தம் உயிர் உகுப்பர்
சென்ற தவணையில் வையைநதிக் கரையில் பெண்களை உற்று நோக்கியவனை "ஓட்டைமனத்தன்! உரமிலி!" என்று பெண்களை வைவதைக்கண்டோம். பெண்களைச் சீண்டுவோரை என்ன செய்வதென்றும் வினவினோம். அதற்கு விடைகாண நாம் இராமனைக் காண்போம். அதற்கு நாம் கிட்கிந்தாக் காட்டிற்குச் செல்லவேண்டும்.

அங்கே சுக்கிரீவன், துந்துபியைத் தன் அண்ணன் வாலி கொன்ற நிகழ்ச்சியை இராமனுக்குச் சொல்லியபின் ஒரு சோலையில் அமர்ந்திருக்கும்போது இராமனைப் பார்த்து மெதுவாக "நாயகனே! உனக்கு நான் தெரிவிப்பது ஒன்று உண்டு!" என்று கூறினான். "இங்கே நாங்கள் ஒருநாள் கூடியிருக்கும் சமயம் இராவணன் ஒரு பெண்ணைக் கவர்ந்து செல்லும்பொழுது இந்த வழியைப் பார்த்துக்கொண்டே அந்தப் பெண் அரற்றினாள். அப்பொழுது தன் அணிகலன்களைக் கழற்றி ஒரு மூட்டையில் பொதித்து கீழே எறிந்தாள்; அருகில் இருக்கில் எங்களுக்குக் குறிப்புக் காட்ட எண்ணி அவ்வாறு செய்தாளோ என்னவோ அறியோம். நாங்கள் அதைக் கையில் ஏற்றுக் கொண்டோம்." என்று சொல்லி அந்த நகைகளை இராமனிடம் கொடுத்தான்.

இராமன் அவற்றை உற்று நோக்கினான். அவற்றைக் கண்ட அவன் நெருப்பில் இட்ட மெழுகுப் பொம்மைபோல் உருகினான் என்று சொல்வதா? இல்லை உயிருக்கு வலிமையாக அந்த நகைகளைக் கண்ணால் பருகினான் என்று சொல்வதா? சொல்ல என்ன இருக்கிறது! சீதையின் நெஞ்சுக் கொங்கையைச் சேர்ந்த நகை அவள் கொங்கை போன்றே இராமனுக்குத் தோன்றியது; இடையில் அணிந்த அணிகலன்கள் அவள் இடுப்பாகவே ஆயின.

"நங்கை கொங்கையைப்
புல்கிய பூணும் அக் கொங்கை போன்றன;
அல்குலின் அணிகளும் அல்குல் யின"
(கிட்கிந்தை: 198: கலன்காண் படலம்)
[புல்கிய = சேர்ந்த; பூண் = பூணும் நகை; அல்குல் = இடுப்பு]

அந்த நகைகள் சீதையைத் தேடி அவளைப் பற்றி ஒரு சுவடும் காணாது மயங்கி இராமன் விட்ட உணர்வை மீண்டும் அழைத்தனவோ! இல்லை அவன் உயிரை அழித்தன என்று சொல்வதா? மார்பிலே கொட்டிய சந்தனம்போல் குளிர்ந்தன என்று சொல்வதா? இல்லை சுட்டன என்று சொல்வதா? அப்படி மாறிமாறி இராமன் நிலையும் உணர்வும் வந்துபோயின.

"விட்டபேர் உணர்வினை விளித்த என்கோலோ!
அட்டன உயிரைஅவ் அணிகள் என்கொலோ!
கொட்டின சாந்துஎனக் குளிர்ந்த என்கொலோ!
சுட்டன என்கொலோ? யாது சொல்லுகேன்?!"
(கிட்கிந்தை: 199)
[விளி = அழை; அடு = அழி; சாந்து = சந்தனம்]

என்று கம்பனே முடிவுக்கு வரமுடியாதவாறு இருந்தது இராமன் நிலை!

இராமனின் கண்ணீர் பெருகியது. உடல் உரோமம் சிலிர்த்தது. உடம்பில் விடம் பரவியதுபோல் மூச்சு நீங்கித் தளர்ந்த இராமனைத் தன் குரங்குமேனியின் மயிர்கள் சுறுக்கென்று குத்த அனுமன் தாங்கினான்.

"உயிர்ப்பு நீங்கிய
தடம்பெரும் கண்ணனைத் தாங்கினான், தனது
உடம்பினில் செறிமயிர் சுறுக்கென்று ஏறவே"
(கிட்கிந்தை: 202)
[உயிர்ப்பு = மூச்சு; தடம் = மிக; செறி = நெருங்கு]

இராமன் நிலையைக் கண்ட சுக்கிரீவன் தானும் வருந்தி "இந்த அண்டத்தின் அப்பாலும் சென்று தேடி என் வலிமையைக் காட்டி உன் உயர்ந்த புகழுடைய தேவியைக் கொண்டு வந்து உதவுவேன்! ஏன் வருந்துகிறாய்?" என்றான். "திருமகள் போன்ற அந்தத் தெய்வக் கற்புடையவளை மிரட்டிய அந்தக் கொடியவன் தோள் இருபதும் தலைகளும் ஒருபுறம் இருக்கட்டும். உன் ஓர் அம்பிற்கு இந்த ஏழுலகமும் கூட ஈடு ஆகுமோ?" என்று தேற்றினான்.
அவ்வாறு சுக்கிரீவன் தன் வலிமையை எடுத்துரைப்பதைக் கேட்டுத் தன் இயலாமையை நினைந்து இன்னும் வருந்தினான்

இராமன்; வருந்தி அவன் சொன்னான்: "வழியில் செல்லும் பெண்களைத் தடுத்து வேறு யாரேனும் வன்முறை செய்தால் கடுமையான சண்டை செய்து தமக்குப் புண்பட்டாலும் உயிரையே இழப்பார்கள் உலகத்தார்; னால் நானோ என்னையே நம்பியிருந்தவளின் துயரத்தைத் தீர்க்க முடியாமல் இருக்கிறேன்!" என்று புலம்பினான்.

"ஆறுஉடன் செல்பவர் அம்சொல் மாதரை
வேறுஉளோர் விலக்கி வலிசெயின் வெஞ்சமத்து
ஊறுஉறத் தம்உயிர் உகுப்பர்; என்னையே
தேறினள் துயரம்யான் தீர்க்க கிற்றிலேன்!"
(கிட்கிந்தை: 214).

[ஆறு = வழி; சமம் = சண்டை; ஊறு = புண்; உகு=விடு;
தேறு = நம்பு; கிற்றிலேன் = முடியாதிருக்கிறேன்]

ஆம். பெண்களைச் சீண்டுவோரை அங்கேயே தாக்கித் தன் உயிர்போனாலும் சரி என்று போராட வேண்டும் என்கிறான் இராமன்! ஆனால் இன்றோ தமிழகத்தின் நகரங்களில் இரவில் மட்டுமன்றிப் பகலிலும் பலர் கூடியிருக்கும் இடங்களிலும் பெண்சீண்டல் (ஈவ் டீசிங்) வாடிக்கையாக இருப்பதைக் காண்கிறோம். பெண்சீண்டல், சீண்டுபவன் கோழை என்பதைக் காட்டுவது; ஆனால் அதை வேடிக்கை பார்க்கும் சமுதாயமும் ஆண்மைக்கடமையிலிருந்து தவறியதென்றே இராமன் புலம்பல் விளக்குகிறது. ஆகவே ஆண்மக்களை வளர்ப்பதில் பெற்றோரும் சட்டத்தைச் செலுத்துவதில் அரசும் ஆற்றும் கடமையை இதில் தெளிவாகக் காண்கிறோம். இராமன் கண்ணீர்விட்டுக் கதறிச் சொன்ன அறிவுரையைப் புறக்கணிக்காமல் தமிழர்கள் செயல்படுவோமாக.

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com