அக்டோபர் 2003 : வாசகர்கடிதம்
தந்தை பெரியாரைப் பற்றிய கட்டுரை புதிய கண்ணோட்டத்தில் அருமையாக இருந்தது. தமிழ் கற்பது கடினம் என்று தமிழ் எழுத்தாளரான கீதாபென்னட் நினைப்பது விந்தையாக உள்ளது. அஃறிணை பொருட்களுக்கு ஆண்பால், பெண்பால் வழங்கும் மொழிகளைப் போல் அல்லாமல் ச வில் 4 வகை, க வில் 4 வகை என்று ஏகப்பட்ட அரிச்சுவடி படிக்க வைக்காமல் இருக்கும் தமிழ், கற்கக் கடினமான மொழி அல்ல. ''தமிழ் தெரிஞ்சு என்ன லாபம்'' என்று நினைப்பதும் "எனக்கு டமில் படிக்க வராது'' என்று பெருமையாக சொல்வதும் குழந்தைகள் தமிழில் பேசாமல் இருப்பதற்குக் காரணம் என்பது என் கருத்து.

குறுக்கெழுத்துப் புதிரில் வாஞ்சிநாதனுடன் ஒரு சந்திப்பு வெளியிட்டால் மாதம் தவறாமல் சுவையான வார்த்தை வலையை அவர் வீசுவது எப்படி என்று வாசகர்களும் தெரிந்து கொள்ளலாம்.

மீரா சிவா

******


சென்னையில் வசிக்கும் நாங்கள் கலிபோர்னியாவில் ப்·ரீமாண்ட் பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்து 50 நாட்கள் ஆகின்றன. இங்கு பகலில் பொழுது போகாமல் மிகவும் சிரமப்பட்டோம். அப்படிப்பட்ட நேரத்தில் எங்களுடைய மருமகன் எங்களிடம் செப்டம்பர் மாத தென்றல் பத்திரிகையை நீட்டினார். எங்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

கலிபோர்னியாவில் தமிழ் பத்திரிகையா? அதுவும் இலவச இதழாக! பெருமையாக இருந்தது. இதுவே சென்னையில் இருந்தால் ரூ. 15க்கு விற்பனை செய்வார்கள்.

எல்லாவித அம்சங்களுடன் கூடிய அருமையான தமிழ் இதழினை தென்றலில் கண்டோம்.

கும்பகோணம் டி.எம். விஸ்வநாதன், சாயா விஸ்வநாதன்

******


திருமதி சித்ரா வைத்தீஸ்வரன் ஒரு அன்பருக்கு ஆலோசனை கூறியுள்ளத்தில் ''நன்றிக் கடனாக இருந்துவிட்ட காரணத்தால் அன்பை வளர்த்துக் கொள்ளத் தெரியாமல், குறைகளை மட்டுமே எடுத்துச் கொள்ளத் தோன்றுகிறது'' என்ற அற்புதமான வாக்கியம் மனதைத் தொட்டு விட்டது. ஒவ்வொரு மனிதரும் நன்றியை கடனாக நினைக்காமல் விசுவாசமுள்ள அன்பாகப் போற்ற வேண்டும். அன்புக்கு எல்லாமே அடிபணியும். உங்களின் இந்த அன்புப்பணி தொடரட்டும்.

ரகுபத், கலிபோர்னியா

******


தங்கள் தென்றல் இதழின் புதிய வாசகன் நான். கடந்த மூன்று இதழ்கள் படித்தேன். எல்லாமே தங்கத் தமிழில் பதித்த வைரமாய் மின்னுகின்றன. சென்னையில் நான் 'கல்கி' மட்டும் விரும்பிப் படிப்பேன். கல்கியைவிடவும் பலபடிகள் உயர்வாக உங்கள் இதழ் இருக்கிறது.

அற்புதமான தமிழ்நடையில் அருமையான பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. கடந்த இதழில் திரு ஹரிகிருஷ்ணன் அவர்களின் 'கல்லா மா' மூலம் வள்ளுவர் பெருமானின் பண்பை என்னமாய் ரசிக்க முடிகிறது பாருங்கள். அதை மட்டும் நான் மூன்று முறை படித்தேன்.

உங்கனை அனைவரையும் வாழ்த்தி இந்தத் தமிழ்ப் பணியை இன்று போல் என்றும் தொடருமாறு வேண்டுகிறேன்.

S. மோகன்ராஜ்

******


இந்தியாவிலிருந்து பிழைப்பைத் தேடி வந்துள்ள இளைஞர்களின் பெற்றோர் என்ற முறையில் வந்தவர்களின் நானும் ஒருவன். ஆனால் இங்கு நம் பாரத கலாசாரம் எப்படி சீரழிகிறது என்பதை பார்க்கும் போது என் மனதில் ஏற்பட்ட சில வேதனை தரும் எண்ணங்களைத் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நமது தேசத்திலிருந்து கலைஞர்களை வரவழைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களையும் கெளரவித்து அனுப்புவது மட்டும போதாது. இந்த விஷயத்தில் ஆகஸ்ட் இதழில் வெளியான மெயில் அருமை. அவர் தமிழர்களைக் கண்டால் தமிழிலேயே தான் பேசுவது என்று வைத்துக் கொண்டிருக்கும் கொள்கை போற்றற்குரியது. அதேபோல் வாசகர் பக்கத்தில் ஜெயக்கல்யாணி மாரியப்பன் எழுதியுள்ள யோசனைகளும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதாகும். நாம் படித்த ஒளவையார் பாடல்களை எல்லோரும் கட்டாயமாக நம் குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும்.

நம் குழந்தைகள் வயிற்றுப் பிழைப்புக்காக தாய்நாட்டைவிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள். நமக்கு என்று ஓர் கலாசாரம் இருக்கிறது. நம் இந்தியக் கலாசாரம் போற்றதற்குரியது. அதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. ஆனால் இங்கு வந்து டாலர் நோட்டைக் கண்ணால் பார்த்ததும் அதன் மோகம் தலைக்கேறி நம் குழந்தைகள் ஆண், பெண் இருவரையும் கண்டவேளைகளில் கண்டபடி வாழ அனுமதிக்ககூடாது.

நமது ஊர் நரிக்குறவர்களைவிட மோசமாக உடை அணிவது அவர்களது வழக்கமாக இருக்கலாம். ஆனால் அவையெல்லாவற்றையும் இங்கு வந்த ஒரே காரணத்துக்காக நாமும் ஏற்றுக் கொண்டு காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்துவது அறிவுடைமையாகாது. வீட்டில் இருக்கும்போது ஆண்கள் தமிழ்நாட்டு வழக்கப்படி வேஷ்டியும் பெண்கள் புடவையும் அணிவதில் என்ன தப்பு. இந்த மாதிரி சூழ்நிலையிலிருந்து நம் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

தில்லை நடராஜன்

******


ஜூலை மாத இதழில் வாசகர் கடிதம் பகுதியில் திரு என்.ஆர். ரங்கநாதன் அவர்கள் தென்றலின் அரசியல் களம் என்ற பகுதி துர்வாடை வீசுவதாக ("தென்றலுடன் துர்வாடையும் வீசுவது வேதனை அளிக்கிறது") எழுதியுளளார். துர்வாடை என்ற வார்த்தையை அவர் உபயோகித்தது சரியல்ல. ஆட்சேபிக்கக் கூடிய வார்த்தை. துர்வாடை வீசும் அரசியலை நறுமணமாக்கி வெளியிடுவது தென்றல் மட்டுமே.

பக்கம் பக்கமாக எழுத வேண்டிய இதுபோன்ற பிரச்சனைகளை வார்த்தைகளில் தெளிவுடன் ஒரு சில வரிகளில் கம்பி மேல் நடப்பதுபோல் சர்வ ஜாக்கிரதையாக அதே நேரம் முழு அக்கறையுடன் எழுதியுள்ள துரைமடன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதே போல் ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக எழுதிவருகிறார். அப்படிப்பட்ட அரசியல் பக்கத்தை 'துர்வாடை' என்று எழுதுவதை ஏற்க முடியாது என்று வாசகர்கள் சார்பாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்திரா காசிநாதன்

******


ஜூன் மாத இறுதியில் பெங்களூரிலிருந்து மனைவியுடன் சில மாதங்கள் மகளுடன் இருக்க வந்தோம். ஒருநாள் மளிகைக்கடைக்குப் போன போது சந்தோஷ அதிர்ச்சி. ஜூலை மாத தென்றலைக் கண்டேன். மனமும் உடலும் குதித்தது. மிகவும் சிறப்பான மற்றும் அருமையான தமிழ் மாத இதழ். எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். கூடவே எல்லா இதழ்களையும் பெங்களூருக்கு எடுத்துச் செல்வோம். அங்குள்ளவர்கள் படிக்க.

சத்யஸ்ரீ ராவ்

******


தமிழ்ப் பத்திரிகைகளே கிடைக்காத ஊரில் உங்கள் தென்றலை மிகவும் பெருமைக்குரிய விஷயமாக நாங்கள் கருதுகிறோம். உங்கள் பத்திரிகையில் ராசிபலனில் ஆரம்பித்து, மாயாபஜார், சினிமா, சந்திப்பு, புதிர், வழிபாடு, தமிழகஅரசியல் என்று எல்லா வயதினரையும் கவரும் வகையில் விஷயங்களைக் கொடுக்கிறீர்கள். மனமாற வாழ்த்துகிறேன், வாழ்க!

மைதிலிகிரி

******

© TamilOnline.com