கலாயோகி ஆனந்த குமாரசாமி
இந்தியக் கலை வரலாறு, கீழைத்தேச கலை வரலாறு பற்றிய படிப்பில் ஆய்வில் டாக்டர் கலாயோகி ஆனந்தக்குமாரசாமியின் பெயர், ஆளுமை இடம் பெறுவது தவிர்க்க முடியாதாயிற்று. அந்தளவிற்கு அவரது கலை பற்றிய சிந்தனைகள், கலைக்கோட்பாடுகள், கலை ஆய்வுகள் மேலைத்தேச கீழைத்தேச ரீதியிலான கலைப் பற்றிய ஒப்பீட்டுப் பார்வைகள் என விரிவுறும் புலமைத் தாக்கம் ஆழமானது அகலமானது. கீழைத்தேச கலையியல் வரலாற்று மூலங்களின் தனித்தன்மையை உலகளாவிய நோக்கில் எடுத்துப் பேசியவர் ஆனந்தக்குமாரசாமி.

குமாரசாமி எழுதிய நூல்கள் கட்டுரைகள் யாவும் கீழைத்தேசப் பண்பாட்டை புரிந்து கொள்ளவும், இந்திய கலை கலாசார ஆன்மீக தத்துவப் பெறுமானங்களின் உயிர்ப்பை அனைவரும் தெரிந்து கொள்ளவும் அறிவுக் கருவூலமாகவே இயங்கி 9.9.1947-ல் இயற்கை எய்தினார் ஆனந்தக்குமாரசாமி.

இலங்கையில் வடபகுதி யாழ்ப்பாணத்தில் பூர்வீகமான வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்தக்குமாரசாமி. இவரது தந்தையார் முத்துகுமாரசாமி இலண்டனில் பாரிஸ்டர் ஆனவர். ஆசிய கண்டத்தைச் சேர்ந்த முதலாவது பாரிஸ்டர் என்ற பெருமைக்கு உரியவர். இவர் தமிழ், சிங்களம், பாலி, லத்தீன்,கிரேக்கம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேறியவர்.

பிரிட்டிஷ் இராணி குடும்பத்துடன் நெருங்கிப் பழகி வந்தவர். 1874இல் விக்டோரியா மகாராணியாரால் அவருக்கு 'சர்' பட்டம் அளிக்கப்பட்டது. முத்துக்குமாராசாமி இந்திய இலக்கியத்தை மேலைநாட்டு உலகம் அறிந்து கொள்ள உதவியுள்ளார். மேலும் இந்திய பெளத்தத் தத்துவங்கள் பற்றி பல நூல்களையும் எழுதியுள்ளார்.

முத்துக்குமாரசாமி இங்கிலாந்தில் தங்கியிருந்த போது எலிசபெத் கிளே பீபி என்பவரை 1875இல் திருமணம் செய்து கொண்டார். மனைவியுடன் இலங்கை திரும்பி கொழும்பில் வசித்து வந்தார்.

22.8.1877இல் ஆனந்தக்குமாராசாமி பிறந்தார். எலிசபெத் இங்கிலாந்தின் கென்ட் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மனைவியை நினைவூட்டும் வகையில் பிள்ளைக்கு ஆனந்தகென்டிஷ் குமாராசமி என்ற பெயரை முத்துக்குமாரசாமி சூட்டினார்.

மீண்டும் லண்டனுக்கு பயணமாகும் நோக்கில், சர். முத்துக்குமாரசாமி மனைவியையும் பிள்ளையையும் முதலில் இலண்டனுக்கு அனுப்பிவிட்டு, பின்னர் அவர் பயணமாக இருந்தார். பயண நாளான 4.5.1879இல் எதிர்பாரதபடி முத்துக்குமாரசாமி கொழும்புவில் காலமானார். இவர் இங்கிலாந்தின் உயர் சமூக அரசியல் வட்டாரங்களில் உலவி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர். முத்துக்குமாரசாமியின் மறைவுக்கு முன்னர் மனைவியும் பிள்ளையும் இலண்டன் சென்றவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர். ஆனந்தக்குமாரசாமியின் பிள்ளைப்பருவம், இளமைப்பருவம் ஆங்கிலச்சூழலில் அமைந்தது. வைக்ளிப் கல்லூரியில் சேர்க்கப்பட்டு லண்டன் பல்கலைக்கழக இன்டர்மீடியேட் வகுப்பு முடியும் வரை (1894) அங்கேயே கல்வி பயின்றார். இதற்கிடையில் 1895-1897 விடுமுறைக் காலத்தில் இலங்கை சென்று திரும்பினார். 1895இல் வைக்ளிப் விண்மீண் (Wycliffe Star) என்ற பள்ளிக்கூட இதழில் 'டோவ்ரோ குன்றின் நிலவளம்' (Geology of Dovet Hill) என்ற அவருடைய முதல் கட்டுரை வெளியானது.

லண்டன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் நிலவியல் பாடங்கள் படித்து பிஎஸ்சி பட்டம் பெற்றார் (1900). 1906ஆம் ஆண்டு வெளிமாணவராக லண்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஆப் சயன்ஸ் பட்டம் பெற்றார். இலங்கை நிலவள விளக்கங்கள் என்பது அவருடைய ஆராய்சியாகும். (1902-1905)

இங்கிலாந்தில் வளர்ந்த சூழலால் ஆங்கிலப் புலமை, தாய்மொழிப் புலமையாகவே அவருக்கு இருந்தது. விஞ்ஞானத்தில் மட்டுமன்றி கிறிஸ்தவ சமயம் பற்றியும் துறைபோகக் கற்றுக் கொண்டார். கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார்.

ஆனந்தக்குமாரசாமி இலங்கை அடைந்து 1903 முதல் 1906வரை கனியங்கள் சர்வேயின் இயக்குநராகப் பணிபுரிந்தார். தாம் ஏற்றுக் கொண்ட வேலையின் காரணமாக இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வந்தார். கனியங்கள் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். 'தோரியனைட்' என்ற கனியத்தை கண்டுபிடித்தார்.

இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தவராயினும் வெகுசீக்கிரத்தில் இலங்கைச் சமூக அரசியல் பொருளாதார நிலைமைகளைப் புரிந்து கொண்டார். ஒரு நூற்றாண்டு காலம் குடியேற்ற நாடாய் மாறிய இலங்கை பழமையைப் புறக்கணித்து உடையிலும் நடையிலும்- உள்ளத்திலும்கூட ஆங்கிலமயமாகிக் கொண்டு வருவதை அவரால் பொறுக்க முடியவில்லை.

''பல கிழக்கு நாடுகள் தங்களுடைய தனித்தன்மையையும் அத்துடன் மனிதவளர்ச்சிக்கு இன்றியமையாத சொந்தக் கருத்துகளின் ஆளுமையையும் இழந்து வருகின்றனர்'' என்ற கருத்து அவருக்கு இருந்தது. இதனால் இலங்கைச் சமூகச் சீர்த்திருத்தக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.

இந்த அமைப்பின் நோக்கமும் செயற்பாடும் ஆனந்தக்குமாரசாமியிடம் வெளிப்பட்ட சிந்தனைத் தேடலின் தேட்டமாகவும் அமைந்து இருந்தது. கீழைத்தேய மரபுகளின் செழுமைப் பாங்கு கலைச் செல்வங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அவா அவரிடம் பீறிட்டு வந்தது.

குமாரசாமி விஞ்ஞான நோக்கமும் மனோபாவமும் கொண்டு ஆற்றுப்படுத்தப்பட்ட ஆளுமையாக வளர்ந்தாலும் கலை பண்பாடு நாகரிகம் பற்றிய துறைகள்பால் அதிக நாட்டம் கொண்டவராகவே வளர்ந்து வந்தார். 1906இல் இலங்கையை விட்டு இந்தியா வழியாக தனது மனைவியுடன் சென்றார். அப்போது இந்தியாவில் தனது சுற்றுப் பிராயணத்தை மேற்கொண்டார். இந்திய கலை கலாசாரத்தின் செரிமாணம் ததும்ப தனக்குள் உள்முகத் தேடலில் ஈடுபடத் தொடங்கினார். கீழைத்தேச மரபுகளின் தனித்தன்மையின் வசீகரத்தை ஆழமாகவே புரிந்து கொண்டார். கலை, வரலாறு எழுதுவதற்கான மூலங்கள் தேடிய களப் பணியாளராகவும் மாறினார்.

கலை பற்றி அறிவிலும் தரத்திலும் பெரியதாகிய ''இடைக்காலச் சிங்களக்கலை'' என்ற அவருடைய நூல் 1908ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூல் அவருடைய முதலாவது கலை வரலாற்று நூலாகும்.

1908ஆம் ஆண்டில் கோப்பன்ஹேகனில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கீழைநாட்டுக் காங்கிரஸின் பதினைந்தாவது கூட்டத்தில் 'இந்தியக் கலை மீது கிரேக்கத்தின் தாக்கம்'' என்ற ஆனந்தக்குமாரசாமியின் உரை குறிப்பிடத்தக்கது ஆகும். வின்சென்ட் ஸ்மித் போன்ற அறிஞர் ஓயாது அறியாமையால் சொல்லி வந்த பொய்யுரைக்கு மறுப்பாக இந்த உரை அமைந்திருந்தது.

''கிரேக்க - இந்தியக் கலைகளுக்கு தத்துவங்களுக்கும் நடுவில் இரு துருவங்களின் இடைவெளியுள்ளது. கிரேக்கக் கடவுளர்களின் உருவங்கள் கிரேக்க சமயத்தின் ஒலிம்பிக் கண்ணோட்டத்தில் அமைந்தவை. அதற்கு மாறாக இந்தியக் கலை காலம், வெளி அனைத்தையும் கடந்து நிற்பது. மாசற்ற மனிதனை அது சுட்டுவதன்று. காண முடியாத தெய்வீகத்தின் - முடிவற்ற அந்தமிலா ஒரு பொருளின் குறியீடாகும் அது. முதற்தோற்றத்துக்கு முதலிடம் கொடுப்பதென்றால் தெற்குத் திராவிடக் கலையோ, அன்றி பேரோதூர் (Botobodut) பெளத்தக் கலையோகூட தோற்றத்திலும் அமைப்பிலும் கிரேக்க நாட்டுக் கலையினின்றும் மாறுபட்டிருப்பது போன்று வேறு எந்நாட்டுக் கலையும் இல்லை'' இவ்வாறு இந்தியக் கலையின் தனித்தன்மையை புலப்படுத்தும் வகையில் அவரது சிந்தனையும் ஆராய்ச்சியும் புலப்படலாயிற்று. இந்தியாவில் தங்கியிருந்துகலை வரலாற்று மூலங்களை அறிவுபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் நுட்பமாகவே ஆழ்ந்து அலசி வந்தார். 1908முதல் 1917 வரை இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் பயணங்கள் மேற்கொண்டு இந்தியக்கலை ஞான மரபின் உயிர்ப்பின் ஆற்றலை நுட்பங்களை நுணுக்கமாகவே கற்று வந்தார்.

இமயமலைச்சாரல் பகுதிகளுக்குச் சென்று பல ஓவியங்களைத் திரட்டினார். இராஜபுத்திர ஓவியம் பற்றிய அவருடைய நூல் அத்துறைக்கு முதல் வழிகாட்டி. இத்துறையில் குமாரசாமியின் அடிச்சுவட்டைப் பின்பற்றித்தான் பின்வந்த ஆசிரியர்கள் ஆய்வாளர்கள் சென்றார்கள்.

இராஜபுத்திர ஓவியம் பற்றிய படிப்பைத் தொடக்கி வைத்தவர் டாக்டர் ஆனந்தக்குமாரசாமி. இராஜபுத்திர - மெகலாய ஓவியங்கள் இரண்டிற்குமுள்ள வேறுபாடுகளைப் பகுத்தறிந்து இராஜஸ்தானி, பகாடி என்ற கிளைகளாக மேலும் பிரித்தவர் அவரே. பகாடி ஓவியத்தை இன்னும் இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தியவரும் குமாரசாமியே ஆவார். காலத்தால் முந்தியதை ஜம்முவுக்கு உரியதென்றும் பிந்தியதை காங்க்டாவுக்கு உரியதென்றும் அவர் வகைப்படுத்தினார். குமாரசாமியின் இராஜபுத்திர ஓவியம் வேறு தோற்றத்தையும் புதிய பார்வையையும் பெற்றன. பரந்த வைப்புப் புதையலின் ஒரு கோடியைக் குமாரசாமி கிளறினார். அவரைப் பின்பற்றி புதிய ஓவியங்களைக் கண்டுபிடித்தவர் பலர். இந்திய ஓவியங்கள் பற்றிய ஆய்வில் புதிய பாதையொன்றை வகுத்துக் கொடுத்த டாக்டர் குமாரசாமிக்கு அவருக்குப் பின்வந்த ஆராயச்சியாளர் கடமைப்பட்டவர்'' என்று ஆய்வாளர்கள் கனித்து வைத்திருப்பது ஆனந்தக்குமாரசாமியின் புலமைக்கும் ஆய்வுக்கும் கிடைத்த மரியாதை என்றே கூறலாம்.

மேலைத்தேச கண்ணோட்டத்தில் இந்தியக் கலை மரபை நோக்கி வந்த ஆய்வாளர்களின் கருத்தை மறுத்து புலமை நோக்கில் இந்தியக் கலையின் தனித்தன்மைச் சிறப்புகளை விரிவாகவே விளக்கி உள்ளார். மேலும் புத்தர் உருவம் பற்றியும் பெளத்தம் பற்றியும் தெளிவாகப் புரிந்து கொள்ள இவரது நூல்கள் பெரிதும் உதவின.

ஆனந்தக்குமாரசாமியின் நூல்களும் கட்டுரைகளும் உலகளவில் அவருக்கு தனியான மதிப்பையும் கெளரவத்தையும் வழங்கி வந்தன. அத்துடன் கலை வரலாறு பற்றிய சிந்தனையிலும் சிரத்தையிலும் அவரது பெயர் தவிர்க்கமுடியாதாயிற்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாக 1918இல் 'சிவ நடனம்' (Dance of Shiva) என்ற கட்டுரைகள் அடங்கிய நூல் மேலும் அவருக்கு சிறப்பைப் பெற்றுக் கொடுத்தது.

சிவநடனம் உலக இலக்கியப் பரப்பில் தமிழ் இலக்கியச்செழுமையின் ஆழத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. நடராஜ உருவம் பற்றிய கட்டுரை தத்துவார்த்தமாகவும் சமயச்சார்புடனும் அமைந்தது. அத்துடன் அவ்வுருவத்தை கலைக்கண்ணோடும் அவர் பார்த்தார்.

நடராஜர் உருவம் என்ற கட்டுரை மேலும் பல நூல்களை எழுதுவதற்கு பலருக்கு தூண்டுதலாக இருந்தது. ஆடும் கூத்தன் குறித்துத்தமிழ்த் திருமுறைகளிலிருந்தும் சைவசித்தாந்த சாஸ்திரங்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டிப் பிற மொழி நூல்களோடு ஒப்புநோக்கி ஆனந்தக்குமாரசாமி தீட்டிய 'சிவ நடனம்' பலநிலைகளில் சிறப்புப் பெறுகிறது. அவற்றின் சிவபெருமான் ஆடல்களும் அவற்றின் தத்துவார்த்தப் பொருளும் பேசப்படுகிறது. நடராஜர் உருவத்தின் கலை உயர்வு உணர்த்தப்படுகிறது. உலகக் கலைஞர்களுக்கு வரலாற்று ஆசிரியர்களுக்கு இக்கட்டுரை வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.

1917ஆம் ஆண்டிலிருந்து குமாரசாமி அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்து வந்தார். அங்கு போஸ்டன் அருங்காட்சியகத்தின் காப்பாளராகப் பணி புரிந்தார். அருங்காட்சியகத்துக்கு கலைப்பொருட்கள் சேகரித்து வாங்குவதற்காக 1920களில் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 1927இல் ''இந்திய இந்தோனேஷியக் கலைவரலாறு'' என்ற நூல் வெளிவந்தது.

ஆனந்தக்குமாரசாமியின் ஆழ்ந்த் அகன்ற எழுத்துப் படைப்புகள் அறிஞர்களிடையே பலதரப்பட்ட கருத்துகளைத் தோற்றுவித்தன. அவை வாதங்களுக்கு இடம் கொடுப்பதாக அமைந்தன. ஆயினும் கலையில் இயற்கையின் மறுபதிப்பு போன்ற நூல்கள் வாதத்துக்குப் புறம்பான அறிவு செறிந்த நூல்களாக விளங்கின.

கீழைத்தேச, மேலைத்தேச சாஸ்தீரிய மரபுகளை ஆழமான அவரது மொழிப் புலமையினால் தெளிவான விளக்கத்தோடு வெளிக் கொணர்ந்தார். மேற்குலக மதவியல் தத்துவவியல்சார்ந்த சிந்தனைகள், சங்கரது நூல்கள், பகவத்கீதை,உபநிடதம், பெளத்த சீன இலக்கியங்களிலிருந்தும், தென்னாசிய மதங்களிலிருந்தும் மிகவும் ஆழமான தெளிவான விளக்கங்களை மேற்கோள்காட்டி விளக்கும் பாணி குமாரசாமிக்கே உரிய தனித்துவமான ஆளுமையைக் காட்டுகின்றது.

''மனித இனத்தின் நன்மைக்கு இந்தியா செய்த தொண்டு'' என்ற கட்டுரை சமூகவியல் நோக்கில் இந்திய மரபு உலக நாகரீகத்துக்கு அளித்த பங்களிப்பைப் பற்றியதாக அமைகின்றது. எந்த ஒரு இனத்தின் அனுபவத்திலும் அதற்கே சொந்தமான தனிச்சிறப்பு ஒன்று உண்டெனக்கூறிவிட முடியாது. மனிதன் எங்கும் மனிதன்தான். ஆனால் ஒவ்வோர் இனமும் தனது ஆன்ம விசாலத்தினையும் ஆன்ம அனுபவத்தினையும் வெளிப்படுத்தும் நோக்கில் உலக நாகரிகத்துக்கு ஏதோ ஒரு வகையில் பங்காற்றுகிறது. அந்தவகையில் இந்தியா இந்தியத் தன்மை என்ற பண்பை வழங்கி உள்ளது.

இந்தியா உலகிற்கு அளிக்கக்கூடியதெல்லாம் அதன் தத்துவ ஞானத்திலிருந்து வெளிப்படுகிறது. இத்தகைய தத்துவஞானத்தின் அடிப்படைகள் ஏனைய கலாசாரங்களில் இல்லை எனறு கூறமுடியாவிட்டாலும் இந்தியா தனது ஆழமான தத்துவஞானக் கருத்துகளை சமூக இயலுக்கும் கல்வி முறைமைக்கும் மிக முக்கிய அடித்தளமாகக் கொண்டுள்ளது என்ற வகையில் அவரது கருத்து அமையும். இதையே அக்கட்டுரை, ஆழமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்துகிறது. ஆக குமாரசாமியின் கருத்து இந்திய தத்துவவியலையும் சமூகவியல் நடைமுறைச் சிறப்பம்சங்களையும் விளக்குவதாக அமைகின்றது.

குமாரசாமி எழுதிய பல்வேறு கட்டுரைகளும் ஆய்வுகளும் இந்தியவியலின் பல்வேறு சிறப்புகளை தனித்தன்மைகளை கலையியல், தத்துவியல், மதவியல் சார்ந்த மரபுகளின் இணைப்புக்களின் ஊடாகவும் ஆத்மத் தரிசனமாகவும் முன்வைக்கின்றார். இதன் ஒரு வளர்ச்சிப் படியாகவே இந்திய அழகியல் வரலாற்றினை இலக்கியச் சான்றுகளினூடாக ''இந்துக்களின் கலைக் கோட்பாடு'' என்ற கட்டுரையில் ஆய்வு செய்கின்றார். ஒருவிதத்தில் குமாரசாமியிடம் நவீனத்துவ ஐரோப்பிய சிந்தனை மரபில் இழையோடி வந்த மதநீக்கம் செய்யப்பட்ட சிந்தனையோட்டம் செல்வாக்குச் செலுத்தவில்லை. மாறாக இந்திய சிந்தனை மரபை இந்துச் சிந்தனை மரபாக ஒற்றைத் தன்மையில் புரிந்து கொண்ட ஓர் முரண்நிலையும் குமாரசாமியிடம் செல்வாக்குச் செலுத்தி உள்ளது.

இயற்கையின் அழகு அது ஏற்படுத்திய பரவசம், உணர்ச்சியூட்டல் யாவும் கலை அனுபவம் சார்ந்த தத்துவார்த்தத் தேடலுக்குள் உந்தித் தள்ளும் ஆனந்தக்குமாரசாமியின் கலை கலாசார செழுமையின் தடயங்கள் இந்திய மரபு சார்ந்த பின்புலத்தில் புதிய பரிமாணம் பெற்றது. கீழைத்தேச மரபுச் செல்வத்தை மேலைத் தேசத்தவர்கள் அதிசயித்து பரிந்து கொள்ளும் வகையில் ஆனந்தக்குமாரசாமியின் ஆய்வுகள் நூல்கள் கட்டுரைகள் யாவும் அமைந்துள்ளன.

மேலைநாட்டவர் கீழைநாட்டைப் புரிந்து கொள்ளவும், இந்தியர்கள் மேலைநாட்டுப் பண்பாட்டைப் புரிந்து கொள்ளவும், தங்களது பண்பாட்டை மேலும் உணர்ந்து கொள்ளவும் குமாரசாமி உதவினார். இதுவரை இந்தியக் கலை, வரலாறு எழுதியலில் ஆனந்தக்குமாரசாமியின் இடம் முக்கியமாகவே உள்ளது.

ஆனந்தக்குமாரசாமியின் நண்பரும் கவிஞரும் ஆன தாகூர் குமாரசாமி பற்றிக் குறப்பிடும் கருத்து இங்கு நினைவுகூரத்தக்கது.

''கலை விமர்சகர் என்றோ வரலாற்றாசிரியர் என்றோ மேதை என்றோகூட நாம் அவரை அழைத்தாலும் அவரைப் பற்றிய ஏதோ ஒன்று விடுபட்டுப் போய் விட்டதை உணர்வோம்; அவருடைய எழுத்தில் ஏதோ ஒன்று விடுபட்டு நிற்கும் கடைசிப் பரிசீலனையில் அது விளக்க முடியாததாக எஞ்சி நிற்கும். டாக்டர் குமாரசாமி நமது எல்லா விளக்கங்களையும் கடந்து விடுபவர். அவர் எப்போதும் வேறு ஒன்றாகவே இருப்பார்''.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com