இவரைத் தெரிந்துகொள்ளுங்கள் : 'Mostly Tamil' சுதா
விரிகுடாப் பகுதி தமிழர்களுக்கு செவ்வாய்க் கிழமை காலைகள் விசேஷமானவை. காரணம்: Mostly Tamil. பெயர் எப்படி இருந்தாலும் நிகழ்ச்சிகள் 'முழுவதும் தமிழ்'தான். பக்தி இசை, திரை இசை, பழைய பாடல்கள், திருக்குறள், நேயர் விருப்பம் என்று காலை 6 மணிக்குத் தொடங்கி 9 மணிவரை ஒரே தமிழ் இசை மயம்தான்.

"The time now is six thirty and you are listening to Mostly Tamil" என்று அவ்வப்போது நேரம் சொல்லி ஒலிக்கும் மணிக்குரல் சுதா என்று அறியப்படும் சுதாஹரன் சிவசுப்பிரமணியனுடையது. 1999 ஏப்ரல் மாதம் ஸ்டான் ·போர்டு பல்கலைக் கழகத்தில் தொடங்கியது இந்த ஒலிபரப்பு. நியூயார்க் நகரில் அதற்கு முன் தமிழோசை நிகழ்ச்சியை நடத்திய அனுபவம் இவருக்கு உண்டு. இவருடைய அண்ணன் கிருபா இன்னும் அதைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

நியூயார்க்கில் தமிழோசையாக இருந்தது இங்கு ஏன் மோஸ்ட்லி டமில் ஆனது என்று கேட்டால், இடத்திற்கு ஏற்ற மாதிரிதானே பெயர் வைக்கவேண்டும் என்று பதில் வருகிறது. "கவர்ச்சியும், ஜனரஞ்சகமும்" பிற காரணங்கள். 'தமிழோசை' என்றே பெயர் வைத்திருக்கலாமோ என்ற எண்ணம் இப்போது தோன்றாமலில்லை. காரணம், அமெரிக்காவின் பிற இடங்களைவிட விரிகுடாப் பகுதியில் நல்ல தமிழ் புழங்குவது தான். "நானும் என்னுடைய 2 மூத்த சகோதரர்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் படிப்பின் பொருட்டு அமெரிக்கா வந்தோம். இன்று அவர்களை விட மிகவும் நன்றாகத் தமிழ் பேசுகிறேன். விரிகுடாவிற்கு வந்ததால்தான் இந்த முன்னேற்றம்" என்று தயங்காமல் சொல்கிறார்.

தமிழரான இவர் தமிழ் பேசுவதில் என்ன ஆச்சரியம் என்று தோன்றலாம். பூர்வீகமாக இலங்கையைச் சேர்ந்த இவர் பிறந்து வளர்ந்தது நைஜீரியாவில். படிக்க வந்த அமெரிக்காவில் வேரூன்றியிருக்கிறார். "இலங்கைத் தமிழன் என்ற முறையில் தமிழார்வம் எப்போதும் உண்டு. ஆனால், எனக்குத் தாய்நாடு என்று எதுவும் இல்லாமல் போய்விட்டது. ஊருக்குப் போகிறேனென்றால் கனடாவுக்குதான். அது என் வீடாகாது. Bay Area என் சொந்த ஊரில்லை. இந்தியாவுக்குச் செல்ல விசா தேவை. இலங்கைக்குப் போக முடியாது. இந்நிலையில் தமிழ்மொழி ஒன்றுதான் என்னைத் தமிழன் என்று அடையாளம் காட்டுகிறது" என்று சுதா சொல்லுகையில் மீளவொண்ணாது புலம்பெயர்ந்தோருக்கே உரிய மெல்லிய சோகம் குரலில் தென்படாமல் இல்லை.

தமிழ்நாட்டிலிருந்து வந்த பல பெற்றோர் செவ்வாய்க் கிழமைக்காகக் காத்திருப்பதாகப் போனில் கூப்பிட்டுச் சொல்வது இவரை மிகவும் நெகிழச் செய்கிறது என்கிறார். தானே நிகழ்ச்சிகளை வழங்குவது மட்டுமல்லாமல் விரிகுடாப் பகுதித் தமிழார்வலர்களையும் அழைத்து நிகழ்ச்சிகளை வழங்கச் செய்கிறார். தவிர தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பிரபலங்களும் பலமுறை சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக் கொண்டு நடத்தும் theme based நிகழ்ச்சிகள் இங்கே மிகப் பிரபலம். இதில் கேட்போரும் தொலைபேசியில் அழைத்துத் தமது கருத்துக்களைச் சொல்வதும், தாம் விரும்பும் பாடல்களைக் கேட்பதும் என்று ஒரே கலகலப்புத்தான்.

அந்த மாதிரிச் சமயங்களில் இரண்டு தொலைபேசிகள் விடாது கிணுகிணுத்துக் கொண்டிருக்க மாற்றிமாற்றி அவற்றை சுதா கையாளும் லாவகமே தனி. சிலர் இந்த இக்கட்டைப் புரிந்துகொள்ளாமல் சண்டை போட்டதுண்டு எனச் சொல்லிச் சிரிக்கிறார். இந்த ஒலிபரப்பின் வழியே பழைய நண்பர்களுக்கிடையே தொடர்பு ஏற்பட்ட சம்பவங்கள்கூட உண்டு. இது விரிகுடாப் பகுதியில் பண்பலை வரிசையில் ஒலிபரப்பப் பட்டாலும் வட அமெரிக்காவிலிருந்தும் ஏன், சில சமயம் இந்தியாவிலிருந்தும்கூட அழைத்துத் தமக்கு வேண்டியவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிப் பாடல்கேட்கிறார்கள் என்பதில் இவர் பெருமிதம் கொள்கிறார்.

இந்நிகழ்ச்சிகள் எல்லாம் http://www. mostlytamil.com என்ற வலையகத்தில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. மலேசியா, சிங்கப்பூர், கனடா மற்றும் தமிழர் வாழும் பிற நாடுகளிலிருந்தும் இவ்வலையகத்தில் வந்து நிகழ்ச்சிகளைக் கேட்பவர்கள் இருக்கிறார்கள் என்பதில் சுதாவுக்கு மிகுந்த சந்தோஷம். தமிழுக்காக ஒரு தொலைக்காட்சிச் சேனல் ஆரம்பிக்க வேண்டுமென்பது இவரது ஆவல். இதற்குப் பெரிய முதலீடு தேவையாகுமே. "பொருளாதாரத் தொய்வினாலும், மூலதனம் அதிகமாக இருப்பதாலும் இத்திட்டம் தள்ளிப் போகிறது. பணமுதலீடு செய்வோர் கிடைக்கும் பட்சத்தில் துவங்கும் வாய்ப்புள்ளது" என்கிறார் நம்பிக்கையோடு.

ஐந்து வயதில் அண்ணன்மாருடன் சேர்ந்து இராமாயண நாடகம் நடித்தபோது "பெற்றோர் சொல்படி நடப்பேன்" என்று பேசிய வசனம் அப்படியே மனதில் பதிந்துவிட, அதைத் தன் வாழ்வில் கடைப்பிடிக்கும் சுதா Mostly Tamilஐ முற்றும் தமிழாக்கி இன்னும் பல பெருமைகளைத் தமிழுக்கும் தனக்கும் சேர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரை: மதுரபாரதி
உதவி: கணேஷ் பாபு

© TamilOnline.com