ஆதவன் சிறுகதைகள்
ஒரு பயண அழைப்பு

பயணம் என்பது நாம் எல்லோரும் விரும்பும் ஒரு விஷயம். பயணம் போகாதவர்கள் இந்த அமெரிக்க மண்ணில் மிகவும் குறைவு. நாமெல்லோருமே ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து பயணம் மேற்கொண்டவர்கள் தானே.

இப்பொழுது உங்களை ஒரு புதுமாதிரி பயணம் மேற்கொள்ள அழைக்கப் போகிறேன். இந்தப் பயணத்திற்கு விமானம் ஏற வேண்டியதில்லை. பேருந்தோ, இரயிலோ பிடிக்கவேண்டிய தில்லை. நாம் போகப் போகும் இடம் நம் மனம் என்னும் மிகவும் விசாலமான பிரதேசம். எத்தனை சிக்கலான நிலப்பரப்பு அது! நம் எண்ணங்கள் எங்கும் தோன்றி வளர்ந்து நிறைந்த வண்ணம் இருக்கும் வளமையான பிரதேசம். நம்மைக் கூட்டிக் செல்பவர் மறைந்த எழுத்தாளர் ஆதவன்.

எல்லாக் கதாபாத்திரங்களையும் உள்ளிருந்து அணுகும் வழிமுறையைக் கையாள்பவர் ஆதவன். ஒரு மனிதனின் சுபாவங்களுக்கு மனோவியல் காரணங்களைத் தேடிப்பிடிப்பவர் அவர். அவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் கணநேர எண்ணங்களைக்கூட நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டே ஒரு பயண வழிகாட்டியைப் போல நம்மை அழைத்துச் செல்கிறார்.

இதற்கு இந்திரா பார்த்தசாரதி தொகுத்த 'ஆதவன் சிறுகதைகள்' என்ற தொகுப்புத்தான் நமக்கு இன்று சாட்சியாய்க் கிடைக்கும் ஒரே புத்தகம். ஆதவனின் மற்ற படைப்புகள் எதுவும் மறுபதிப்பு செய்யப்பெறாமல் மறந்துதான் போய் விட்டன, இதைத் தவிர எந்த ஒரு பொதுப்படையான விமர்சனமும் செய் வதற்குமுன் இந்தத் தொகுப்பிலிருந்து சில சிறுகதைகளை அறிமுகப்படுத்தி விட வேண்டும்.

'மூன்றாமவன்'

அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகளில் இரண்டாவதுக்கும் மூன்றாவதுக்கும் மிக அதிக வருட இடைவெளி இருந்தால், எப்படி செல்லமாக வளர்க்கப் பெறும் மூன்றாவது குழந்தை மூத்த குழந்தைகளின் நடத்தைக்கு எதிர்மறையாகவே இருக்க ஆசைப்படும், அதனால் விளையும் போட்டிகள், பெற்றோர்களின் தவறான புரிதல், வளர்ப்பு முறை என்று மனோவி யலாய்க் குழந்தை வளர்ப்பில் நிகழ்ந்துவிடும் தவறுகளைப் பற்றி பேசுகிறது இந்தக் கதை. 'மூன்றாமவன்' என்பது 'முக்கியத்துவம் பெறாத ஸ்தானம்' என்ற அர்த்தத்தில் தலைப்பாகி இருக்கிறது.

'கால்வலி'

கல்யாணம், குடும்பம் என்ற அமைப்புகளுக்கெல்லாம் எதிராக இருக்கும் ஓர் அறிவுஜீவி இளைஞனை அதே அறிவுஜீவித்தனம் கொண்டு அவற்றில் சிக்கவைக்கிறார் பெண்ணைப் பெற்ற ஒரு புரொ·பெசர். காதல், பால்மயக்கம் போன்ற உண்மையான உணர்வுகளுக்கு எல்லாம் அடுத்தக்கட்டம் கல்யாணம், குடும்பம் என்பன போன்ற அமைப்புகளில் நுழைவதுதானா என்று உரத்து யோசிக்கிறது இந்தக் கதை.

'ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்'

முதுமைப்பருவம் என்பதே தனிமையை அதிகரிக்கும் பருவம்தான். தன்னை மாற்றிக்கொள்ளும் சக்தியை மெல்ல மெல்ல இழந்து வாழ்வின் கடைசிக் கட்டத்தில் இருக்கையில் மாறிக்கொண்டே தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் உலகத்தோடு ஒட்டமுடிவதில்லை. விளைவு - தனிமை அதிகரிக்கிறது. மனைவியை இழந்து மகன்,மருமகள் மற்றும் பேத்தியுடன் வசிக்கும் ஒரு கிழவரின் மனப்பிர தேசத்துக்குள் நம்மைக் கூட்டிச் செல்கிறது இந்தக் கதை. அவர் தன் தனிமையை வெறுக்கிறாரா, விரும்புகிறாரா, புதிய உலகத்தின் மீது அவருக்கு இருக்கும் முறையீடுகள் என்ன என எல்லாவற்றையும் அலசுகிறது இது.

'நிழல்கள்', 'இறந்தவன்', 'சிவப்பாக, உயரமாக,மீசை வச்சுக்காமல்' - ஆண்,பெண் உறவு, அதில் நேரும் சிக்கல்கள், இதெல்லாம் காலம், காலமாய் எல்லா எழுத்தாளர்களும் அலசும் பரவலான கருதான்.

ஆதவனின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமாய் இருப்பதுதான் இந்தக் கதைகளைத் தனித்துக் காட்டுகிறது. மரபு என்ற பெயரில் 'தானை' ஒடுக்கும் கட்டுப்பாடுகளை இக்கதைகள் அடையாளம் காட்டுகின்றன. சமூக நெருக் கடிகளாலும் விளையாட்டுத் தனமாகவும் பிறக்கும் காதலை 'சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்' கதையில் அழகாகச் சித்தரிக்கிறார். காதலில் தொடுகைக்கும் அணைப்புக்கும் ஏங்கும் மனத்திற்கு சட்டென்று அவை எதிர்பாராமல் கிடைத்துவிடும் போது உற்சாகமளிப்பதற்குப் பதிலாகச் சில சமயம் அதிர்ச்சியை அளிப்பது "நிழல்கள்" கதையில் வெளிப்பட்டிருக்கிறது.

'முதலில் இரவு வரும்' - (இந்தக் கதையைத் தலைப்பாகக் கொண்ட சிறுகதைத் தொகுப்பிற்குத்தான் சாகித்திய அகாதெமி பரிசளித்து கெளரவித்தது.) கிழவியின் உடலுக்குள் இன்னும் குழந்தையாய் இருக்கும் அம்மாவைப் பார்த்து, முப்பதுகளில் இருக்கும் அவள் மகன், ஏதோ ஒரு தருணத்தில் - 'இதைத் தவறவிடக்கூடாது' என்ற உந்துதலுடன் அவளை அணைத்துக் குழந்தையாய் இளகுகிறான், வளர்ந்து முதிர்ந்த அவன் அப்பாவைப் போலல்லாமல். "முதலில் இரவு வரும், பின்பு சூரியனும் வரும். அதுதான் நாளை" என்று சொல்லிக் கொள்கிறான். நம்பிக்கையிழந்த வாழ்க்கையிலும் பற்றுக்கொம்பாய்க் கிடைப்பது நம்பிக்கையின்மையின் முடிவில் துளிர்க்கும் நம்பிக்கைதானே.

இந்த முன்னுரைகளிலிருந்தே இவரது சிறுகதைகளில் சிறுவயதிலிருந்து கிழவயதுவரை எல்லாரைப்பற்றியும் பேசுவது புரியும். இவர் காலத்து சமூகத்தினர்கள்தான் இவர்கள் என்றாலும் இன்று பெரிதும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று அவர் கதைகளை ஒதுக்க முடிவதில்லை. இன்றைய முதியவர்களும் தனிமையை உணரத்தான் செய்கிறார்கள். இன்றைய இளைஞர்களிலும் அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொண்டு எளிமையான வாழ்க்கை யனுபவங்களை மறுக்கிறார்கள். புதுமை என்ற பெயரில் வேற்றுக் கலாச்சார ஈர்ப்பில் சிக்கியவர்களும் இருக்கிறார்கள். காதலின் வெவ்வேறு நிலைகளை அனுபவிப்பவர்களும், திருமணம் போன்ற அமைப்பில் இருந்து கொண்டே வெறுப்பவர்களும் இன்றும் உண்டு. இன்றைய நவீன உலகில் இவை எதுவும் மறைந்து விடவில்லை.

இத்தொகுப்பை வாசிப்பது ஒரு பயணம் என்று முதலில் குறிப்பிட்டேன். சில சமயங்களில் நம் தனிமையிலிருந்தும் நம் மனப் பிரதேசத்தில் இருந்தும் ஓடவே நாம் முயல்கிறோம். அதை நமக்கு உணர்த்தி நம்மை நம்முள்ளேயே பயணிக்க வைக்கும் எழுத்து இந்த எழுத்து என்ற வகையில் இப்புத்தகம் படிக்கவேண்டிய ஒன்று.

ஆதவன் சிறுகதைகள்

ஆசிரியர் : ஆதவன்

பதிப்பாளர் : நேஷனல் புக் டிரஸ்ட் ஆ·ப் இந்தியா
ISBN : 81-237-0108-X

கிடைக்குமிடம் : நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை.
தொலைபேசி : 91 44 28232771.

மனுபாரதி

© TamilOnline.com