'தேக'த்தை எதிர்க்கும் காங்கிரஸ்
சினிமாவிற்குள் அரசியல் கட்சிகள் நுழைவது இப்போது மிகவும் அதிகம் ஆகிவிட்டது. ராமதாஸ், கிருஷ்ணசாமி என்று அரசியல் தலைவர்கள் தமிழ் சினிமாக்கள் பற்றி அதிகம் விமர்சனம் செய்து போராட்டம் நடத்துகிறார்கள். இப்போது காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்பைப் பெற்றிருக்கிறது 'தேகம்' என்கிற தமிழ் படம்.

ஜிசம் என்ற இந்திபடத்தை தமிழில் 'தேகம்' என்ற பெயரில் டப்பிங் செய்திருக்கிறார்கள். படத்தில் பிபாஷா பாசு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று காங்கிரஸ்காரர்களால் சர்ச்சைக்குரியதாக பேசப்படுகிறது. படத்தில் நாயகியின் பெயர் சோனியா. இப்படத்தில் இன்னொரு பாத்திரத்தின் பெயர் பிரியங்கா.

இந்த பெயர்களே இன்று காங்கிரஸ் காரர்களால் பிரச்சனையாக்கப் பட்டுள்ளது. படத்தில் கொஞ்சம்கூட அரசியல் கலப்பு இல்லை. ஆனாலும் இப்படம் சென்னையில் திரையிட்டுள்ள திரையரங்குகளில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் கதை என்னவென்று தெரியாமல் எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகள் சினிமாவினுள் நுழைவது அதிகப்பட்டு வருவதாக படத்தை தமிழில் டப் செய்தவர்கள் கூறிப் புலம்புகிறார்கள். சர்ச்சைக்குரிய பெயர்கள் நீக்கப்பட்டு, இப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் பார்ப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

படம் திரைக்கு மீண்டும் வருமா என்பது காங்கிரஸ் தலைவர்கள் கையில்தான்...

கேடிஸ்ரீ

© TamilOnline.com