நம்மால் முடியும்
சென்ற இதழில் சொல்லியிருந்த அரசியல் 'வாடை' பற்றிய கருத்து பற்றி (இன்னொரு முக்கியமான காரணத்தால்) அலுவலகத்தில் பேச நேர்ந்தது. ஆரம்பித்த விதம் மிகச் சாதாரணமான ஒன்று: அமித் கன்னா என்ற நண்பர், தமக்கு ஒரு வலைத்தளம் அமைக்க வேண்டி ஏற்கனவே என்னிடம் பேசியிருந்தார். விவரமாகப் பின்னர் பேசலாம் என்றிருந்தோம் - சென்ற மாதம், எதற்காக வலைத்தளம் போன்றவற்றைச் சொன்னார். குடிநீர்ப் பிரச்சினை அதிகமாக உள்ள ஹைதராபாத் மற்றும் சென்னை மாநகரங்களில், மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேச ஆரம்பித்தார். நான் எப்போதும்போல், சேமிப்பு முறைகளைப் பற்றி விளக்கவும், மற்றும் இது போன்ற பிற தளங்களுடன் இணைப்புக்கள் என்று பேசப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால் நண்பரோ மிகத் தெளிவுடன் 'இது வெறும் செய்திகளைத் தருவதற்கல்ல' என்று ஆரம்பித்தார்.

"சட்டங்களும் விதிகளும் ஏற்கனவே தேவையான அளவுக்கு உள்ளன. மழை நீரைச் சேமிக்கச் செய்ய வேண்டுவனவும் மிகச் சுலபமானவையே. ஆனால் நாம் அதிலும் படித்த நல்ல வேலையில் இருக்கும் நாம் செய்யத் தவறியது, தவறுவது அரசாங்க இலாக்காக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களை சட்டத்தையும் நெறிமுறைகளையும் பின்பற்ற வைப்பது. (It is lack of political will on OUR part). அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களைக் குறை கூறாமல் நாம் செயலில் இறங்க வேண்டும்."

எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேலும் பேசியதில், அவர் ஏற்கனவே செயலில் இறங்கி விட்டார் எனத் தெரிந்தது. அவர்களது வட்டாரத்தில் அதிகாரிகளுடன் பொதுமக்களைச் சந்திக்கும் நேர்முகம் ஒன்றை நடத்தி முடித்திருந்தார்! அந்த நிகழ்ச்சியின்போதும் குடியிருப்புகளின் உரிமையாளர்கள் குறைகூற ஆரம்பித்தபோது மறித்து செய்யவேண்டியதைப் பற்றிப் பேசச் சொல்ல வேண்டியிருந்தது என்றார்.

இன்றைய பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும்; இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்ற முடியும் என்பதில் மிகவும் உறுதியுடன் இருந்தார் அமித். படித்தவர்கள் மற்றும் நல்ல நிலையில் இருப்போர் அரசியலை விட்டு ஓடாமலும், எதுவும் இங்கே நடக்காது என்ற மனப்பான்மை இல்லாமலும், நமக்கென்ன என்று இருக்காமலும் காரியத்தில் இறங்க வேண்டும் அவ்வளவுதான் என்றார்! நான் சிரித்தவாறே "எப்படி அதை நடக்கவைக்க முடியும்?" என்று கேட்டேன்.

தீர்க்கமான பதில் வந்தது: "ஒரு மென்பொருள் வடிவமைப்பாளன் என்ற முறையில் இதை அணுகுவோம். ஒரு சிக்கலான மென்பொருள் திட்டத்தில் இறங்குகையில் ஏற்கனவே இது போன்ற நிலைமைகளில் யார் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். அதே போல் இன்றைய கால கட்டத்திற்கு இணையாக என்றாவது இருந்திருக்கிறதா?" என்ற கேள்வியை எழுப்பி அருமையான ஒரு பதிலையும் சொன்னார். ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவைப் பார்ப்போம். படித்தவர்களுக்கு நல்ல, அரசாங்க வேலை காத்துக்கொண்டிருந்தது. சுதந்திர இந்தியா வெறும் கனவு போலத் தோன்றியது. ஆனால் அன்றைய தலைவர்கள், மற்றும் படித்தவர்கள் எப்படிச் செய்வது என்றுதான் யோசித்தார்கள். இன்றைக்கு ஏறத்தாழ 80% மென்பொருள் பற்றிய வேலைகளும் அப்படித்தான் - காலம் குறைவு; முடிக்க வேண்டிய திட்டம், மென்பொருள் பற்றித் தெரியாதவை அதிகம்; மாற்றங்கள் நம் கையில் இல்லை. இத்தனைக்கும் நடுவில் நாம் 'செய்வது எப்படி?' என்ற அணுகுமுறையைக் கடைப் பிடிக்கிறோமே. அதேதான் அரசியல், சமூக மாற்றங்களையும் நடத்துவதற்கு ஒரே வழி.

செய்ய முடியும்; நடத்திக் காட்டுவோம். மீண்டும் ஒரு செயல்புரட்சிக்கு அதிக நாளில்லை. நம்மால் முடியும்.

மீண்டும் சந்திப்போம்,
பி.அசோகன்
செப்டம்பர் 2003

© TamilOnline.com