புலியைக் கொன்ற வீரப்புலி (பகுதி - 1)
இந்தக்கதை சிறுவர் சிறுமியர்களுக்காக எழுதப்பட்டது. பெரியவர்களும் படித்து அவர்களுக்கு மொழி பெயர்த்துச் சொல்லலாம்!

ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ¡ஜா இருந்தார். பெயர் நல்லராஜா! பெயருக்குப் பொருத்தமாக ஊரை நன்றாக ஆண்டுவந்தார்.

அந்த நாட்டின் பக்கத்தில் ஒரு அடர்ந்த காட்டில் ஒரு பயங்கரமான புலி வசித்து வந்தது. அது அவ்வப்பொழுது காட்டின் பக்கத்திலிருந்த கிராமத்தில் இரவில் நுழைந்து ஆடு மாடுகளைக் கொன்றுவிட்டுப் போய்விடும். அந்தப் புலியின் அட்டகாசம் தாங்காமல் கிராமத்து மக்கள் நல்லராஜாவிடம் முறையிட்டனர். ராஜாவும் உடனே தனது ராணுவப் படையிலிருந்து சில வீரர்களை அனுப்பி அந்தப் புலியைப் பிடித்துவரக் கட்டளையிட்டார். ஆனால் 'போன மச்சான் திரும்பி வந்தான்' என்கிற மாதிரி, புலியைப் பிடிக்க முடியாமல் அந்த வீரர்கள் திரும்பி வந்துவிட்டனர். பலமுறை பல வீரர்களை அனுப்பியும் அந்தப் புலி, வீரப்பன் மாதிரி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்துக்கொண்டே வந்தது! நல்லராஜாவுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை.

இந்த சமயத்தில்தான், நம் கதாநாயகன் 'வீரப்புலி' இந்த கிராமத்துக்கு வேலை தேடி வருகிறான். அவன் ரொம்ப சாமர்த்தியசாலி. ஆனால் படு சோம்பேறி. கிராமத்து மக்கள் கவலையுடன் இருப்பதைப்பார்த்து ''ஏன் இப்படிக் கவலையுடன் இருக்கிறீர்கள்?'' எனக் கேட்க அவர்களும் புலியைப் பற்றிச் சொன்னார்கள். அவனும் ''அட அப்பாவி ஜனங்களே, என் பெயர் என்ன தெரியுமா? வீரப்புலி. புலிகளுக்கெல்லாம் பெரிய புலி. நான் எளிதாக இந்தப் பூனைக்குட்டியைப் பிடித்து விடுவேன். உங்கள் ராஜாவிடம் கூட்டிச் செல்லுங்கள்'' எனக் கொக்கரித்தான் (வயிற்றில் கொஞ்சம் புளியைக்கரைத்தாலும்) கிராமத்து மக்களுக்கோ ஒரே மகிழ்ச்சி. உடனே அவனை ராஜாவிடம் கூட்டிச் சென்றனர்.

நல்லராஜாவும் வீரப்புலியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ''உன்னால் எப்படி இந்த பயங்கரப் புலியைப் பிடிக்க முடியும்?'' என ஏளனமாகக் கேட்டார். வீரப்புலியோ ''ராஜா என்னை நம்புங்கள். ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். அதற்குள் ஒரு நல்லவழி கண்டு பிடித்து புலியைக் கொல்வேன்'' எனச்சொல்ல, ராஜாவும் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார். ''என் அரண்மனையில் விருந்தாளியாக இரு. ஆனால் ஒரு எச்சரிக்கை. நீ புலியைக் கொல்லவில்லை யென்றால் உன்னையே அந்தப் புலிக்கு இரையாகப் போட்டுவிடுவேன்'' என ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். வீரப்புலியோ 'ஒரு மாதம் உணவுக்குக் கவலை இல்லை' என்று நினைத்து சரி என்று ஒப்புக்கொண்டான்.

ஒரு மாதம் வீரப்புலி நன்றாக ராஜ உணவு உண்டான். தூங்கினான். மாதக் கடைசியில் நல்லராஜா அவனைக்கூப்பிட்டு ''புலியை எப்படி கொல்லப் போகிறாய்?'' எனக்கேட்டார். வீரப்புலி சொன்னான்: ''ராஜா, என் உடம்பு முழுவதும் ஒரு இரும்புக் கவசத்தை அணிவிக்கச் சொல்லுங்கள். அந்தக் கவசத்தில் பல கத்திகளைத் தொங்கவிடச் சொல்லுங்கள். நான் அந்தப் புலியை கட்டிப்பிடித்து சண்டை போட்டு இந்த கத்திகளால் குத்திக் கொன்று விடுவேன்."

"கிராமத்துக்கு வெளியில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் என்னை ஏற்றிவிடச் சொல்லுங்கள். மரத்துக்குக்கீழே ஒரு வெள்ளாட்டைக் கட்டி வைத்துவிடுங்கள். அப்போதுதான் புலி மோப்பம் பிடித்து அங்கேவரும்'' என்றான். நல்லராஜாவுக்கோ அவனிடம் நம்பிக்கை இல்லை. ஆனாலும் வீரப்புலி சொன்னபடிச் செய்ய உத்திரவிட்டார். சேவர்களும் அவனுக்கு இரும்புக் கவசத்தை அணிவித்து ஒரு பெரிய மரத்தின் கிளையில் உட்கார வைத்து, கீழே ஒரு வெள்ளாட்டை மரத்துக்குப் பக்கத்தில் கட்டி வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டுப் போய்விட்டனர்!.

வீரப்புலிக்கோ இரும்புக்கவசத்தின் பளு தாங்க முடியவில்லை. நேரம் செல்லச் செல்ல பசி வயிற்றைக் குடைய ஆரம்பித்தது. தூக்கம் கண்களைச் சுழற்றியது. புலி வருவதாகத் தெரியவில்லை. 'சரி, கொஞ்ச நேரம் படுத்துக் கொள்ளலாம்' என, கத்திகள் கீழே விழாமல், கிளை மீது படுத்துக் கொண்டான். ஆனால் தூக்க தேவதை அவனைச் சீக்கிரமே தழுவிக் கொண்டு விட்டாள்.

இதற்குள் புலி ஆட்டை மோப்பம் பிடித்து மரத்தை நோக்கி வந்தது. ஆடோ புலியைப் பார்த்துப் பயந்து கத்த ஆரம்பித்தது. புலி கர்ஜனையில் வீரப்புலிக்கு விழிப்பு வந்து கீழே பார்த்தான். அவனது வாழ்க்கையில் இவ்வளவு பெரிய புலியைப் பார்த்ததில்லை. ''அய்யோ புலி'' எனக் கத்த ஆரம்பித்தான்! புலியும் அவனைப் பார்த்து இன்னும் பெரிதாக கர்ஜித்தது. அவ்வளவுதான்! வீரப்புலி நிலை தடுமாறி கிளையிலிருந்து நேரே புலி மேல் விழுந்துவிட்டான்.

விழுந்த வேகத்தில் இரும்புக்கவசத்திலுள்ள கத்திகள் புலியின் உடம்பில் பல பாகங்களிலும் குத்த, இரத்தம் பீறிட்டது. வீரப்புலி இரத்தத்தைப் பார்த்து மயக்கம் போட்டுவிட்டான். இரத்தம் இழந்த புலி சக்தி இழந்து கடைசியில் இறந்தே விட்டது. நமது கதாநாயகனோ இதை எல்லாம் அறியாமல் புலி பக்கத்திலேயே மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தான்.

மறுநாள் காலை ராஜாவின் சேவர்கள் மரத்திற்கு வந்து பார்த்தபோது அவர்களால் தம் கண்களை நம்ப முடியவில்லை. புலி செத்துக் கிடக்க வீரப்புலியோ அதன் பக்கத்தில் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.

அவனை எழுப்பி ''எப்படி புலியைக் கொன்றாய்?'' எனக்கேட்டனர்.

வீரப்புலியும், ''இது என்ன பிரமாதம்... புலி ஆட்டை நோக்கி வந்தது. நான் சும்மா விடுவேனா! மரத்திலிருந்து குதித்தேன். புலி என்னை நோக்கிப் பாய்ந்தது. நானா பயப்படுவேன்? அதைக் கட்டிப்பிடித்து சண்டை போட்டேன். அப்புறம் என் கத்திகளால் அதன் உடம்பில் பல இடங்களில் குத்திக் கொன்றுவிட்டேன். சண்டை போட்ட களைப்பில் அதன் பக்கத்திலேயே தூங்கிப்போய்விட்டேன்'' என கதைத்தான்!

விஷயம் அறிந்த நல்லராஜாவிற்கோ ஒரே ஆச்சரியம். ''வீரப்புலி, நீ பெரிய வீரன்! இன்று முதல் நீதான் இந்த நாட்டின் தளபதி'' எனச் சொன்னார். வீரப்புலிக்கோ ஒரே சந்தோஷம். அவன் 'இனி சாப்பாட்டுக்கு கவலை இல்லை' என அகமகிழ்ந்தான்!

நன்றாகச் சாப்பிட்டுவிட்டு மரத்தின் மேலேறிப் படுத்துத் தூங்கினால் தளபதி பதவி கிடைக்கும் என்பது இந்தக் கதையின் நீதி என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

ஹெர்கூலிஸ் சுந்தரம்
ஓவியம்: சபரீஷ்பாபு (ஐந்தாம் வகுப்பு)

© TamilOnline.com