ஆலோசனை மட்டுமே....
அன்புள்ள சினேகிதி,

நான் என் பெண்ணுடன் வந்து இருக்கிறேன். வந்து 3 மாதம் ஆகிறது. என் பெண் என்ஜினியரிங் முடித்துவிட்டு, இங்கே எம்எஸ் படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கிறாள். தனி வீடு எடுத்துக்கொண்டு, கார் வைத்துக் கொண்டு வசதியாக இருக்கிறாள். என்னை எல்லா இடத்திற்கும் அழைத்துக் கொண்டு போனாள். அவள் நண்பர்கள் வரும்போது விதவிதமாக சமைத்துப் போடுவாள். பொழுதுபோனதே தெரியவில்லை. என் கணவர் கூட வரவில்லையே என்ற குறையைத் தவிர, சந்தோஷமாகத்தான் இருந்தேன். போனவாரம் வரை.

நண்பர்களின் ஒருவன் இந்த ஊரைச் சேர்ந்தவன். அவன் அடிக்கடி என் வீட்டுக்கு வருவான். நான் செய்யும் சமையலை ரசித்து, ரசித்து சாப்பிடுவான். எவ்வளவு வடை செய்தாலும் காலியாகிவிடும். கப் கப்பாக ரசம் குடிப்பான்.

என்னை அவனும் அம்மா அம்மா என்று ஆசையாக கூப்பிடுவான். நானும் பெருமையாக அவனைப் பிள்ளைப் போல பார்த்து பார்த்து உபசிரிப்பேன். இந்த மரமண்டைக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்ல. (என்னைச் சொல்லிக் கொள்கிறேன்). அவள் அவனைக் காதலிக்கிறாளாம். அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறாளாம் - என்னிடம் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள்.

இவள் அப்பாவிற்கு ஏற்கெனவே ஒரு தடவை ஹார்ட்அட்டாக் வந்திருக்கிறது. இவளையடுத்து இருக்கும் 2 பெண்கள் தான் அவரைக் கவனித்துக் கொள்கிறார்கள் இப்போது.

இந்த விஷயத்தை நான் எப்படிச் சொல்லுவது. அவளுக்கு உடம்புக்கு மறுபடியும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்.

நான் உடனே ஊருக்கு கிளம்பி போய் விடுகிறேன் என்று என் பெண்ணிடம் சொன்னாலும் அதை அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. எனக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை. நவம்பரில்தான் திரும்ப 'புக்' ஆகியிருக்கிறது. 'டிக்கெட்' தேதியை மாற்றமுடியாது என்று சொல்லிவிட்டாள். இதற்கு நடுவில் இந்தப் பிள்¨ளை வேறு, தினம் வழக்கம் போல் வந்து அப்பளாம், முறுக்கு என்று எது இருந்தாலும்தானே எடுத்து சாப்பிட்டுக் கொண்டு 'அம்மா' சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறான். என்னால் முன்பு போல் அவனிடம் அன்பாகப் பேச முடிவதில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு எந்த புத்திமதியும் வேண்டாம். உங்களால் அவள் மனதை மாற்றக்கூடிய மாதிரி பதில் ஏதேனும் சொல்லுங்கள்...

அன்புள்ள...
நீங்கள் படும் வேதனையால் உள்ள குமுறல் எனக்கு கேட்கதான் செய்கிறது. இங்கே இது போன்ற நிலையில் உள்ள எல்லாப் பெற்றோர்களுக்கும் இந்தப் பிரச்சனை பழகியிருந்தாலும், தங்களுக்கென்று வரும்போது அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள சிரமப்படுகிறார்கள். பிறகு மனம் பக்குவம் ஆகி, குழந்தைகள் உள்ள பாசத்தால் விட்டுக் கொடுத்து விடுவார்கள். இந்த அன்னிய இனத்துக்கும், கலாசாரத்துக்கும் நீங்கள் புதியவராக இருப்பதால் மிகவும் மிரண்டு, துவண்டு போய்வீட்டீர்கள்.

இந்த விஷயத்தில் உங்களுக்கோ, அல்லது உங்கள் பெண்ணுக்கோ புத்திமதி சொல்வது என் பங்கு அல்ல. ஏதாவது ஆலோசனை தான் கொடுக்க முடியும். அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

சில வருடங்கள் இந்த கலாசாரத்தில் இருந்து, அதன் அதிர்ச்சிகளைத் தாங்கிக்கொண்டு படித்து முடித்து, வேலை பார்க்கும் மனமுதிர்ச்சி அடைந்த பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் போது, உண்மையிலேயே பெற்றோர்கள் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஒரு 6 மாதம், 1 வருடம் உள்ளுக்குள் குமைந்து, குமைந்து போவார்கள். உறவினர், நண்பர்களிடம் விஷயத்தைச் சொல்லக் கூசுவார்கள். இதுபோன்ற செய்தியெல்லாம், பெற்றவர்களை விட மற்றவர்களுக்குத் தான் முன்னால் தெரிந்துவிடும் என்பது வேறுவிஷயம்.

இரண்டு வருடம் போனபின் அந்த பெண்ணிற்கும் பெற்றவர்களின் மனதைப் புண்ணாக்கிய குற்ற உணர்ச்சியும், பெற்றோர்களுக்கும் அந்தப் பெண்ணை பார்க்கும் ஏக்கமும் இருந்து ஒன்று கூடுவார்கள். எல்லாம் சுபம்.

ஆகவே உங்களுக்கு எழுதவேண்டாம் என்று சொன்னாலும் என்னுடைய ஆலோசனையைச் சொல்லி விடுகிறேன்.

1. முதலில் அழுகையை நிறுத்தி, முகம் கழுவி, அலங்கரித்துக் கொண்டு அழகாகச் சிரியுங்கள். கண்ணாடியில் பாருங்கள். உங்கள் சிரிப்பே உங்களுக்கு மனதில் தெம்பைக் கொடுக்கும்.

2. இன்று அந்தப் பையன் முறுக்கு சாப்பிட வந்தால் நீங்கள் அவனைப் பிள்ளையாகப் பார்க்க வேண்டாம். ஒரு 'மா'வை முன்னால் சேர்த்துக் கொள்ளுங்கள். ஓர் எழுத்துதானே வித்தியாசம். (வேறுவழியில்லை)

3. எந்த விஷயத்தையும் பக்குவமாக எடுத்துச் சொன்னால், உங்கள் கணவரின் உடல் நலத்துக்கு அபாயம் வராது. நீங்கள் பதட்டப்பட்டு இப்போது சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.

4. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் என்று நான் சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் அது கடினமான காரியம். இருந்தாலும் உங்கள் அழுகையை நிறுத்திவிட்டு, சாதாரணமாகச் செயல்பட ஆரம்பியுங்கள். அந்த அமெரிக்கப் பையனிடமிருந்து ஒதுங்கி விடாதீர்கள். இப்போது வேறு கண்ணோட்டத்தில் அவனைப் பார்ப்பதால், நீங்கள் அவனை இன்னும் நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன்.

5. உங்கள் பெண்ணுக்கு அவள் உணர்ச்சிகள் புரிந்து கொள்ளும் தாயாக இருந்து உங்கள் எதிர்பார்ப்புகளை விட, அவள் எதிர்கால சந்தோஷம் தான் மிக முக்கியம் என்று செயல்பட்டால் மிகவும் நெகிழ்ந்து போய்விடுவாள். சிலசமயம், ஆதாரம் இல்லாத காதல் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால் தானே வலுவிழந்து போய்விடக்கூடிய சாத்தியமும் உண்டு.

6. உங்கள் பெண்ணின் முடிவு சரியா, தவறா என்பதை நான் விவாதிக்கவில்லை. உண்மை நிலையை விளக்குகிறேன். 2 வருடங்கள் வேதனையில் கழித்து, பிறகு அதை ஏற்றுக் கொள்வதைவிட, இப்போதே உங்கள் ஆதரவைக் கொடுப்பது, எல்லோருக்கும் நிம்மதியை கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

7. கல்யாண முறுக்கு சுற்று பெரிதாக இருக்கட்டும். (பயமாக இருக்கிறது. நேரில் பார்த்தால் என்னை அடித்துவிடுவீர்களோ என்று).

வாழ்த்துக்கள்,
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com