சத்திய தர்மம்
'சத்யம் வத, தர்மம் சர' - சத்தியத்தைப் பேசு, தர்மம் செய் -. பகவானை அடைவதற்கு இரண்டு காரியங்கள் செய்தால் போதும் என்கின்றார்கள் பெரியோர்கள். ஆனால் திருவள்ளுவரோ 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று' என்று கூறுகின்றார். அதாவது சத்தியத்தைக் காப்பாற்றுவது என்கிற ஒரு காரியத்தைச் செய்தால் போதும். மற்ற எந்த தர்மத்தையும் செய்ய வேண்டாம். மற்ற எல்லா தர்மங்களும் அந்த அந்த சத்திய தர்மத்தைப் பின் தொடர்ந்து வரும் என்பது இதற்குப் பொருள். ஒரு விஷயத்தை நாம் எந்த முறையில் தெரிந்து கொண்டிருக்கிறோமோ, அதை அதேமுறையில் சொல்லுவதுதான் 'சத்தியம்'. சத்தியத்தின் மூலமாகக் கர்மங்களை நடைமுறையில் அனுசரிப்பது தர்மம். தன் நன்மைக்காக இல்லாமல், பிறர் நன்மைக்காகச் செய்யப்படுவதும், ஈஸ்வர அர்ப்பணமாகச் செயல்படுவதுமான கர்மம்தான் தர்மம் என்கிறார் காஞ்சி பரமாச்சாரியார். எது இந்த உலகைத் தாங்குகிறதோ எது இந்த உலகத்திற்கு அடைக்கலமோ, எதற்கு வீழ்ச்சியுற்றுக் கொண்டிருக்கும் மனிதனை தடுத்து நிறுத்தி அவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய சக்தி இருக்கிறதோ அதுதான் 'தர்மம்'. அவன் தர்மத்தைக் காப்பாற்றுகிறானோ, அவனை தர்மம் காப்பாற்றும். நம் நாட்டு நாணயம் வெளிநாடுகளில் செல்லாது. ஆனால் தர்மம் என்னும் நாணயம் எவ்விடத்திலும் செல்லும். ஏனெனில் எவ்விடத்தையும் ஆளுபவன் பரமேஸ்வரன்தான்.

மனிதன் அடைய வேண்டிய பொருட்கள் நான்கு - அறம், பொருள், இன்பம், வீடு. இதில் தர்மத்துக்குத்தான் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தர்மம் என்னும் முதல்படியில் ஏறித்தான் கடைசியில் மோட்சத்தை அடைய முடியும். நம் பொருளைக் கொண்டு தர்மத்தின்படி ஒழுகினால், ஆன்மீக நன்மையும், உலகியல் நன்மையும் கிடைக்கும். தர்ம மார்க்கத்தில் சென்ற ராமனுக்கு பசு, பட்சி, விலங்குகள் கூட உதவுகின்றன. ஆனால் அதர்மத்தில் சென்ற ராவணனுக்கோ, அவனுடைய தம்பி விபிஷணன் கூட உதவவில்லை.

மதங்கள் மாறுபடலாம். ஆனால் தர்மம் ஒன்றுதான். கடலைப்போய் அடையும் நதிகளைப் போன்றவை மதங்கள். ஆனால் அவற்றில் உள்ள நீர் போன்றது தர்மம். எப்படி வேர் இல்லாத மரத்தில் இலைகளோ, மலர்களோ, காய்கனிகளோ இருக்காதோ அதே மாதிரி தர்மம் இல்லாத சமூகத்தில் இன்பம், ஒற்றுமை, அன்பு முதலியன இருக்காது.

எல்லா தர்மங்களிலும் சத்தியம் தான் உயர்ந்தது. பகவானைவிட உயர்ந்த பொருள் ஒன்று உண்டு. அதுதான் 'சத்தியம்' என்று பகவானே கூறுகிறார். சத்தியம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் மூன்று சொற்கள் வழங்கப்படுகின்றன. உள்ளத்தால் சத்தியத்தை எண்ணுவதை 'உண்மை' என்கிறோம். வாயினால் சத்தியம் பேசுதலை 'வாய்மை' என்கிறோம். உடம்பால் சத்தியத்தைச் செய்தலை 'மெய்மை' என்கிறோம். வாய்மை என்பதற்கு வள்ளுவர் 'வாய்மை என்பது யாதெனின், யாதொன்றும் தீமை இலாத சொலல்' - அதாவது நாம் சொல்லும் உண்மையினால் யாருக்கும் கெடுதல் ஏற்படக்கூடாது என்கிறார்.

சத்தியம் பேசுவது உத்தமமானது. சத்தியத்திற்கு முன் அசத்தியம் நிற்காது. ஆனால் தர்மம் மிக சூட்சுமமானது. ஆகவே உத்தமர்களைக் கேட்டுத்தான் எது தர்மம், எது அதர்மம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். உண்மை பேசுவதால் ஏற்படும் நன்மையைப் பொய் பேசுவது கொடுக்குமானால் அப்பொழுது அந்தப் பொய்தான் உண்மை. அதே மாதிரிப் பொய் பேசுவதால் ஏற்படும் தீமையை உண்மை பேசுவது கொடுக்குமானால் அப்பொழுது அந்த உண்மைதான் பொய். எந்தத் தர்மமாக இருந்தாலும் சரி, அதன் காரணமாகப் பிறருக்குத் துன்பம் விளையுமானால் அது அதர்மம். சத்தியம் பேசுவதால் தீமை விளையுமானால் அப்போது மெளனமாக இருப்பது நலம்.

நமக்கு ஒரு காரியத்தைச் செய்ய இஷ்டமில்லை. ஆனால் செய்துதான் ஆக வேண்டும் என்கிற சூழ்நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையைத் தான் நாம் 'தர்ம சங்கடம்' என்கிறோம். ஆனால் அது தவறு. மனிதன் எத்தனையோ தர்மங்களை செய்ய வேண்டி இருக்கிறது. சில சமயங்களில் ஒன்றுக்கொன்று முரணனான இரண்டு தர்மங்களைச் செய்யும்படி நேரிடுகிறது. அப்பொழுது அவன் எந்த தர்மத்தைச் செய்வது எந்த தர்மத்தைவிடுவது என்று தவிக்கிறான். இந்த தர்ம சங்கடமான நிலை தசரதனுக்கு எவ்வாறு ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

தசரதன் கைகேயிக்கு கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற ராமனைக் காட்டுக்கு அனுப்பி, பரதனுக்கு முடிசூட்ட வேண்டும். அப்படிச் செய்தால் அவன் குல மரபு படி மூத்தவனுக்குத்தான் பட்டம் கட்ட வேண்டும் என்கிற மரபை மீறியதாக ஆகும். தர்மசங்கடத்தில் அகப்பட்டுக் கொண்ட தசரதன் சத்தியத்தைத்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற முடிவிற்கு வருகிறார். அவர் சத்திய தர்மத்தைக் காப்பாற்றினார். இருந்தும் வாய்மையும், மரபும் காத்து, மன்னுயிர் துறந்த வள்ளல்' என்கிறானே வாலி அது எப்படி? தசரதன் மரபைப் காப்பாற்றவில்லை. ஆனால் அவர் சத்தியத்தைக் காப்பாற்றியதால் தர்மம் அவருக்காக மரபைக் காப்பாற்றுகிறது. 'தர்மமோ ரக்ஷதி ரக்ஷ¢த:' அதாவது யார் சத்திய தர்மத்தை காப்பாற்றுகிறார்களோ அவர்களை தர்மம் காக்கும் என்பதாகும். தர்மம், தன்னைக் காப்பாற்றிய தசரதனை காப்பாற்ற வேண்டாமா? அதனால் அவர் காப்பாற்ற வேண்டிய மரபு தர்மத்தை அவருக்காக காப்பாற்றுகிறது. பரதனுக்கு தான் பட்டத்திற்கு வரவேண்டும் என்ற ஆசை வராமல் தடுத்து ராமர் வனவாசத்திலிருந்து திரும்பும் வரை அவருடைய பாதுகைகளை நாட்டை ஆளும்படிச் செய்கிறது. ஆக தர்மம் தன்னைக் காப்பாற்றியவர்களைக் காப்பாற்றும் என்பதற்கு தசரதன் ஒரு நல்ல உதாரணம் என்று கூறலாம்.

நான்கு வேதங்களாலும் புகழப்பட்ட பரம்பொருளான சங்கரனை அவமதித்து தட்சன் யாகம் செய்தான். விஷ்ணு முதலானவர்கள்கூட தட்சனுக்குப் பயந்து தலைகுனிந்து நின்றார்கள். ஆனால் ததீசி முனிவரோ சங்கரன் அவமதிக்கப்படும் இடத்தில் தாம் இருக்கக்கூடாது என்று அநத் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். சத்தியத்திற்காக தனிக்குரல் கொடுக்கும் தைரியம் அவர் ஒருவருக்குத்தான் இருந்தது.

ஆக நாமும் சத்திய தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே கொள்கையில் திடமாக நிற்க வேண்டும்.

சாந்தா கிருஷ்ணமூர்த்தி

© TamilOnline.com