அகிம்சை வன்முறையைக் காட்டிலும் வலிமையானது
தற்போதைய சூழலில் காந்திஜி, வள்ளலார் ஆகியோரின் கொள்கைகளை அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. அதோடு அவர்களது தத்துவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் அவசியம்.

எவ்விதமான பிரசார சாதனங்களும் இல்லாத ஒரு காலகட்டத்தில் அவர்களின் கொள்கைகள் மக்களை ஆட்கொண்டன. அன்பின் வலிமையே அதற்குக் காரணம். காந்தியின் அகிம்சைக் கொள்கைகள் வன்முறையைக் காட்டிலும் வலிமையானவை. காந்திஜி இன்றிருந்தால் வெற்றிகரமான அரசியல்வாதியாக இருந்திருக்க முடியாது.

தங்கள் கோட்பாடுகளைக் காந்திஜியும் வள்ளலாரும் எவர்மீதும் திணித்தது கிடையாது. எதையும் சட்டம் போட்டுக் கொண்டு வந்து விடமுடியாது.

ஜெயகாந்தன், எழுத்தாளர் - சென்னையில் நடைபெற்ற 38வது ஆண்டு வள்ளலார் - காந்தி விழாவில்.

*****


நாட்டில் தனக்கு நிகரான மருத்துவக்கல்வி நிறுவனம் இல்லை என்று பெயர் பெற்றுள்ள சிஎம்சியில் இருந்து பட்டம் பெற்று வெளியேறுகிறீர்கள். இக்கல்வியை நீங்கள் மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக முழுமையாக அர்ப்பணிக்கத் தயாராக வேண்டும். இது உங்களுக்கு மட்டுமல்ல, மருத்துவ வசதி எட்டாத கிராமங்களுக்கும் சென்று மருத்துவ உதவி அளிக்கும் தன்னிகரற்ற சேவையில் சிறந்து விளங்கும் கிறித்தவ மருத்துவக் கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும்.

சிஎம்சி அடிப்படை மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரையிலான 4 நிலை சேவையை அளித்து சமுதாயத்திற்கு சிறந்த பணியாற்றி தனித்துவம் பெற்றுள்ளது. இதற்கு காரணம் மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் மற்றும் சேவை அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களே.

ராம்மோகன் ராவ், தமிழக ஆளுநர் - வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில்.

*****


மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகிதத்தினர் விவசாயத்தைச் சார்ந்த உள்ளனர். ஆனால் அமெரிக்காவிலோ 2.3 சதவீதத்தினர்தான் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவில் விவசாயத்துக்கு ஏராளமான மானியம் தரமுடிகிறது. ஆனால் நம் நாட்டில் அது பெரிய பிரச்சினையாக உள்ளது.

வேலைவாய்ப்புடன் இணைந்த பொருளாதார முன்னேற்றம், விவசாயத்தின் மூலம்தான் ஏற்படும். விவசாயத்தின் முக்கியத்துவம் காக்கப்பட வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் இடங்களில் அது குறித்து கவனம் செலுத்தி ஆராயப்பட வேண்டும். உற்பத்திப் பொருள்களின் தரம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஏற்றுமதிச் சந்தையில் போட்டியிட முடியும்.

விவசாய மானியம் குறைக்கப்பட்டாலும் அந்த வருவாய் திரும்பவும் விவசாயத் துறைக்கே செலவிடப்பட வேண்டும்.

டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி - மெட்ராஸ் தொழில் வர்த்தக சபை நடத்திய கருத்தரங்கில்.

*****


கிரிக்கெட் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. இதைவிட வாழ்க்கையும் நாடும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றில் நிகழும் போட்டிகளைச் சந்திக்க நாம் நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். போட்டிகளைச் சந்திக்க இளைஞர்களைத் தயார்படுத்த வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் எல். பாலாஜி இந்திய அணியில் இடம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. வேகப்பந்து வீச்சு உத்திகளை மேலும் அவர் கற்றுக் கொள்ள வேண்டும். அர்ப்பணிப்புடன் அவர் விளையாடினால் பிரகாசமான வாய்ப்பு அவருக்கு காத்திருக்கிறது.

கபில்தேவ் - ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களிடம்.

*****


2021ம் ஆண்டில் எனக்கு 90 வயதாகும். அப்போது இந்த விண்வெளி மையத்திற்கு வரும்போது இங்கிருந்து மற்றொரு கிரகத்துக்கு நானும் ஒரு பயணியாகச் சென்றுவிட்டு பத்திரமாகத் திரும்பும் ஒரு நிலையை எதிர்பார்க்கிறேன்.

சதீஷ் தவான் விண்வெளி மையம் ஒரு சர்வதேச விண்வெளி நிலையமாக மாறுவதையும், இங்கிருந்து விண்ணுக்குக் கிளம்பிச் சென்று செயற்கைக் கோள்களைச் செலுத்திவிட்டு மீண்டும் திரும்பி வரக்கூடியதும், பலமுறை பயன்படுத்தக்கூடியதுமான செயற்கைக் கோள் செலுத்து வாகனங்கள் லாவகமாகத் தரை இறங்கும் நாளையும் தீர்க்கதரிசனமாகக் காண்கிறேன்.

அப்துல் கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர் - ஸ்ரீஹரி கோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் விஞ்ஞானிகளிடையே பேசுகையில்.

*****


நீதிபதிகள் முதலில் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை அடையாளம் காண வேண்டும். அதைச் சரியாகப் புரிந்து கொண்டு தீர்ப்பளிக் வேண்டும். 'வாழ்வியல் கலை' பற்றிய கருத்தரங்கில் நான் உள்பட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் கலந்துகொண்டோம். அதன் பின்னர் எங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.

சமூக ஏற்றத்தாழ்வை அடையாளம் காணாமல் இருப்பதே தோல்விதான். அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட நம்பத் தகுந்த புள்ளி விவரங்கள் இக்கருத்தரங்கில் தரப்படவுள்ளன. இதுபோன்ற கருத்தரங்குகளை நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் முழு அளவில் பயன்பத்திக் கொள்ள வேண்டும்.

ரூமாபால், உச்சநீதிமன்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றமும், ஆசிய-பசிபிக் ஆலோசனை மையமும் இணைந்து நடத்திய கருத்தரங்கில்.

*****


சச்சின் ·பார்மில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அவர் ஒரு தூங்கும் எரிமலை. அவரது பேட்டில் இருந்து எப்போது வேண்டுமானாலும் ரன்கள் வெடித்துச் சிதறலாம்.

ட்·பி, நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர், பேட்டி ஒன்றில்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com