கீதா பென்னெட் பக்கம்
சில நாட்களுக்கு முன்னால் அருகில் இருக்கும் 'அல்ஹாம்ப்ரா' என்ற இடத்திற்குப் போக வேண்டியிருந்தது. அங்கே சீனர்கள் ஜனத்தொகை அதிகம். ஒரு கடையின் பார்க்கிங் லாட்டில் காரை நிறுத்தி விட்டு இறங்கிய போது அடுத்த காருக்கு அந்தப் பக்கத்திலிருந்து கலகலவென்று சிரிப்பொலி கேட்டது. பதினாறு பதினேழு வயது இருக்கும் ஐந்தாறு சைனீஸ் பெண்கள் வாய் ஓயாமல் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் நின்றிருந்தார்கள். அவர்களுடைய தோற்றத்திலிருந்து நிச்சயம் அமெரிக்காவில் வாழும் இரண்டு அல்லது மூன்றாவது தலைமுறையாகத் தான் இருக்க வேண்டும் என்பது புரிந்தது.

ஒரு கணம் அவர்களையே நோட்டம் விட்ட எனக்கு ஒரு விஷயம் சட்டென்று உறைத்து, திகைக்க வைத்தது. காருக்குள் பார்த்தேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். அவர்கள் கூடப் பெரியவர்கள் யாரும் இல்லை என்பது தெரிந்தபோது இன்னும் வியப்பு வந்தது.

அப்படி என்னை ஆச்சரியப்படவைத்த விஷயம் என்னவென்றால் அந்தப் பெண்கள் சீனமொழியில் பேசிக் கொண்டிருந்தது தான்.

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். நம் தமிழ் இளம் வயதினர் ஒன்றாகக் கூடினால் தமிழில் உரையாடுவார்களா? அமெரிக்காவில் வாழும் இளம் தலைமுறையை விடுங்கள். சென்னையிலேயே இது அபூர்வமான விஷயம் ஆகிவிட்டது. அங்குள்ள மால் போன்ற ப்ளாஸாக்களில் கூட்டமாக நிற்கும் கல்லூரி மாணவிகள் அருகில் போனால் 'ஹாய் யார்... டிட் யூ ஸீ மேடி இன் தட் மூவி யார்...' என்று அலட்டல் ஆங்கிலம் தான் கேட்கும்.

அப்படி இருக்க இந்த சீனப் பெண்கள் மட்டும் எப்படி? அதுவும் பக்கத்தில் இருந்து கண்காணிக்க அம்மா அப்பா என்று யாருமே இல்லாத போது! உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.

அதே சமயம் தமிழ் மொழியையும் நினைத்துப் பார்க்கிறேன். உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த முதல் மொழி தமிழ்தான் என்பதை முதலிலேயே சொல்லிக்கொண்டு விடுவதற்குக் காரணம் நீங்கள் என்னை துரோகி என்று திட்டக் கூடாது என்பதற்காகத் தான்.

தமிழ் கற்பது சுலபம் இல்லை. அதற்கு ஒரு சின்ன உதாரணம்: தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு படிக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். 'ஓங்கி உலகளந்த' என்பதை எப்படிச் சொல்லுவீர்கள்? 'onki ulakalantha' என்று தானே? நான் அப்படிச் சொன்னால் என்னை ஓங்கி ஒன்று வைக்க மாட்டீர்களா?

நம்மவரிடையே பாராட்டப்பட வேண்டிய ஒரு பெரிய விஷயம் என்னவென்றால் பாலவிஹார்களில் சிறு வயதிலிருந்தே தமிழ் கற்றுக் கொடுப்பது. என் மாணவ மாணவிகளுக்கு நிறைய தமிழ்ப் பாட்டுக்கள் சொல்லிக் கொடுக்கிறேன். அவர்களது உச்சரிப்பைத் திருத்தி அர்த்தம் புரிய வைக்கிறேன். இது என்னால் முடிந்தது.

கீதா பென்னெட்

© TamilOnline.com