டாக்டர் பாலகிருஷ்ணன் பிரபாகரன்
டாக்டர் பாலகிருஷ்ணன் பிரபாகரன் - இவருக்கு அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற தேசிய விஞ்ஞான அறநிறுவனம் (National Science Foundation) கரீயர் அவார்ட் நிதியுதவி அண்மையில் வழங்கியுள்ளது. இவரது ஆராய்ச்சிப் பணியை கௌரவிக்கவும், ஊக்குவிக்கவும் இந்நிறுவனம் அமெரிக்க டாலர் 400,000 (இந்திய ரூபாய் சுமார் 1,80,00,000) பரிசுத் தொகை வழங்கியுள்ளது.

இந்தப் பரிசு, இளைய தலைமுறையின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர் களுக்கும் வழங்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரம். இதைப் பெற்றவர்கள் இருபத்தியோராம் நூற்றாண்டின் தலை சிறந்த ஆராய்ச்சியாளர் களாகவும், பேராசிரியர்களாகவும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. இவர்களது ஆராய்ச்சியின் போக்கையும் (directions) அதனின் எதிர்கால நல் விளைவுகளையும் (potential) கருத்தில் கொண்டே இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

டாக்டர் பிரபாகரனின் ஆராய்ச்சி, அசைவூட்டுத் தகவல் தளத்தைச் சார்ந்தது (Animation Databases). இந்தத் தகவல் தளம் ஏற்கனவே உள்ள அசைவுப் படிமங்களை (animation models) வைத்து உருவாக்கப்படுகின்றது.

விஞ்ஞானம், மருத்துவம், கல்வி, உடல் பயிற்சி என்று பல துறைகளிலும் இவரது ஆய்வின் தாக்கம் இருக்கும் எப்படி என்று டாக்டர் பாலகிருஷ்ணனிடமிருந்தே அறிவோம்:

கே : உங்களைப் பற்றியச் சில வார்த்தைகள்...?

ப : நான் காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் படித்த பின்பு, சென்னை ஐ.ஐ.டி-யில் கணிப்பொறி அறிவியலில் (Computer Science) ஆராய்ச்சிப் படிப்பை (PhD) பல் ஊடக அமைப்பில் (Multi Media Systems) தொடர்ந்தேன். அதன்பின், மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் காலேஜ் பார்க்கில் ஆராய்ச்சி மேற்படிப்பை (post doctoral) முடித்தேன். சென்னை ஐ.ஐ.டி-யிலும், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்திலும், மேரிலேண்ட் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினேன். தற்போது டெக்ஸாஸ் பல்கலைகழகம் - டல்லஸ்ஸில் (University of Texas at Dallas) கணிப்பொறித்துறையில் துணைப் பேராசிரிய ராகப் பணியாற்றிக்கொண்டே எனது ஆராய்ச்சியையும் தொடர்ந்து கொண்டிருக் கிறேன். இங்கு, என் ஆய்வுக்கு மிகுந்த ஆதரவும் ஊக்குவிப்பும் கிடைக்கின்றது.

கே : உங்கள் குடும்பத்தைப் பற்றி...

ப : என் தந்தை காரைக்குடியில் எலெக்ட்ரோ கெமிக்கல் ஆய்வுக்கூடத்தில் கரோஷன் விஞ்ஞானியாகப் பணியாற்றினார். ஆதலால் என் பட்டப் படிப்பை அங்கு படித்தேன். பின்பு என் படிப்பும் ஆய்வுகளும் என்னை உலகின் பல மூலைகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளன. என் மனைவி ராஜேஸ்வரி என் முயற்சிகளுக்கு மிகவும் உறுதுணையாயுள்ளார். எனக்கு கோகுல், திவ்யா என்று இரு செல்வங்கள்.

என் பொழுதுபோக்கு - நீச்சல், நடை, ஆய்வுக் கட்டுரைகளும், தென்றல் மற்றும் புத்தகங்கள் படிப்பது.

கே : எப்பொழுது உங்கள் ஆராய்ச்சியை ஆரம்பித்தீர்கள்?

ப : நான் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இருக்கும்போது பல் ஊடக தகவல் தளத்தில் (multi media database) முப்பரிமாணப் படிமங்கள் (3D modeling) பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினேன். கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இதைத் தொடர்கிறேன். எனது துறையைச் சார்ந்த பல முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிலை (Masters and PhD) மாணவர்கள் இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கே : உங்கள் ஆராய்ச்சியின் குறிக்கோள்?

ப : அசைவூட்டுத் தகவல் தளத்தில் பல புதிய யுக்திகளைக் கையாளலாம். இதன் மூலம் அசைவுகள் கோர்வைப்படுத்தப்பட்டுத் தகவல் தளத்தில் வைக்கப்படும் (content is created with animation sequences). இவ்வாறு உருவாக்கப் படும் தளத்திலிருந்து ஒருங்கிணைந்த பல புதிய அசைவூட்டுப் பரிமாணங்களையும், சேர்வு களையும் ஏற்படுத்த முடியும். இதற்குத் தோதாக ஒரு படைப்பாளர் கருவித் தொகுப்பும் (Authoring Tool Kit) உருவாக்கப் படுகிறது. இந்தக் கருவியைப் பயன்படுத்திப் புதிய அசைவுகள் தயாரிக்கப்படும்.

இத்தகைய அசைவுகளை வைத்துப் பல புதிய பாடங்கள் கற்பிக்கப்படும். உதாரணமாக, சில உடற்பயிற்சிப் பாடங்களை (physical therapy) படமாகக் காண்பிக்கலாம். இப்படங்களைப் பார்த்து இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சிகள் செய்ய இவை உதவும். காது கேளாதவர்க்கு வித்தியாசமான சைகை மொழி உருவாக்க இவ்வாராய்ச்சி வழிசெய்யும். இந்தச் சைகை மொழி, வாய்மொழியுடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைப்படுவடுவதால், மிகச் சுலபமாகப் புரியக்கூடிய வகையில் அமையும். விஞ்ஞானத்துறையிலும் (விஞ்ஞான விழிசார்பு - scientific visualization), கல்வித்துறையிலும் பல புதிய பாடங்களைக் கற்பிக்க இப்புதிய முறை ஒரு வரப்பிரசாதமாக உருவாக வாய்ப்புள்ளது - உ.ம்., விரிவுரை செய்யும்போது வார்த்தைகளை சைகை மொழியில் உடனுக்குடன் மாற்ற உதவும். எந்திரனியல் (robotics) துறையிலும் இந்த ஆராய்ச்சி மிக முக்கியப் பயன்பாடுகளை விளைவிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

நேர்காணல்: உமா வேங்கடராமன்
தமிழாக்கம்: வேங்கடராமன், உமா

© TamilOnline.com