றோர் ஆசிரியர்களை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரவழைத்து தங்கள் வீட்டில் வைத்துக் கொண்டு கற்று கொடுக்க ஏற்பாடு செய்வதும் உண்டு. ஆனால் நம் இசையில் 'பாடாந்திரம்' என்று இருக்கிறதே அது மாறினால் குளறுபடியாக வாய்ப்பு இருக்கிறது.

இதையெல்லாம் மீறி அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் அமெரிக்க டீன்கள் (ஆமாம்... இந்திய பெற்றோராக இருந்தாலும் இவர்கள் அமெரிக்கர்கள் தானே?) கச்சேரிகள் செய்யும் அளவுக்குத் பயிற்சி பெற்று வருவது நாமெல்லாம் மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம் தான்!!!

© TamilOnline.com