வள்ளலார்
தமிழகத்தில் அருட்பிரகாச வள்ளலார், அடிகளார் என நன்கு அறியப்பட்டவர் சி. இராமலிங்கம்பிள்ளை (1823 - 1874). இவர் மரபான சைவக்குடும்பத்தில் பிறந்து, சைவ மதவாதியாக, பக்தராக வளர்ந்து, சித்தர் நெறியில் யோகத்தில் கனிந்தவர். 'ஜீவகாருண்யம்' என்னும் உயிர் இரக்கத்தால் சாதி சமய மத சாத்திரத் தடைகளை எல்லாம் கடந்து மரணமில்லத வாழ்க்கையை மாந்தர் முயன்றால் வாழலாம் என்ற உயரிய சிந்தனையை உலகுக்கு வழங்கியவர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் அபூர்வ மனிதராகவே இராமலிங்கர் வாழ்ந்துள்ளார். அக்கால கட்டத்தில் உருவான சமுதாய மாற்றங்கள் இராமலிங்கர் போன்ற ஆன்மீகப் புரட்சியாளர் தோன்றுவதற்கான பின்புலங்கள வழங்கியது. 'பசியிலிருந்து விடுதலை' என்பது அவரது தாரக மந்திரமாகவே இருந்தது. இது வெறும் சொல்லாக மட்டுமன்றிச் செயல் பூர்வமான தன்மையையும் கொண்டிருந்தது. சமயப் பண்பாட்டுத் தளத்தில் சீர்திருத்தவாதியாகவே இராமலிங்கர் தொழிற்பட்டுள்ளார்.

இராமலிங்கர் வாழையடி வாழையாக வந்த சைவ அடியார்களின் மரபில் முகிழ்த்தவர்தான். ஆனால் அந்த மரபில் இருந்து விலகி வித்தியாசமான சிந்தனையும் செயற்பாடும் மிக்கவராக திகழ்ந்தார். தமிழின் பக்தி இலக்கிய மரபுச் செழுமையில் தோய்ந்து தனக்கான பக்தி மரபையும், இலக்கியச் சுவையையும் இரண்டறக் கலந்து வெளிப்படுத்தி உள்ளார்.

இராமலிங்கர் முறையான முழுமையான கல்வி கற்றவர் அல்ல. ஆனால் அக்காலகட்டத்தில் வாழ்ந்த புலமையாளர்களுடன் எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடக்கூடியவர் அல்ல. அந்த அளவிற்கு ஆழ்ந்த புலமையும் தத்துவ விசாரணையில் ஈடுபடக்கூடிய பக்குவமும் வாய்க்கப் பெற்றவராக இருந்துள்ளார்.

இவரது ஆளுமை உருவாக்கம் ஒரே நேர்கோட்டுப் பாதையிலான மேல் நோக்கிய நகர்வு எனக் கணிக்க முடியாது.

தான் ஆரம்பத்தில் நம்பி ஏற்றுக் கொண்ட, புகழ்ந்த சைவ சமயத்தையும், வேதத்தையும், ஆகமத்தையும், புராண - இதிகாசங்களையும் மற்றும் கோயில் வழிபாட்டையும் 1869க்குப் பிறகு தூக்கி எறிந்தார். அவற்றைப் பொய் என்றார். பக்தி, இறைநம்பிக்கை, ஆத்ம விசாரணை மீதான புதிய விளக்கங்கள் வேண்டி நின்றார்.

மாணிக்கவாசகர், திருமூலர், அருணகிரிநாதர், பட்டினத்தார், தாயுமானவர் உள்ளிட்ட மரபுகளின் ஆளுமைகளின் தொடர்ச்சியில் தான் இராமலிங்கர் என்பவரது ஆளுமை உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. மேற்குறித்த மூலவர்களின் சிந்தனை வழிவந்த பாடல்களில் காணப்படுகின்ற சில பொதுக்கூறுகள் இராமலிங்கர் பாடல்களில் விரவியுள்ளது. குறிப்பாக இவர் புலப்படுத்திய 'சித்தர் கொள்கை' திருமூலர், பட்டினத்தார், தாயுமானவர் பாடல்களில் காணப்படுகின்றன.

பொதுவாக சைவசமயவாதிகளைப் போல் அல்லாமல் சித்தர் கொள்கை போற்றுகிறவர் களுக்கு சாதி சமயம் மதம் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது இயல்பானது. அதனால்தான் இராமலிங்கரின் பாடல்களிலும் உரைநடையிலும் இது துல்லியமாகவே வெளிப்பட்டுள்ளது.

இறைவனை சோதியாகவும், கருணையாகவும், வெளியாகவும் வழிபட்டது. சாதி மத சமய விகற்பங்கள் வெறுத்தது, உடலைப் பேணி யோக நெறியில் நிற்கச் சொன்னது. இறைவனின் அருளுக்காக ஏங்கிய அவரது ஆன்ம உருக்கம், வேத-ஆகம, வேதாந்த-சித்தாந்த சமரசம் கண்டது. இறுதியில் இவற்றை நிராகரித்தது.

ஏகான்மவாதத்தை மறுத்தது, ஜீவகாருண்ய ஒழுக்க்ததை முதன்மைப்படுத்தியது. செத்தாரைப் புதைக்கச் சொன்னது போன்ற பல்வேறு கருத்துகளில் ஒரு நெடிய தொடர்ச்சி இருக்கிறது. அந்தத் தொடர்ச்சியின் புரிதலில் தான் இராமலிங்கர் பற்றிய மதிப்பீடு சாத்தியமாகும். மேலும் இந்தத் தொடர் வரிசையை உடைத்து புதிய தடத்தை ஏன் உருவாக்கினார்? அவ்வாறு உருவாக்குவதற்கான உந்துதல் யாது? சமூக, அரசியல் பொருளியல் பண்பாட்டு, கருத்து நிலைக் காரணங்கள் என்ன? இது போன்ற கேள்விகளுக்கான பதில்களில் தான் வள்ளலார் என்னும் ஆன்மீகப் புரட்சியாளரைப் புரிந்து கொள்ள முடியும்.

இராமலிங்கர் தனது முப்பத்து நான்காவது வயதில் சிதம்பரம் சென்றார். சென்னை வாழ்வு நின்று தில்லை வாழ்வுக்கும் வடலூர் வாழ்வுக்கும் அவர் மாறிய போது புரட்சி பொருந்திய ஒரு பெரும் மாற்றம் அவரிடம் ஏற்பட்டது. ஒளிவழிபாடு, உயிர்ப் பலி மறுப்பு, சாதி சமய எதிர்ப்பு போன்ற கோட்பாடுகள் தீவிரமுற்றன. அதுகாறும் அறிந்து கொண்ட ஆன்மீகப் பயணத்தில் இராமலிங்கரின் சிந்தனையும் செயலும் புதுப்பாதை கண்டது. குறிப்பாக வெகுசன மக்கள் திரளுடன் நெருக்கமான உறவு கொண்டு வெகுசன இயக்கம் சார்ந்த சமூகச் செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டார்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய தருமச் சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்கியும் மற்றும் சன்மார்க்க போதினி (1867), சமரச வேத பாடசாலை (1872) உள்ளிட்ட கல்வி நிலையங்களையும் நிறுவினார். தொடர்ந்து சன்மார்க்க விகேவிருத்தி என்னும் மாத இதழையும் தோற்றுவித்தார்.

ஆக இராமலிங்கரின் பணிகளும் சிந்தனை களும் மக்கள் சார்ந்த வெகுசனத் தன்மை மிகுந்தவையாய்ப் புலப்பட்டன.

இது இவருக்கு முன்னர் தென்பட்ட ஆன்மீகப் பயணங்களில் இருந்து மாறுபட்டது. வேறானது. சனசந்தடி நெருக்கம் உள்ளிட்ட சூழலை இராமலிங்கர் விரும்பாமல் தனிமையை நாடியவராக உள்நகர்வில் இருந்தாலும் அவரது நோக்கம் வெளிப்படையானது.

இராமலிங்கர் 1825 முதல் 1858 வரை சென்னை நகரத்திலும் அதன்பின் 1867 வரை கருங்குழி கிராமத்திலும் 1874 ஜனவரி 31 வரை வடலூர் மேட்டுக் குப்பத்திலும் வாழ்ந்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் பஞ்சம் பட்டினி பரவலாக தமிழகத்தில் காணப்பட்டது.

சென்னை இராஜதானியில் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதி தொடங்கி 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை தொடர்ச்சியாகப் பஞ்சம் விட்டுவிட்டு நிலவியது. 1729-33, 1781, 1802, 1807, 1833-34, 1854, 1856, 1878 ஆகிய ஆண்டுகளில் கடுமையான பஞ்சம் நிலவியது. இந்தக் காலப்பகுதியில் அதாவது இராமலிங்கரின் பத்து வயது தொடங்கி, அவர் மறைவதற்குள் மூன்று முறை கடும் பஞ்சம் தமிழ்நாட்டில் நிலவியது. இதன் கொடுமைகளை நேரில் கண்டார். இதனால் தான் பசிக் கொடுமை தீர்ப்பதற்கு சத்திய தருமச் சாலைகளை உருவாக்கத் திட்டமிட்டார். ஆக மக்கள் பசியால் சாவதை நேரடியாகக் கண்டதன் தாக்கம்தான் அவரது தத்துவார்த்த நிலைப்பாடுகளை உருவாக்கியது.

இராமலிங்கர் எழுதிய 'மனுமுறை கண்ட வாசகம்' மற்றும் 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' உள்ளிட்ட உரைநடை நூல்கள் அவர் இயங்கிய, அவரை இயக்கிய சமூக இயங்கு தளத்தைச் சுட்டுகிறது. தொடர்ந்து பசித்துன்பத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டியததன் அவசியத்தை உணர்ந்து செயற்பட்டுள்ளார். தனக்குத் தெரிந்த வகையில் தீர்வு காண முற்பட்டுள்ளார்.

தமிழகத்தின் வரலாற்றிலே முதன் முதலில் தோன்றிய சமய சமூக சீர்திருத்த அமைப்பு வள்ளலார் துவங்கிய சமரச சன்மார்க்க சங்கமே ஆகும். அதாவது "பிற மதங்களைப் போலத் தானும் ஒரு மதமாகச் சங்கம் தோன்றவில்லை. மதங்களற்ற சன்மார்க்க சமுதாயத்தை தோற்றுவிப்பதற்கான சேவா சங்கமாகவே தோன்றியது'' என்று ம.பொ.சி. கணித்துக் கூறுவது மிகத் தெளிவாக உள்ளது. இராமலிங்கரின் சுத்த சன்மார்க்க இயக்கம் தமிழகச் சித்தர் பாரம்பரியத்திலிருந்து பெறப்பட்ட அகிம்சை, ஆன்மாக்களின் ஒருமைப்பாடு, ஒத்த உரிமை ஆகியவை பற்றிய அவரது புரிதலால் ஏற்பட்டது.

படித்த அறிவாளிகள் என அன்று இனங்காணப்பட்டோரில் பெரும்பாலோர் மேற்கத்திய தாக்கத்தால் 'சமூக சீர்திருத்தம்' பற்றிய புரிதலுக்கு உட்பட்டனர். ஆனால் இராமலிங்கர் சித்தர் மரபிலிருந்தும் பக்தி மரபிலிருந்தும் சமத்துவக் கருத்தியலை உணர்ந்து கொண்டார். அதன்படி ஆன்மீகத் தளத்தில் தனக்கான தனித்தன்மை அதன் மிகுந்த பாதையை உருவாக்கினார்.

தமிழகத்தில் சாதி மத சமய விகற்பங்களை சித்தர் மரபில் சாராம்சத்தைக் கொண்டு கடந்து செல்ல மார்க்கம் கண்ட முன்னோடி இராமலிங்கர் என்பதை வரலாறு தெளிவுபடுத்துகிறது. சமுதாயம் தன் சீர்கேடுகளில் இருந்து விலகிப் புத்துயிர்ப்புக் கொள்ள வேண்டுமென விரும்பியவர். இதனால் சமுதாயத்தைப் பிடித்திருக்கும் தீராத சாபமான சாதியமைப்பைத் தகர்க்கவும் சித்தர் வழி நின்று,

''வரையில் உயர் குலமென்றும்
தாழ்ந்த குலமென்றும்
வகுக்கின்றீர் இருகுலமும்
மாண்டிடக் காண்கின்றீர்''

"சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட் பெருஞ் ஜோதி''

எனத் தெளிவுப்படுத்துகின்றார்.

''நூல் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே''

என்பது சீர்திருத்த உலகுக்கு அவர் தந்த மறைமொழி.

மதங்களின் மீது வீண் பெருமை பாராட்டுவதைக் கடிந்து பேசுகிறார். 'சமரசம்' என்று அவர் கருதியது சமயப் பொதுமைதான். ஆக இன்று மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறையும் தாக்குதலும் மனித சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து. இந்நிலையில் இராமலிங்கர் போன்றோரின் கருத்தும் வழிமுறையும் சமத்துவம் நோக்கிய நகர்வுக்கும் மனித நேயத்தின் பிடிமானத்துக்கும் தீர்க்கமானது வழிகாட்டி. இராமலிங்கரை ஒரு தெய்வ அவதாரமாக வழிபடுவதைவிட அவர் வலியுறுத்திய சாதி சமய மத சமத்துவத்தை நம் வாழ்க்கையில் அனுபவச் சாத்தியமாக்குவதே இராமலிங்கர் நமக்கு விட்டுச் சென்றுள்ள வழிமுறை. மேலும் அவர் விட்டுச் சென்றுள்ள 'ஜீவகாருண்யம்' என்ற உயிர் இரக்கக் கொள்கையை நம் வாழ்வில் அனுபவ சாத்தியமாக்க வேண்டும்.

தமிழகம் தந்த சமத்துவக் குரல் ஆன்மீகத் தளத்திலும் உண்டு என்பதையே இராமலிங்கர் வாழ்க்கையும் வரலாறும் நமக்கு உணர்த்தி உள்ளது.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com