டாக்டர் சத்யா ராமஸ்வாமி
பிஸினஸ் வீக் பத்திரிக்கை 2002ஆம் ஆண்டில் நிர்வாகத்துறையில் அமெரிக்காவிலேயே முதன்மையானதாகவும், எகனாமிஸ்ட் பத்திரிக்கை உலகிலேயே முதன்மையானதாகவும் கெல்லாக் நிர்வாகப் பள்ளியை (Kellog School of Management) தெரிவுசெய்கின்றன. அத்தகைய பள்ளியின் முதுகலைப் படிப்பில் 2003ம் ஆண்டின் தலை சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் சத்யா ராமஸ்வாமி. நான்குக்கு நான்கு தரப்படி சராசரி சதவிகிதம் (4/4 GPA) பெற்று இச் சாதனை படைத்த ஒரே தமிழ் மாணவர் இவர்தான். மற்றுமொரு சாதனை, இதை இவர் முழு நேரப் பணியில் இருந்து கொண்டே சாதித்ததுதான்.

சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதுபோல் இவர் 1998, 1999ம் ஆண்டுகளில் மோடோரொலா (Motorola) நிறுவனத்தின் 'தலைசிறந்த வர்த்தக நிர்வாகத் தாக்க' அவார்ட் (Outstanding Business Impact Award) வழங்கப் பெற்றார்.

சத்யா ராமஸ்வாமி தற்போது ஸான் ஹோஸேவிலிருக்கும் ஐபிஎம் (IBM) நிறுவனத்தில் ஸ்ட்ராட்டஜி ஆலோசனை (Strategy Consulting) மேலதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவர் வென்றுள்ள பரிசுகளும் புகழாரங்களும் பலப்பல. இவர் ஒரு இளைய சாதனையாளர் மட்டுமல்ல; இந்திய விசுவாசி, தமிழ்ப்பற்றும் மிக்கவர். அவருடன் ஒரு நேர்காணல்.

உங்கள் பள்ளி, கல்லூரி நாட்களைப் பற்றி?

பள்ளிப் படிப்பை முடித்தது கன்யாகுமரி மாவட்டத்தில். பள்ளித் தேர்வில் மாவட்டத்தில் முதல் மாணவனாகவும், மாநில அளவில் பதினோறாம் நிலையிலும் வந்தேன். பொறியியல் படிப்பு சென்னை கிண்டி கல்லூரியில். அதன் பிறகு பெங்களூர் ஐ.ஐ.எஸ்ஸியில் கணிப்பொறித்துறையில் முதுகலைப் படிப்பும், சென்னை ஐ.ஐ.டியில் ஆராய்ச்சிப் படிப்பையும் (Phd) முடித்தேன். பணியில் இருந்து கொண்டே நிர்வாகத்துறையில் பகுதி நேரமாக முதுகலை படிக்க விரும்பினேன். இந்தியாவின் சிறந்த நிர்வாகத்துறைக் கல்லூரிகளில் அதற்குத் தகுந்த வாய்ப்பு இல்லாததால் அமெரிக்கா வந்தேன். மோடோரொலாவில் (Motorola) முழு நேரப் பணியில் இருந்து கொண்டே கெல்லாக் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்தில் (MBA) முதுகலைப் படிப்பை முடித்தேன். இங்கு பகுப்பாலோசனை (Analytical Consulting), விற்பனை (Marketing) மற்றும் நிதித்துறை (Finance)யில் தேர்ச்சி பெற்றேன்.

ஆய்வுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், அங்கீகாரங்கள்...

ஐ.ஐ.டியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருந்தபோது, பரவிய கணிப்பு (Distributed Computing) மற்றும் டிஸ்ட்ரிப்யூடட் ம்யூசுவல் எக்ஸ்க்லூஷன் (Distributed Mutual Exclusion) பற்றிய பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். ஆய்விதழ்களில் என் வெளியீடுகள் ஆறும், பன்னாட்டு மாநாடுகளில் நான்கும் வெளிவந்திருக்கின்றன.

மோடோரொலா நிறுவனத்தில் பணியாற்றிய போது, நானும் எனது சக நிர்வாகிகளும் சேர்ந்து தொலைபேசித் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். இதன் விளைவாக உருவாக்கப்பட்ட பொருட்கள் ஏடி&டி (AT&T), ஸிங்குலர் (Cingular) போன்ற மிகப்பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மோடோரொலாவிற்குப் பல கோடி டாலர் விற்பனை பெருகியது. எனக்கு இயக்கத் தொலைத் தொடர்புத் (mobile communication) துறையில் இரண்டு தனியுரிமைகள் (patents) வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் மூன்று கிடைக்கப் பெற இருக்கின்றன.

உங்கள் எதிர்காலக் கனவுகள், திட்டங்கள் பற்றி அறியலாமா?

நம் நாட்டு இளைஞர்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தக் கூடிய முக்கியமான விவரங்களைச் சேகரித்துக் கொண்டு, இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிற்குத் திரும்புவது எனது திட்டம். நம் நாடு இன்னும் சில வருடங்களில் உலகளாவிய பொருளாதார வல்லராசாக உருவாகும் என்பது என் கணிப்பு. இதன் பயனாக, இந்திய இளைஞர்களுக்கும், அனுபவமிக்க, சிறந்த இந்திய விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் வல்லுனர்களுக்கும், நிறுவனர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிருக்கிறது; சாதாரண இந்தியனின் வாழ்க்கைத்தரம் உயரும். பல்வேறு நாட்டினர் சாதிக்காததை நாம் சாதிப்போம். நான் பல ஆராய்ச்சிக் கூடங்களில் இந்திய விஞ்ஞானிகளின் தரத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்; மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். உலகெங்கும் நம் வல்லுனர்களின் திறன் இப்பொழுது அறியப்படுவதால் பல ஆயிரக் கணக்கில் வேலை வாய்ப்புக்கள் இந்தியாவிற்குச் சென்று கொண்டிருக்கின்றன. நீங்களே அறிவீர்கள், தினம் ஒரு கட்டுரை இதைப் பற்றி ஏதாவது ஒரு பத்திரிக்கையிலோ, வானொலியிலோ, மாநாட்டிலோ வந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பொறியாளர்கள் மட்டுமல்ல, மருத்துவர்கள், நிதித்துறை வல்லுனர்கள் போன்றோரும் சிறப்பான திறன் படைத்தவர்கள். உலகம் இவர்களையும் விரைவிலேயே கண்டறிந்து வியக்கத்தான் போகிறது.

இந்தியா திரும்பியதும் நம் மக்களின் அறிவுத்திறனைத் தக்க முறையில் பயன்படுத்தி ஒரு தொழில் தொடங்க விருப்பம். நம் நாடு ஒரு குறைந்த விலை பெருவள உற்பத்திக் கூடமல்ல (low cost mass resource). நம் நாட்டின் மிகப் பெரிய மூலதனம் நமது அறிவுத்திறனும் (intellectual capital) உழைக்கும் உள்ளமும். இவற்றின் மூலம் தலைசிறந்த மேம்பாடு மிக்க கடினமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நாம் உலகில் பலமுனைச் சாதனைகளை அடையலாம். இன்று இதற்குத் தக்க உதாரணமாக இஸ்ரேல் நாட்டைச் சொல்லலாம்.

உங்களது நிஜ வாழ்க்கைக் கதாநாயகன் (hero/role model)?

சந்தேகமில்லாமல் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களைத்தான் சொல்வேன். அவர் ஊக்கமளித்து இன்று மேல்நிலையில் இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். இவ்வாராய்ச்சிகளின் விளைவாகத் தொழில் நுட்பத்துறை வெகுவாக விரிவடையும். இதன் பயனாகப் பல்வேறு துறைகளில் நல்விளைவுகள் ஏற்படும் என்பதில் இருவேறு கருத்துகளில்லை. இதில் எனக்கு ஒரே வருத்தம் - இந்தியத் தனியார்த் துறை இவ்வித ஆராய்ச்சிகளில் வெகுவாகப் பங்கேற்காததுதான்.

இந்தியாவும், அமெரிக்காவும் பல விஷயங்களில் கருத்தொருமித்த நாடுகள். ஆனால், அமெரிக்கா இதை முழுமையாகப் புரிந்து கொண்டு இரு நாடுகளின் நட்புறவையும், ஆராய்ச்சிகளில் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த முனையாமல் இருப்பது மற்றொரு வருத்தம்.

உங்களது மற்ற ஈர்ப்புக்கள், ஈடுபாடுகள்?

நான் இந்திய ராணுவத்தை வெகுவாக மதிக்கிறேன். அதேபோல் தமிழ்க் கவி மகாகவி பாரதியையும் மிகவும் நேசிக்கிறேன். மகாகவியின் தீர்க்க தரிசனமும், சொல் வலிமையும் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. அந்த தீர்க்கதரிசியை அவர் வாழ்நாளிலேயே நம் நாடு சரியாக நடத்தவில்லை, அங்கீகரிக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு. அவரது நெகிழ வைக்கும் கவிதை வரிகள், உதாரணமாக "அர்த்த மாயைகளோ இல்லை ஆழ்ந்த பொருட்களோ" எத்துணை பொருள் பொதிந்தவை, உண்மையானவை!

இந்த இரண்டு ஈடுபாடுகளின் விளைவுதான் என் மகன் பெயரின் பிரதிபலிப்பு. ஆம், அவன் பெயர் விக்ரம் பாரதி - விக்ரம் பத்ரா, கார்கில் போரில் உயிரழந்த, பரம்வீர் சக்ரா விருது பெற்ற தலைசிறந்த போர்வீரர். அவருக்கு நான் செலுத்தும் வணக்கமும், எனது மரியாதைக்குரிய மகாகவியின் பெயரும் இணைந்ததுதான் என் மகனின் பெயர்.

கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது என்.ஸி.ஸியில் மாணவர் தலைவராகப் பங்கெடுத்துக் கொண்டேன். முதுகலைப் படிப்பின்போது ஐ.ஐ.எஸ்ஸியின் ஹாக்கி குழுவின் காப்டனாக இருந்தேன். இப்பொழுது விமானம் ஓட்டும் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். வேகமாக நடப்பது, நீச்சல் கற்றுக் கொள்வது, இவை என்னுடைய மற்ற ஈடுபாடுகள். தவறாமல் இணையத்தில் (internet) இந்திய மற்றும் தமிழகச் செய்திகளைப் படித்து விடுவேன்.

உங்கள் குடும்பத்தைப் பற்றி...

மனைவி காயத்ரி - அவருடைய ஆதரவும், ஊக்குவிப்பும் என்னுடைய சாதனைகளுக்கு மிக முக்கிய காரணம். இந்த ஊக்கம் இல்லாவிட்டால், முழு நேரப் பணியை செய்து கொண்டே என்னுடைய படிப்பைச் சீராகத் தொடர்ந்து உயரிய நிலையை அடைந்திருக்க முடியாது. அவரும் கர்நாடக இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவர். குறுந்தகடு (CD) ஒன்றும் வெளியிட்டுள்ளார்.

என் பெற்றோர்களான ராமஸ்வாமியும், லக்ஷ்மி அம்மாளும் ஆசிரியர்களாயிருந்து தமிழ்நாட்டின் பல கிராமங்களில் பணியாற்றி, சிறந்த மாணவர்களை உருவாக்கி, அதே வழியில் என்னையும் வளர்த்தவர்கள். அதேபோல், மோடோரோலாவில் என் மேலதிகாரியாக இருந்த ரங்கா புரானிக் அவர்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

விரிகுடாப் பகுதி வாழ்க்கை எப்படி இருக்கிறது?

விரிகுடா தமிழ்நாட்டுக்கு வெளியே இருக்கும் தமிழகம். இங்கு வசிக்க வேண்டும் என்ற உந்துதலும் நான் இங்கு வேலை எடுத்துக் கொண்டதற்கு முக்கிய காரணம். இங்கு தமிழையும், தென்றலையும் வாசிக்கவும் முடியும், சுவாசிக்கவும் முடியும்.

நேர்காணல்:உமா வேங்கடராமன்
தமிழில்: வேங்கடராமன், உமா

© TamilOnline.com