TEAM - அமைதியாய் ஒரு ஆச்சரியம்
"வாங்க, வாங்க! இந்த முறை இந்தியாவிற்கு விடுமுறைக்குப் போகவில்லையா?"

"பார்த்து ரொம்ப நாளாச்சு, நீங்களுமா TEAM-ல் இருக்கீங்க! மிக்க சந்தோஷம்"

"என் பொண்ணு இங்க Dance ஆடப் போறா!"

"அந்த இட்லியை அப்படியே கடைசி மேசை மேல வச்சிருங்கோ..."

வருடம் மூன்று முறை கூடி, தமிழ்நாடு மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருக்கும் கிராமப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கிவரும் TEAM அமைப்பின் உறுப்பினர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பேசிக் கொண்டவற்றில் சில துளிகள்தான் இவை!! ஜூலை 22, 2006 அன்று மாலை 5 மணியிலிருந்தே, மவுண்டன் வியூ கம்யூனிட்டி வளாகத்தில் சாரை சாரையாக கல்யாணக் கூட்டமென மக்கள் படையெடுத்தனர்.

இந்தியாவின் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும், உடல் ஊனமுற்ற, பார்வையற்ற குழந்தைகளுக்கும் உதவி செய்யும் எண்ணத்தோடும் எத்தனையோ அமைப்புகள் அமெரிக்காவிலிருந்து செயல் பட்டு வருவது உங்களுக்கு தெரிந்ததே!

அப்படிப்பட்ட அமைப்புகளில் ஒன்றே TEAM (www.indiateam.org). சேவை செய்யும் குறிநோக்கு ஒன்றாக இருப்பினும், இயங்கு வதிலும், நிதி வளர்க்கும் முறையிலும், செயல்படுத்தும் திறனில் தனக்கென ஒரு தனிப்பாதை அமைத்துக் கொண்டது TEAM நிறுவனம்.

ஒவ்வொரு உறுப்பினரும் மாதம் $10 அல்லது வருடத்திற்கு $120 நிதி வழங்குகிறார்கள். நான்கு மாதத்திற்கு ஒரு முறை கூடி, அதுவரை சேர்ந்த நிதியுதவியை $500 ஆகப் பிரித்து ஒவ்வொரு பள்ளிக்கும் கொடுத்து விடுவார்கள். பகிர்ந்தளிப்பதற்கு குடவோலை முறை உபயோகப்படுத்தப்பட்டு, சுமார் 80 முதல் 100 வரை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள், அவர்களுக்குத் தெரிந்த, அடிப்படை வசதிகள் தேவையான பள்ளிக்கு அந்த $500-ஐ செலவு செய்யலாம். இப்படி நான்கு மாதத்திற்கு வசூலிக்கப்பட்ட தொகை முழுவதும், மாத இறுதியில் பகிர்ந்தளிக்கப் பட்டுவிடுவதால், கடைசியில் இருப்பு '$0' (பூஜ்ஜியம்) ஆகிவிடும். இதே முறையை திரும்பவும் அடுத்த 4 மாதத்தில் பயன்படுத்துவார்கள்! விழாவை நடத்துவதற்குத் தேவையான நிதியையும் உண்டி மூலமாக திரட்டி விடுவதால், operational cost எப்பொழுதுமே TEAM-க்கு இருந்ததில்லை!!! அப்படிப்பட்ட கூட்டங்களில் ஒன்றே இன்று இங்கே !

அரங்கம் நிரம்பவும், சரியாக 6.15 மணிக்கு, குழந்தை சகானாவின் கடவுள் வாழ்த்துடன் விழா ஆரம்பித்தது. நிகழ்ச்சியை உமா கைலாசம் தொகுத்து வழங்கினார். வந்திருந்த அனைவரையும் பாலா அவர்கள் வரவேற்று TEAM-ல் பங்கேற்பதில் தனக்கு ஏற்பட்ட மகிழ்வான நிகழ்ச்சிகளை கூட்டத்தினருடன் பகிர்ந்து பெருமிதமடைந்தார். இந்த அமைப்பினால், தனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள குமார் குமரப்பன், லோகநாதன் பழனிசாமி மற்றும் இந்தியாவிலிருந்து விஜயலட்சுமி வெங்கடேசன் ஆகியோரும் முன்வந்தனர்.

எளிமையான, நல்ல நோக்கத்துடனும், மிகவும் சிறந்த முறையில் நடத்தும் விதமே தன்னை இந்த இயக்கத்தில் ஈர்த்தது என குமார் கூறியபோது, அரங்கமே அதை ஆமோதித்தது.

TEAM-ன் சிறப்புகளை, தனது அலுவலக அறக்கட்டளை அமைப்பிடம் எடுத்துரைத்து, திட்டங்களுக்கு செலவிட $5000 பண உதவி வாங்கியதை லோகநாதன் அறிவித்தபோது, அவர் எடுத்த தனி முயற்சிக்கு மக்களின் கரவொலி பரிசாகக் கிடைத்தது - பலத்த கைதட்டலின் நடுவே மக்களின் புதிய உற்சாகமும் தெரிந்தது! தொலைதூரத்திலிருந்து பயன்பெற்றுவரும் பள்ளியொன்றைப் பற்றி விஜயலட்சுமி எடுத்துக் கூறினார். 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உட்காரும் நாற்காலி வசதியை ஏற்படுத்திக் கொடுத்த TEAM அமைப்பைப் பாராட்டி அவர் மிகவும் நெகிழ்ச்சியோடு பேசியபோது, உண்மையில் எல்லோர் முகத்திலும் ஒரு பெருமிதம்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த, Sierra Atlantic நிறுவனத்தின் CEO, ராஜு ரெட்டி அவர்கள், தனக்கும் கணிப்பொறிக்கும் ஏற்பட்ட நட்பையும், அது வளர்ந்து தன்னை ஒரு நிறுவனத்தின் தலைவராக வளர்த்ததையும் அழகாக எடுத்துக் கூறினார்.

"பண உதவி அளிப்பது ஒரு பெரிய விஷயமென்றாலும், அதை நல்ல முறையில் செலவு செய்து நன்மை பயப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை" என்று அவர் சொன்ன போது, அதிலுள்ள ஆணித்தரமான உண்மை அழகாகப் புரிந்தது. கிராமிய மாணவ, மாணவியர்களுக்கு சென்றடையும் இந்த நன்மைகளில் TEAM-ன் பங்கு மிகப் பெரியது எனப் பாராட்டி, தானும் இந்த அமைப்பில் உறுப்பினராய் இருப்பதில் பெறுமைப் படுகிறேன் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

TEAM-ன் செய்தித் தொகுப்பை, கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி மிகவும் எளிய முறையில் தொகுத்து வழங்கினார். செய்தி வந்தவிதம் எளிமையாக இருந்தாலும், அது கொண்டு வந்த எண்கள் பிரமிக்க வைத்தது.. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு இதோ...

8 வருடமாய் நடந்து வரும் TEAM-ன் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 1024
அமெரிக்காவின் பலபகுதிகளில் மட்டு மல்லாது, இப்போது TEAM கிளைகள் சிங்கப்பூர், இந்தியாவிலும் பரவியுள்ளது

இதுவரை நிறைவேறிய திட்டங்கள் - 792
இதுவரை பள்ளிகளுக்கு செய்த நிதியுதவி - $396,000 (சுமார் 1.8 கோடி ரூபாய்)
பயன்பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை - 1 மில்லியன் + (10 லட்சத்திற்கும் மேல்)
இதுவரை அமைப்பை நடத்துவதற்கான செலவீடு - $0 (பூஜ்ஜியம்)
இந்த நிகழ்ச்சியில் மட்டும் 86 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரூபாய் 20 லட்சம் ($44,500) வரை வழங்கப்பட்டது. ஸ்ரீதர் மைனர் வெளியிட்ட சிறு திரைப்படத் தொகுப்பு, TEAM-னால் பயன்பெற்ற குழந்தைகளையும், பள்ளிகளையும் பளீரென்று படம்பிடித்துக் காண்பித்தது!

நிகழ்ச்சியின் இடையே இரவு சாப்பாட்டு விருந்தில், ஒவ்வொரு உறுப்பினரும் வீட்டில் செய்து கொண்டுவந்திருந்த அறுசுவை உணவோடு, கமகமவென மணம் பறக்க அண்ணாமலை பழனி தயார் செய்து கொடுத்த காஃபியைப் பார்த்து அசந்து போனது நண்பர்கள் மட்டுமல்ல, பல குடும்பத் தலைவிகளும் தான்!

விருந்திற்குப்பின், குழந்தைகள் பங்கேற்ற பல்சுவை நிகழ்ச்சி அனைவரையும் அப்படியே நாற்காலியில் ஆணி அடித்தது போல் அமர வைத்தது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி, அழகான வர்ணனையுடன் அமர்க்களம் செய்தார் கருணாகரன் பழனிசாமி. மேடையில் ஆடல், பாடல், நாடகங்களென ஒரு இயல், இசை விருந்தே நர்த்தனமாடியது! நிகழ்ச்சியை நன்றி கூறி நிறைவு செய்தார் ஜெயகுமார்.

கோபால்

© TamilOnline.com