கடவு - திலீப்குமார்
"வால் டாக்ஸ் ரோட்டுக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற ஏழெட்டு சந்துகளில் இந்தத் தங்கசாலைத் தெருதான் கொஞ்சம் அகலமாகவும் நடக்க சௌகரியமாகவும் இருப்பது. இது வட இந்தியர்கள், அதுவும் குறிப்பாக குஜராத்திகள் அதிகமாக வாழுகிற பகுதி. அதனால் இங்கே ஆடம்பரமும் அசிங்கமும் அளவுக்கு அதிகமாகவே தென்படும். ஆடம்பரம் என்று நான் குறிப்பிடுவது இவர்கள் அணிந்திருக்கும் உடைகளை. அசிங்கம் என்றது அவர்கள், தங்கள் வீடுகளிலிருந்து தெருவுக்கு இடம் மாற்றிய கசடுகளை. வீடுகளைச் சுத்தமாகவும், வாசல்களை அசுத்தமாகவும் வைத்துக் கொள்வதில் இந்த குஜராத்திகள் மிகவும் சிரத்தை உடையவர்கள்."

'தீர்வு' என்ற சிறுகதையில் சென்னைக்குப் புலம் பெயர்ந்த குஜராத்திகளைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார், 'கடவு' சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் திலீப்குமார். இந்த வருணனையை மட்டும் வைத்துக் கொண்டு தமிழகம் வாழ் குஜராத்திகளைப் பற்றி ஓர் அபிப்ராயத்தை உருவாக்கிக்கொள்ளும் முன் இந்தச் சிறுகதைத் தொகுப்பைப் படிக்க உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் பெரும்பான்மையானவை தமிழகக் குஜராத்திகள் பற்றியதுதான்.

எந்தப் பெருநகரமும் பல்வேறு திசைகளிலிருந்து பிழைப்பு தேடி வருபவர்களைத் தன் வளத்தால் கவர்ந்தபடிதான் இருக்கிறது. அது நியூயார்க் ஆகட்டும், ஹாங்காங் ஆகட்டும், மும்பையோ சென்னையோ ஆகட்டும் இதில் வித்தியாசமே இல்லை. அந்தந்தக் கால வசதிப்படி எந்தெந்த மார்க்கங்களில் வர முடியுமோ வந்து பிழைப்புக்கு வழிகண்டு கொள்கிறார்கள். அப்படித்தான் குஜராத்திகளும். காலப்போக்கில் நகரத்தின் சமூகத்தில் இவர்களும் கலந்துவிடுகிறார்கள். ஆனால் தங்கள் கலாச்சாரத்தையோ, தனித்தன்மையையோ மட்டும் விட்டுக்கொடுப்பதில்லை. அமெரிக்காவாழ் இந்திய சமூகத்தினரைப் போல்.

கலாச்சாரமும், அன்றாட வாழ்க்கைமுறையும் வேண்டுமானால் வித்தியாசப்படலாம், ஆனால் அவற்றையெல்லாம் விலக்கிவிட்டு உள்ளார ஆழ்ந்துபார்த்தால் வாழ்க்கை என்பது பொதுதானே என்ற எண்ணம் தோன்றும். இங்கே அமெரிக்க இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் தொடக்கக் காலத்தில் இருந்த வெள்ளையின மக்களை மட்டுமே வைத்து எழுதப்பட்ட கதை கவிதைகள் எல்லாம் பின்னாளில் விரிந்து கருப்பின மக்கள், ஸ்பானிஷ் மக்கள், சீன/ஜப்பான் இனத்தவர் என்று பல்வேறுபட்ட மனிதர்களைப் பற்றிப் படைக்கப் பட்டு, சமீபத்தில் இந்திய இனத்தவரைப் பற்றியும் படைப்புகள் வெளியிடப்பட்டன. அமெரிக்காவை 'அயல்நாட்டு மக்களின் நாடு' (The country of other country people) என்று சொல்வதுண்டு. அமெரிக்க இலக்கியத்தில் இத்தகைய விரிவு என்பது தனது சமூகத்தை உண்மையாகப் பிரதிபலிக்கும் நிலை நோக்கி மெல்ல மெல்ல அழைத்துச்செல்கிறது. அதேபோலத்தான் தமிழிலக்கியத்திற்கும் பல்வேறுபட்ட சமூக அங்கத்தினர்களைப் பற்றிய கதைகள் தேவைப்படுகின்றன. கரிசல் காட்டு மக்களை கி. ராஜநாராயணன் அவர்கள் தம் புதினங்களில் பதித்துவைத்தது போல் தமிழக குஜராத்திகளை திலீப்குமார் இந்த அரிய படைப்பில் பதித்து வைத்திருக்கிறார்.

திலீப்குமாரும் குஜராத்தி இனத்தைச் சேர்ந்த தமிழர் என்பதால் கதைகளில் இருக்கும் இவர்கள் பற்றிய சித்தரிப்பில் ஓர் இயல்பும் உண்மையும் குடிகொண்டிருக்கின்றன. இதில் வரும் மக்கள் மத்தியதர மற்றும் கீழ்மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆசிரியரின் எழுத்துப்படி, இந்தச் சமூகத்தில் வயதான பாட்டிமார்கள் ஆச்சாரம், அனுஷ்டானம் பார்த்து ஆன்மீகம், பக்தியில் நாட்டம் கொண்டவர்கள். புஷ்டி மார்க்கம், பாகவதம் என்று பேசுபவர்கள். இளவயதுப் பெண்களோ கல்யாணம் ஆகும்வரை அதிரூப அழகிகளாய் இருந்துவிட்டு, கல்யாணம் ஆனதும் குழந்தைகள் பெற்று உடல் பெருத்து, குடும்பத்திற்காகச் சமைத்துச் சமைத்து ஓடாய்த் தேய்பவர்கள். ஆண்கள் சாதுவானவர்கள். பணம் சம்பாதிக்கும் வழியைத் தேடித் தெளிந்தபின் இவர்கள் வாழ்க்கையில் ஆர்வம் காட்டுவது முடிந்துவிடுகிறது. அதன் பிறகு குடும்பச்சுமை அழுத்தியழுத்தி மரத்துப்போன உணர்வுடன் நாட்களைத் தள்ளுபவர்கள். நிறையக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்பவர்கள்.

இந்த குஜராத்திகளின் வாழ்வில், பூஜைக்கு வைத்திருந்த பாலைத் திருடும் 'அக்ரஹாரத்துப் பூனை'யையும், செத்த எலியைப் பொதுக் கிணற்றில் இருந்து எடுத்தப்பின் எப்படிச் சுத்திகரிப்பது என்ற பிரச்சனைக்கு, பாட்டி பூஜையிலிருந்து கங்கா ஜலத்தை எடுத்து ஊற்றச் சொல்வதையும் ('தீர்வு'), எல்லா வயதுப் பெண்களுக்கும் படுக்கையறை மற்றும் சமையலறை விஷயங்களிலிருந்து ஆன்மீகம், பரிகாரம் வரை விவஸ்தையோ கூச்சமோ பயமோ இன்றி யோசனைகள் சொல்லும் கங்கு பெஹன் பாட்டியின் மரணம் பற்றிய பயத்தையும் ('கடவு'), வாரக்கூலிக்குக் காத்திருந்து கிடைக்காமல் போகையில் அப்பாவுக்கு அடுத்த நாள் மூங்கில் குருத்து வைத்துச் சமைத்து திவசம் பண்ணக் காத்திருக்கும் அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்ற கடைப்பையனின் தவிப்பையும் ('மூங்கில் குருத்து') தம் கதைகளில் மிக யதார்த்தமாகச் சித்தரிக்கிறார் ஆசிரியர். இவரது 'கடிதம்' என்ற சிறுகதை பற்றி முன்பே ஒரு முறை நவீனத் தமிழ்ச்சிறுகதைகள் தொகுப்பை அறிமுகப்படுத்தும்போது எழுதி யிருந்ததை வாசகர்கள் நினைவு கூரலாம். இது போல இவரால் எல்லாக் கதைகளிலும் குஜராத்திகளின் வாழ்வில் தென்படும் ஒரு வெகுளித்தனத்தை நகைச்சுவை உணர்வோடு வெளிக்கொண்டுவர முடிந்திருக்கிறது. இவர்களின் வறுமையைக் கூட ஓர் எள்ளல் தொனியில் அதே சமயத்தில் அதன் நிச்சயத்தன்மையை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளும் மனோ பாவத்தை தனக்கே உரிய தள்ளி நின்று அவதானிக்கும் நடையில் எழுதியிருக்கிறார்.

குஜராத்தி அல்லாதவர்கள் பற்றியும் சில கதைகள் இருக்கின்றன. அவற்றில் என்னை மிகவும் பாதித்த கதை 'முதுமைக் கோளம்' என்ற சிறுகதைதான். அன்பு என்பது சந்தர்ப்பவசமானது தான் என்ற நிதர்சனத்தை ஓய்வில்லத்தின் தனிமையில் இருக்கும் ஒரு வயதான பெண்மணி, தனக்கும் வயதாகிக் கொண்டிருப்பதை உணராத மகனின் வருகையின்போது உணருகிறார். இவரின் தனிமையும் உறவுகளில் இருந்து கட்டாயமாய் ஒதுக்கப்பட என்றே வரும் முதுமை நோய்களும் எத்தனை கொடுமையானவை என்று படிப்பவர் புரிந்து கொள்ளமுடியும். இதே போன்று 'கானல்' மற்றும் 'நிகழ மறுத்த அற்புதம்' சிறுகதைகளும் நம்மை மீறிய ஒரு பாதிப்பைத் தந்துவிட்டுப் போகின்றன.

நிறைய வருடங்களாகத் தீவிரத் தமிழ் இலக்கியப் புத்தகக் கடையை ஒரு கொள்கையாய்ச் சென்னையில் நடத்திவருபவர் திலீப்குமார். இங்கே பெர்க்லியில் இருக்கும் கலி·போர்னியா பல்கலைக்கழகம்கூட இவரைத் தற்காலத் தமிழிலக்கியத்தை அறிமுகப்படுத்த மூன்றாண்டுகளுக்கு முன் அழைத்திருந்தது. தீவிர தற்கால இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் உள்ளவர்தான் என்றாலும் 'கடவு' தொகுப்பைப் பொறுத்தவரை எவருக்கும் புரியாமல் எழுதாமல், ஆழமான உணர்வுகளையும் இயல்பான வாழ்க்கை முறைகளையும் எளிமையாக அதே சமயத்தில் தரமாக எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம்.

கடவு
திலீப்குமார்

க்ரியா பப்ளிகேஷன்ஸ்
ISBN 81-98602-77-8
crea@vsnl.com
ddkbooks@eth.net

மனுபாரதி

© TamilOnline.com