கடலுக்குப் பயன்படாது முத்து!
சென்ற கட்டுரையில் பாலைக் காட்டு வழியே சென்ற தலைவன் உடன்போகிய தலைவியைக் கண்டோம்; அவளைத் தேடிப் பின்வந்த அவள் வீட்டாரையும் கண்டோம். அவ்வாறு உடன்போனதை அறிந்தபின் அவர்களைத் தேடிச் செல்லும் தலைவியின் வீட்டார் வழியில் எதிர்ப்படுவோரை உசாவுவது வழக்கம். தலைவியின் வீட்டாரில் முக்கியமான ஒருத்தி தலைவியை வளர்த்த செவிலித்தாய்.

அது போன்ற ஒரு செவிலி பாலை வழியில் தேடிச் செல்லும்போது எதிரில் வந்த முனிவர்கள் குழாத்தைப் பார்த்துப் பேசியபோது நடந்த உரையாடலைக் கவனிப்போமே இம்முறை. இது சங்கப் பாடல்களில் எட்டுத்தொகையில் "கற்றவர் ஏத்தும் கலி" என்று வெகுவாகப் பாராட்டப் பெறும் கலித்தொகையில் பாலைக்கலி என்னும் பிரிவில் உள்ள "எறித்தரு கதிர் தாங்கி" என்று தொடங்கும் பாடலில் காண்பது; பாடிய புலவர் சேரமான் பாலை பாடிய கடுங்கோ என்னும் சேரமன்னன்.

செவிலி முனிவர்களைப் பார்த்து வினவுகிறாள்:

செவிலி: "ஐம்புலன்களும் உங்கள் சித்தத்தின்படி ஏவல் செய்யும் ஒழுக்கம் உடைய பெரியீர்களே!

என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ, பெரும?
(கலித்தொகை:9:6-8)

[புணர் = கூடு, சந்தி; அன்னார் = அதுபோன்றவர்கள்;
பெரும = பெரியவரே; காணிர் = காணீர் = காணாது இருந்தீர்]

"என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் தமக்குள் மட்டுமே இரகசியமாகச் சந்தித்துக் காதலித்தவர்கள் இப்போது பிறரும் அறியுமாறு கூடியுள்ளார்கள்; அத்தகைய இருவரைக் காணாது இருந்தீரோ?"

முனிவர்:

காணேம் அல்லேம்! கண்டனம் கடத்திடை!
யாண்எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மாண்இழை மடவரல் தாயிர்நீர் போன்றீர்
(கலித்தொகை: 9: 9-11)

[கடம் = காடு; யாண் = புது; அண்ணல் = உயர்ந்தவன், தலைவன்;
சுரம் = பாதை; முன்னு = முனைந்த; மாண் = ஒளி; இழை = நகை]

"அவர்களைக் காணாமல் இல்லை நாங்கள்; காட்டில் கண்டோம்; புத்தம்புது அழகுடைய தலைவனோடு இந்தக் கடினமான பாதையில் போக முனைந்த ஒளிநகை அணிந்த வஞ்சமறியாத பெண்ணின் தாயார் போலும் நீர்!" என்று சொல்லி அவர் உயர்ந்த காதல் அறம் ஒன்றைப் போதிக்கின்றார். அண்ணல் என்ற சொல்லால் அவன் தலைவன் என்ற பதவிக்குத் தகுதி உடையவன் என்று கோடி காட்டிவிட்டார். அடுத்து அழகிய உவமைகள் காட்டிச் செவிலியை அறிவுறுத்துகின்றார்.

முதலில் மலையில் பிறந்த சந்தனத்தை எடுத்துக் காட்டுகின்றார் முனிவர்:

பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்குஅவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே!
(கலித்தொகை: 9: 12-14)

[சாந்தம் = சந்தனம்; படு =படர்த்து, பூசு; படுப்பவர் = பூசுவோர்; அல்லதை = அல்லது; ஆங்கு = அங்கே]

"பல நல்ல குணங்கள் பொருந்திய நறுமணமுள்ள சந்தனம் தன்னை அரைத்துப் பூசுவோர்க்கு அல்லாமல் மலையுள்ளே பிறந்தாலும் மலைக்கு என்ன பயன் செய்யும்? நினைத்துப்பார்த்தால் நும் மகளும் நுமக்கு அத்தகையவளே! (அவள் பிறந்த பயனைத் தரும் காலத்தில் நுமக்குப் பயன்படாள்; அவளுக்கு என்று வகுத்த ஆணுக்கே அவள் பயனாவாள்!)"

செவிலிக்குப் புதியது கேட்டதுபோல் உணர்வு. அவள் ஆர்வத்தைத் தூண்டுகிறது இந்த முதல் உவமை. முனிவரின் வாக்கில் பொருள் பொதிந்திருப்பதை அறிந்து இன்னும் கேட்கத் தொடங்குகிறாள். முனிவரும் தொடர்கிறார் இரண்டாவது உவமையோடு; அது மலையிலிருந்து மடுவுக்கு எடுத்துச் செல்கிறது செவிலியின் கண்ணையும் கருத்தையும்:

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்குஅவைதாம் என்செய்யும்?
ஓரும்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே!
[சீர் = ஒளி; கெழு = நிறைந்த; முத்தம் = முத்து; ஓர் = சிந்தி;
ஓருங்கால் = சிந்திக்கும் பொழுது]

"ஒளிநிறைந்த வெள்ளை முத்துகள் தம்மை அணிபவர்க்கு அல்லது கடல்நீருள்ளே பிறந்தாலும் அந்த நீருக்கு அவை என்ன பயன் செய்யும்? சிந்தித்துப் பார்த்தால் நும் மகளும் நுமக்கு அத்தகையவளே!" செவிலிக்கு அவர் உரைக்கும் அறம் விளங்கத் தொடங்குகிறது. ஆயினும் முனிவர் இரண்டோடு நிற்கவில்லை; மூன்றாவது உவமையும் சொல்கிறார். மூன்று உறுதிப்படுத்துவது. ஏலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் மூன்று தடவை விலையை அறிவிப்பார்கள்; நீதிமன்றத்தில் சாட்சியை மூன்றுமுறை பெயர்சொல்லி அழைப்பார்கள். அமெரிக்காவிலும் குற்றவாளிக்கு மூன்று வாய்ப்புகள் சிறைசெல்லுமுன் ("Three strikes and You are Out!") என்பது கோட்பாடு. வள்ளுவனும் மூன்று ஒற்றர்கள் தனித்தனியே கண்டது ஒன்றுபட்டால் உறுதியாக நம்பலாம் என்பான்!

"ஒற்றுஒற்று உணராமை ஆள்க!
உடமூவர் சொல்தொக்க தேறப் படும்"
(குறள்:590)

மேற்கொண்டு அடுத்த இதழில் பார்ப்போம்.

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com