சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம் - விமரிசையான முத்தமிழ் விழா
ஆகஸ்ட் 3ம் நாள், ·ப்ரீமாண்ட் கோமஸ் பள்ளியின் அரங்கு நிரம்பி வழிய, சிறப்பாக முத்தமிழ் விழா கொண்டாடியது சான் ·ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம்.

மன்றத் தலைவர் சிவா சேஷப்பன் அவர்களின் வரவேற்புரையோடு துவங்கிய விழா, தீபா சுதர்ஷன் அவர்களின் பரதநாட்டியம், கருணாகரன் பழனிச்சாமி அவர்கள் குழுவினரின் ‘பெரியசாமி’ என்ற நகைச்சுவை நாடகம், ஸ்ரீதரன் மைனர் குழுவினரின் நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி, மற்றும் சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றம் போன்ற இயல், இசை, நாடகங்களுடன் சுமார் நான்கு மணி நேரத்துக்குச் சுவையாக விரிந்தது.

கருணாகரன் பழனிச்சாமி அவர்கள் எழுதித் தயாரித்த “பெரியசாமி” என்ற நகைச்சுவை நாடகம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அதில் நடித்த கருணாகரன், கருணாநிதி, மற்றும் கோவிந்தராஜ் மிகவும் சிறப்பாக நகைச்சுவையை வெளிக் கொணர்ந்தனர்.

தமிழுக்குத் தொண்டு செய்பவர்களுக்குத் தமிழுலகம் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக நிகழ்ச்சியின் இடையில், இவ்விரிகுடாப் பகுதியில் தமிழுக்குப் பல சேவைகள் செய்துவரும் மணி மு. மணிவண்ணன் அவர்கள் சிறப்பு விருது அளித்து கவுரவிக்கப்பட்டார்.

நிகழ்ச்சியின் இடைவேளைக்கு பிறகு ஸ்ரீதரன் மைனர் குழுவினர் கொடுத்த நாட்டுப்புறப் பாடல் விருந்து அனைவரையும் நம் தாய் மண்ணுக்கும், கிராமங்களுக்கும் கொண்டு சென்று, நாம் இருப்பது அமெரிக்கா என்கிற நினைவையே மறக்கச் செய்தது. அவர்கள் தங்கள் பாடல் திறமையால், புஷ்பவனம் குப்புசாமி, விஜயலட்சுமி நவனீதகிருஷ்னன், பரவை முனியம்மா, மற்றும் TK நடராஜன் ஆகியோரை நம் கண்முன், மன்னிக்கவும் காதுக்குள் கொண்டு வந்து நிறுத்தினர். ‘இவர்கள் என்ன காலம் காலமாக இதையே தொழிலாகச் செய்து வருபவர்களா என்று வியந்து விட்டேன்’ என்று பாப்பையா அவர்களே பாராட்டிக் கூறும் அளவுக்குச் சிறப்பாக இருந்தது இந்த நிகழ்ச்சி.

பட்டிமன்ற உலகின் ‘போப்’ சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் ‘வட அமெரிக்காவில் தமிழ் வளரும், தளரும்’ என்ற நகைச்சுவையுடன் கூடிய சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம் நடந்தது. சன் TVயில் மட்டும் இவரது பட்டி மன்றம் பார்த்து இரசித்த பலருக்கு, நேரில் பார்த்தது நல்ல விருந்தாக இருந்தது.

லோகநாதன் பழனிச்சாமி அவர்களின் அணி ‘தமிழ் வளரும்’ என்கிற தலைப்பிலும், கந்தசாமி பழனிச்சாமி அவர்களின் அணி ‘தமிழ் தளரும்’ என்கிற தலைப்பிலும் பேசி அரங்கையே அதிரடிக்க வைத்தனர். ‘வளரும்’ குழுவினரின் வாதங்களும், புள்ளி விவரங்களும், கேட்பவர் களின் மனதில் ‘உலகெல்லாம் தமிழ் முழக்கம் ஒலிக்கச் செய்வீர்’ என்ற பாரதியின் கனவு நினைவாகிக் கொண்டிருக்கும் திருப்தியை ஏற்படுத்தியது. அந்த அணியில் பங்கேற்ற முனீஷ், முஸ்த·பா, மற்றும் ஸ்ரீதரன் மைனர் அனைவரும் மிகச் சிறப்பாகவும், நகைச்சுவையுடனும் பேசினர்.

‘தளரும்’ குழுவினரின் நகைச்சுவையான எதிர்வாதங்களும், அடுத்த சந்ததியினரிடம் தமிழ் எந்த அளவுக்கு வளர்ந்துகொண்டுள்ளது என்கிற விவரங்களைக் கேட்கும் போது ‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என்கிற கவலை உண்மை யாகிவிடுமோ என்ற வருத்தம் உண்டாகியது. தளரும் அணியில் பாகீரதி, சுதர்ஷன், அலெக்ஸ் கியோர் மிகச் சிறப்பாக எதிர்வாதம் தொடுத்து, நகைச்சுவை கலந்து தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

ஆனால் நடுவர் பாப்பையா அவர்களின் பேச்சுத் திறனாலும், சிறந்த சிந்தனையாலும் வெளிப்பட்ட போட்டியின் முடிவு எல்லோருக்கும் நிறை வையும், நிம்மதியையும் கொடுத்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மற்ற நாடுகளில் தமிழ் வளரவில்லையானாலும், வட அமெரிக்காவில் நடக்கும் தமிழ்ப் பணிகளைப் பார்க்கும்பொழுது, இங்குள்ள தமிழர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள், அறிவாளிகள், தமிழ் எங்கும் வளர வேண்டும் என்கிற அக்கறை கொண்டவர்கள் என்கிற உண்மையைப் பார்க்கும்பொழுது, வட அமெரிக்காவில் தமிழ் கண்டிப்பாக வளரும் என்ற தீர்ப்பைக் கொடுத்து விழாவுக்கு வந்திருந்த அனவர் மனதிலும் பால் வார்த்தார்.

இந்த முத்தமிழ் விழா நடந்த அந்த ஞாயிறு மாலைப்பொழுது வந்திருந்த அனைவருக்கும் ஒரு பொன்மாலைப்பொழுதாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

லோகநாதன் வெங்கடாசலம்

© TamilOnline.com