உதவும் கரங்கள் வித்தியாகர்
குடும்பத்தால், உறவினர்களால், சமூகத்தால் கைவிடப்பட்டவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் இன்னும் பிற ஆதரவற்றவர்களுக்கும் 'உதவும் கரங்கள்' மறுவாழ்வு அளிக்கிறது. இதைத் தோற்றுவித்து நடத்துபவர் வித்தியாகர். தன் வாழ்வையே இந்தப் புனிதப் பணிக்கு அர்ப்பணித்துவிட்டவர். சென்னை, கோவை, பங்களூர் ஆகிய இடங்களில் இந்த அமைப்பு செயல்படுகிறது. அண்மையில் உதவும் கரங்களின் அன்றாடத் தேவைகளுக்கும், பிற சேவைகளுக்கும் நிதி திரட்டும் பொருட்டு வந்த வித்தியாகர் அமெரிக்காவின் பல இடங்களுக்கும் சென்று பேசினார். மனோஜ் நைட் சியாமளன் ('Sixth Sense', 'Signs' ஆகியவற்றின் இயக்குநனர்) போன்ற பல இந்திய-அமெரிக்கப் பிரபலங்கள் இவருக்கு உதவுகின்றனர்.

வித்தியாகருடன் உரையாடியதிலிருந்து சில முக்கியமான பகுதிகள்:

கே: ஆரம்பத்திலிருந்து ஆரம்பியுங்களேன்...

ப : நான் பிறந்தது மைசூரில். என்னுடைய 13வது வயதில்தான் நான் சென்னைக்கு வந்தேன். எனக்குப் பெற்றோர்கள் கிடையாது. என்னை ராமகிருஷ்ணன் என்பவர்தான் எடுத்து வளர்த்துப் படிக்க வைத்தார். அந்த நேரத்தில் 1982ல் குடிசைப் பகுதியில் உதவும் கரங்களை ஆரம்பித்தேன். எனக்கு யாரும் உதவுவதற்கு அப்போது இல்லை. அன்றைய காலகட்டத்தில் அவ்வளவாக இந்த மாதிரியான அமைப்புக்கள் அவ்வளவாகக் கிடையாது. உதவும் கரங்கள் முக்கியமாகக் குடிசைவாழ் பகுதி மக்களுக்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு வாழும் சிறுவர்களுக்கும், சிறுமியர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பது, மக்களுக்கு சிறுதொழில் செய்வதற்கான வழிமுறைகளைச் செய்து கொடுப்பது, அவர்களுக்கு வங்கிகளின் மூலம் தொழில்செய்யப் பணம் வாங்கிக்கொடுப்பது, ஊனமுற்றோர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொடுப்பது, காய்கறிக் கடை, பழக்கடை ஆகியவற்றை ஆரம்பித்துக் கொடுப்பதற்கான வழிமுறைகளைச் செய்வது என்ற வகையில்தான் உதவும்கரங்கள் செய்து கொண்டிருந்தது.

கே: உதவும் கரங்களைத் துவங்கத் தூண்டியது எது?

ப :இது அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஓர் அமைப்பு. முதன்முதலாக சென்னையில்தான் இதைத் தொடங்கினேன். எனக்கு இந்த அமைப்பைத் துவங்குவதற்குத் தூண்டுகோலாக அமைந்தவர் மதர் தெரசா, அவரது தன்னலமற்ற சேவை. ஒரு பெண்--அந்நிய மண்ணில் பிறந்தவர் இந்த அளவுக்குச் சேவை செய்ய முடிகிறது என்பதும், கிறிஸ்துவ மிஷன்களின் சேவைகளும் என்னுள் ஒர் சிந்தனையை உருவாக்கியது. ஏன் நாம் இப்படி ஏதாவது நம் நாட்டிற்குச் சேவை செய்யக்கூடாது என்ற எண்ணினேன். பிறகு சமூகவியல் (Sociology) படித்தேன். அதன் பிறகு கொஞ்சநாட்கள் மருத்துவமனையில் பணியாற்றினேன். ஆனாலும் என் மனம் ஏனோ திருப்திடையவில்லை. நாமே சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அனாதை ஆசிரமம் நடத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

கே: பின் அனாதை ஆசிரமம் வந்தது எப்படி?

ப : தற்செயலாக ஒருநாள் திரையரங்கு ஒன்றில் 11 மாதக் குழந்தை ஒன்று அநாதையாக விடப்பட்டிருந்ததைக் கண்ட அந்தப் பகுதி சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர், குழந்தையை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. மருத்துமனையில் சேர்த்தோம். கிட்டத்தட்ட 15 நாட்கள் அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 15 நாட்களுக்குப் பிறகு அக்குழந்தையின் உடல்நலம் சற்று தேறி வந்தவுடன் அக்குழந்தையை நாமே வளர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி நான் எடுத்துக்கொண்டு வந்தேன். அந்தப் பகுதியிலேயே சிறுகுடிசை ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கினேன். இப்படி ஆரம்பித்தது கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளை வளர்ப்பதில் வளர்ந்தது.

நான் மருத்துவமனையிலிருந்து, குப்பைத் தொட்டிகளிலிருந்து, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, பஸ் ஸ்டாண்டிலிருந்து, சாக்கடையிலிருந்து பல குழந்தைகளை மீட்டுவந்துள்ளேன். என் மனம் விட்டுப்போகாமல் என் வேலைகளில் அதிக கவனம் செலுத்துகிறேன்.

குழந்தைகளைக் கொடுமைப்படுத்துகிறவர்களிடமிருந்து, பிச்சைக்காரர்களிடமிருந்து என்று பலதரப்பட்ட குழந்தைகள். கிட்டத்தட்ட 400 குழந்தைகள் இன்று எங்கள் உதவும்கரங்களில் அடைக்கலம் பெற்று வளர்க்கின்றனர். அதுமட்டுமல்ல காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களைப் பெற்றோர்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்.

கே: கல்விப் பணியும் செய்கிறீர்கள் போலிருக்கிறதே...?

ப : அதுமட்டுமல்ல நல்ல ஆரோக்கிமான சூழலில் வளருகின்ற குழந்தைகள் 350 பேருக்கு எங்கள் ராமகிருஷ்ண வித்யாலயா என்ற பள்ளியில் படிக்க வைக்கிறேன். சென்னை திருவேற்காட்டில் அமைந்துள்ளது எங்கள் பள்ளி. திருவேற்காட்டு அம்மன் கோயிலுக்குப் பின்புறம் உள்ளது இது. அங்கு வாழும் பிற்பட்டோர் மற்றும் வறியோரின் குழந்தைகள் என்று மொத்தம் 1700 பேர் படிக்கிறார்கள். ஊனமுற்ற மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தனி அக்கறை செலுத்தி அவர்களுக்கென்று தனி பள்ளிக்கூடம் நடத்தி வருகிறேன்.

எங்கள் பள்ளியில் +2 வரை படித்த நிறையப் பிள்ளைகள் - குறிப்பாக ஆண் பிள்ளைகள் - இன்று வெளியே சுயமாகத் தங்கள் சொந்தக்காலில் நிற்கும் நிலையை அடைந்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல சுமார் 25 பெண்களுக்கு எங்கள் அமைப்பின் மூலம் திருமணம் செய்து வைத்திருக்கிறேன். இன்று அவர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

கே: நீங்கள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட வர்களுக்கு என்று தனியாக செய்வதாக...

ப : ஆமாம்.. அடிப்படையிலேயே நான் உளவியல் படித்ததினால் எனக்கு இதில் அதிக ஆர்வம் உண்டு. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக எங்கள் அமைப்பு பல சேவைகள் செய்கின்றன. இந்தியாவில் இப்படிப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு, மற்றும் மருத்துவ வசதிகள் அதிகம் இல்லை. நாங்கள்தான் முதன்முதலில் அவர்களின் பாதுகாப்பையும் அவர்களுக்கு இவற்றைச் செய்தோம். நீண்ட காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டவர்களையெல்லாம் அழைத்துவந்து தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்துக் குணப்படுத்தியிருக்கிறோம். அவர்களுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறோம். முக்கியமாகக் கரூர் பக்கத்திலிருந்து அதிக அளவில் இத்தகைய மனம் பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் அமைப்பின் மூலம் குணப்படுத்தியிருக்கிறோம்.

மொத்தம் 600 பேருக்கு மேல் உதவும் கரங்களில் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் குணப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரைக் கண்டுப்பிடித்து அவர்களிடம் ஒப்படைத் திருக்கிறோம், ஒப்படைக்கிறோம். அதிக அளவில் சாலையோரங்களில் குடிதண்ணீர் கொடுப்பதற்குக்கூட ஆள் இல்லாமல் சுருண்டு கிடந்தவர்கள் எல்லாம் எங்களிடம் உள்ளனர். விலாசம் தெரியாமல் இருக்கிறவர்களை எங்களிடமே தங்க வைத்துக்கொள்கிறோம்.

எங்களிடம் உள்ள வயதானவர்களுக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களுக்குத் தகுந்த வைத்தியம் செய்கிறோம். அதுமட்டுமல்ல, அவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் விருப்பப்படியே அவர்களுக்கு நாங்கள் இறுதிச் சடங்கைச் செய்கிறோம். எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் கூட எங்களிடம் அடைக்கலம் நாடி வருகின்றனர். பலர் அவர்கள் குடும்பத்தினரால் விலக்கப்பட்டவர்கள். பலர் மருத்துவமனையில் தகுந்த சிகிச்சையின்றி துரத்தப்பட்டுச் சாலையோரங்களில் வீழ்ந்து கிடந்தவர்கள். அவர்களையெல்லாம் உதவும் கரங்கள் ஏற்றுப் பராமரிக்கிறது. எச்.ஐ.வி பாஸிடிவ் உள்ள குழந்தைகளையும் பாதுகாக்கிறோம்.

கே: உதவும் கரங்களின் சேவை சென்னைக்கு மட்டும்தானா?

ப : இந்தியா முழுவதுமே எங்கள் சேவையைச் செய்கிறோம். எங்கள் சேவை எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் நாங்கள் சேவை செய்ய முயலுகிறோம். குறிப்பாக ஒருவர் வடநாட்டில் புனேயில் சங்கிலியால் கட்டப்பட்டு ரொம்பவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிந்தால், அங்கு சென்று அவரை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறோம். பொதுவாகப் பத்திரிகைகள் மூலம் நாங்கள் இப்படிப்பட்ட தகவல்களை அறிகிறோம். அதுமட்டுமல்ல எங்கள் அமைப்பைப் பற்றித் தெரிந்தவர்கள் தகவல் அளிப்பார்கள். அதன் மூலமும் நாங்கள் செயல்படுகிறோம்.

கே: உங்கள் அமைப்பு இந்தியாவில் எங்கெல்லாம் செயல்படுகிறது?

ப : சென்னை, கோயமுத்தூர், பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ளது.

கே: சிறிதும் அரசியலோ, மதமோ கலக்காமல் எப்படிச் செயல்பட முடிகிறது என்பதை கொஞ்சம் சொல்லுங்கள்...

ப : என்னுடைய குறிக்கோள் சமுதாயத்திற்குப் பணி செய்வது. மத சம்மந்தப்பட்ட விஷயங்களைச் செய்வதற்கு ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள். எல்லா வகையான மனிதர்களும் எங்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். எல்லா சாதி, மதங்களில் இருக்கும் மனிதர்களுக்கும் பங்கிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைக்கு பேர் வைக்கும் போது பொதுவான பெயர்தான் வைப்போம். ஒவ்வொரு குழந்தையின் பெயருடனும் என் பெயரும் சேர்ந்திருக்கும்.

உதாரணமாக, சுருதி வித்தியாகர், அஸ்வின் வித்தியாகர். இனிஷியலுக்காக என் பெயர் கூட இருக்கும். இன்ஷியல் இல்லாத குழந்தைகள் என்று பெயர் வரக்கூடாது. நான் நாளை இல்லாவிட்டாலும் என் பெயர் இருக்கும். குழந்தைகளை அடையாளப்படுத்தும்.

நாங்கள் யாரையும் இதுதான் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கில்லை. எல்லாப் பண்டிகை களும், விழாக்களும் கொண்டாடுவோம். எல்லாவற்றுக்கும் எல்லாரும் வரவேண்டும் என்பது முக்கியம்.

கே: உதவும்கரங்கள் அமைப்பில் பல இடங்களிலிருந்தும் ஆர்வமுள்ள சேவையாளர்கள் வந்து பணிசெய்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் எப்படி உங்களுக்கு உதவுகிறார்கள்?

ப : இப்போது நிறைய பேர்கள் என்னிடம் வந்து தாங்கள் அனாதை ஆசிரமங்கள் நடத்த விருக்கிறோம். அதற்கான வழிமுறைகளைச் சொல்லுங்கள் என்று வருகிறார்கள். நான் அவர்களிடம் "அநாதைகளே உலகத்தில் இனி இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்; நீங்கள் ஆசிரமம் தொடங்கப்போகிறேன் என்று சொல்கிறீர்களே" என்று சொல்லுவேன். ஆனால் இப்போது நிறைய பேருக்குச் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

முன்பு போல் இப்போது நிதி வருவது குறைந்துவிட்டது. ஏ¦ன்றால் நிதிகள் இன்று பல இடங்களுக்குப் பிரிந்து செல்கிறது.

பல வர்த்தக நிறுவனங்கள் இப்போது தங்களுக்கென்றே பொதுநல அமைப்புகள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நிதியைத் தாங்களே உபயோகித்துக் கொள்கிறார்கள். அவர்களுடன் தொடர்புள்ள பிற வணிக நிறுவனங்களும் நிதியை அவர்களுக்கு அளிப்பார்கள். இன்னொரு வகையில் ஆசிரமங்களுக்குத் தேவைகள் அதிகம். இங்கு 2000 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தினமும் எண்ணெய், பற்பசை என்று அன்றாடத் தேவைகள் அதிகம். இப்போது நிதி வரவு குறைந்து விட்டது ரொம்ப கவலையைத் தருகிறது.

ஒரு பக்கம் தினம் தினம் பலர் இங்கு வந்து சேர்கிறார்கள். ஏனென்றால் நிறைய பேருக்கு உதவும் கரங்கள் தெரியும். ஆகையால் அன்றாடம் நிறையப் பேர் வருகிறார்கள். உடல்நோயுற்று மருத்துவமனையில் சேர்க்கப் படாமல் இருப்பார். அவரை இங்கு அழைத்துவருவார்கள். படுப்பதற்குப் படுக்கை கூட இருக்காது. இது இப்படி இருக்க விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. அரிசி கிலோ இன்று 16 ரூபாய்க்கு வாங்குகிறோம். எங்களுக்கு கிட்டத்தட்ட 140 கிலோ அரிசி தேவை. அடிப்படையில் இதை நடத்துவதே போராட்டமாக இருக்கிறது.

கே: உங்கள் அமெரிக்கப் பயணத்தின் நோக்கம் என்ன?

ப : இதுதான் என் முதல் அமெரிக்க பயணம். இங்குள்ளவர்களிடம் எப்படி விளக்க போகிறேன் என்று எனக்குப் புரியவில்லை. நான் இங்கு வந்தது முதலில் இங்குள்ளவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்க. இரண்டாவது, மக்களிடம் உதவும் கரங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த. மூன்றாவது, மருத்துவமனை ஒன்றைத் திருவேற்காட்டில் உருவாக்குவதற்காக நிதி திரட்டுவதற்காக.

கே: அமெரிக்காவில் உங்கள் திட்டங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

ப : உதவும் கரங்களை அமெரிக்காவில் பதிவு செய்துள்ளோம். சுந்தர் பாலசூரியன் என்பவர் பாஸ்டனில் இருக்கிறார். அவர் ஒரு கணினிப் பொறியாளர். அவர் முயற்சி செய்து பாஸ்டனில் பதிவு செய்துள்ளார். 3 வருடங்களுக்கு முன் ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். இப்போது அமெரிக்காவில் உள்ள பலர் நிறைய உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். நிறையச் செய்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு பக்கம் இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்து நான் ஒரு health centre ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன். ஏனென்றால் திருவேற்காடு சென்னையை விட்டுக் கொஞ்சம் தள்ளி இருப்பதால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை அவசரமாக அழைத்துச் செல்ல முடிவதில்லை. அதுமட்டுமல்லாமல் அங்கு சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் மருத்துவ வசதி குறைவாக இருப்பதால் திருவேற்காட்டில் ஒரு மருத்துவ மனை தொடங்கலாம் என்று நினைக்கிறோம்.

கே: நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள். அங்குள்ள சினிமாக்காரர்களை அழைத்து நாடகமோ அல்லது மெல்லிசையோ நடத்தி உங்கள் அமைப்புக்குத் தேவையான நிதியைத் திரட்டியிருக்கலாமே?

ப : இதுவரை நாங்கள் அது மாதிரி எந்த நிகழ்ச்சியும் நடத்தியதில்லை. திரைப்படத் துறையினரை அழைத்து நிகழ்ச்சி அளிப்பதற்கு எங்களிடம் ஆட்கள் இல்லை. ஆகையால் என்ன நிதி வருகிறதோ அதைக் கொண்டே இதுவரை நடத்திக்கொண்டு வருகிறோம்.

கே: தென்றல் வாசகர்கர்கள் உங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தால் எந்த வகையில் உதவ வேண்டும், அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லவிரும்புகிறீர்கள்?

ப : துணிகள், மளிகை சாமான்கள், குழந்தைகளுக்குச் சீருடை, பாட புத்தகங்கள், மருத்துவமனைக்குத் தேவையான படுக்கைகள், மருந்துவகைகள், ஆம்புலன்ஸ், மாணவர்கள் பயன்படுத்தக் கம்ப்யூட்டர் என்று உதவும் கரங்களுக்குத் தேவையான அனைத்து வகைப் பொருட்களையும் கொடுத்து உதவலாம். அதுமட்டுமல்லாமல் பிறந்தநாள், கல்யாண நாள் என்று பல தினங்களில் ஏதாவது செய்ய நினைத்தால் எங்களுக்கு உபயோகப்படும் பொருட்களைத் தரலாம்.

விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் எங்களுக்கு ஒரு வகுப்பறை கட்டித் தந்திருக்கிறார்கள். 'தில்லானா' இசைக்குழுவினர் ஒரு நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள். நிறையப்பேர் எங்களுக்கு உதவியிருக்கிறார்கள்.அதுமட்டுமல்லாமல் இங்கு ஒவ்வொரு பகுதியிலும் உதவும் கரங்களைச் சேர்ந்த வாலண்டியர்களைச் சந்தித்து எது விரும்பினாலும் கொடுக்கலாம்.

எந்தவிதமான உதவி எங்களுக்குக் கிடைத்தாலும் சந்தோஷமானது தான்.

கே: உதவும் கரங்கள் மூலமாக நீங்கள் தயாரிக்கும் பொருட்களைப் பற்றிய விவரங்கள்...

ப : முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானவர்களில் சிலர் மறுபடியும் குடும்பத்தினருடன் சேர முடியாத சூழ்நிலையில் எங்களுடன் தங்கிவிடுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒரு தொழில் செய்ய கற்றுத் தரப்படுகிறது. பொதுவாக இந்த மாதிரி அமைப்புகள் ஊதுவத்தி, மெழுகுவர்த்தி செய்வதில்தான் ஈடுபடுகிறார்கள். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு மனம் ஒன்றக்கூடிய வகையில் தோட்டப் பராமரிப்பு, பூச்செடிப் பண்ணை, மரம் வளர்த்தல் என்ற வேலைகளில் ஈடுபட வைக்கும் போது அவர்கள் அதிக மன ஈடுபாட்டுடன் செய்வதைப் பார்த்தேன். அந்த அடிப்படையில் தொடங்கியது தான் 'காயத்ரி நர்சரி லாண்ட் ஸ்கேப்பிங்'.

உங்கள் வீட்டிற்கு வந்து தோட்டம் பண்ணிக்கொடுக்க வேண்டும் என்றால் எங்களுக்கு ஒரு போன் செய்தால் நாங்கள் வந்து செய்துகொடுக்கிறோம். இங்குள்ளவர்கள் அதைச் செய்கிறார்கள். இத்தகைய வருமானங்கள் இங்குள்ளவர்களுக்கு மனதில் ஒரு புத்துணர்வைக் கொடுக்கிறது. அவர்கள் செய்யும் வேலைக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். இது அவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

கே: சிலிக்கன் வேல்லியில் நாம் இப்போது இருக்கிறோம். இங்கு எல்லாமே இன்டர்நெட், கம்ப்யூட்டர்தான். இந்த வகையில் உதவும்கரங்களுக்கு என்று இணையதளம் அமைத்திருக்கிறீர்களா?

ப : இனி வரும் காலம் கம்ப்யூட்டர், இன்டர்நெட் மூலம் தான் தகவல்கள் சொல்லப்படுகிறது. சுந்தர் பாலசூரியன் அவர்களிடம் இதைப்பற்றி நிறையப் பேசியிருக்கிறோம். சின்ன வயசிலிருந்தே குழந்தைகளுக்குக் கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். வேதாஸ் கம்ப்யூட்டர் ஆரம்பித்திருக்கிறோம். மற்ற எல்லா வாலண்டியர்களுக்கும், அரசு சாரா அமைப்புக்களுக்கும் (NGO) நாங்கள் கணினிப் பயிற்சி அளிக்கிறோம். இப்போது நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள்; ஒரு குழந்தைக்கு நீங்கள் ஸ்பான்சர்ஷிப் செய்கிறீர்கள் என்றால் சுமார் 101 அமெரிக்க டாலர் வருடத்திற்கு ஆகும். அப்படி நீங்கள் பொறுப்பு எடுத்துக்கொண்ட குழந்தை உங்களுக்குக் கடிதம் எழுதவோ, அவர்களின் மதிப்பெண் பட்டியல் அனுப்புவதற்கோ, அந்தக் குழந்தையின் புகைப்படம் அனுப்பவோ முன்பெல்லாம் தபால் சேவையைத்தான் உபயோகிப்போம். இப்போது மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறோம். இ-மெயில் கேரண்டி திட்டம் இப்போது நடைமுறையில் உள்ளது. இ-மெயில் கேரண்டி என்றால் இப்போது நீங்கள் மின்னஞ்சல் வழியே ஒரு குழந்தைக்கு நீங்கள் ஒரு பாதுகாவலராக இருக்கலாம். அந்தக் குழந்தைக்கும் தனக்கு ஒரு கார்டியன் இருக்கிறார் என்ற உணர்வு ஏற்படும்.

கே: உதவும் கரங்களின் வெற்றி குறித்து...

ப : இங்கே 80 பையன்கள் பள்ளிப் படிப்பை முடித்தபின், தொழில் கற்றுக்கொண்டு இன்று வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவர்கள் கண்டிப்பாக 5 மாணவர்களுக்குப் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவனையும் ப்ளஸ் டூ வரைக்கும் படிக்க வைக்கிறோம். அதற்கு மேல் படிக்க வைக்க அதிகப் பணம் செலவாகும்.

அதற்கு மேல் அவர்களை படிக்க வைக்க வேண்டும் என்றால் அவர்கள் இங்கு ஒரு வருடம் சேவை செய்ய வேண்டும். இது எங்கள் நிபந்தனை. அது அவர்களுக்கும் தெரியும். அவர்களும் நம்மை +2 வரைக்கும் படிக்க வைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருக்கும். எனவே அவர்கள் 5 குழந்தைகளின் பொறுப்பை மகிழ்வோடு எடுத்துக் கொள்வார்கள்.

கே: உதவும் கரங்களில் ஒருவருக்கான செலவு ரொம்ப ரொம்பக் கம்மி. எப்படி உங்களால் செய்ய முடிகிறது?

ப : உதவும் கரங்களில் சேவை செய்ய விரும்புவர்கள் கல்யாணம் ஆகாதவர்களாக இருப்பது முக்கியம். எந்தவித குடும்பப் பொறுப்பும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். 24 மணிநேரமும் சேவை செய்ய ஆர்வமுடன் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை தான் எங்கள் அமைப்பில் சேர்த்துக் கொள்கிறோம். மொத்தம் 55 பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள். எங்கள் அலுவலகக் கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். ஒய்வு பெற்றவர்கள் பலர் நிர்வாகத்தில் சேவை செய்ய முன் வருவார்கள். இப்படிப் பல விஷயங்களுக்கு பலர் முன் வந்திருக்கிறார்கள். ஆகவேதான் எங்களால் செலவைக் குறைக்க முடிகிறது.

கே: உங்களுக்கு கவலை தரக்கூடிய விஷயம்...

ப : குழந்தைகளுக்கு உதவி செய்ய நிறையப் பேர் வருகிறார்கள். ஆனால் முதியோர்களுக்கும், மனநிலை சரியில்லாதவர்களுக்கும் உதவி செய்ய யாரும் வருவதில்லை. முக்கியமாக இவர் களுக்கு மாதந்திர மருத்துவ சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. அதுபோல் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருத்துவ வசதிகள் அதிகம் தேவை. இதற்கு அதிக நிதி ஒதுக்க எல்லோரும் முன்வரவேண்டும்.

கே: தென்றல் வாசகர்களுக்கும் நீங்கள் என்ன கூற நினைக்கிறீர்கள்?

ப : அனாதைகள் உருவாக்கப்படக்கூடாது. அனாதைகள் நிறைய இருக்கக்கூடாது. அனாதை விடுதிகள்அதிகம் ஏற்படக்கூடாது. இதற்காக நான் ரொம்பவும் பாடுபடுகிறேன். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன். இந்த மாதிரி அமைப்புகள் அதிகம் வருவதை நான் விரும்புவதில்லை. இந்தியாவில் அனாதைகள் இல்லை என்கிற நிலையை உருவாக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

*****


கிளீவ்லாண்டில் வித்தியாகர்

'உதவும் கரங்கள்' வித்தியாகர் கிளீவ்லாண்டில் ஆற்றிய உரை கல்லையும் கரைய வைப்பதாய் இருந்தது. அவர் கல்மனங்களைக் கரைக்கவும் இங்கு வரவில்லை, கனல் தெறிக்கப் பேசவும் செய்யவில்லை. கையேந்தி யாசகமும் கேட்டுவிடவில்லை.

அவருக்குள் இயல்பாக அமைந்துவிட்ட இரக்கத்தின் ஈரக்காற்று அங்கு வந்திருந்த அனைத்து நெஞ்சங்களையும் நிறையவே நனைத்துவிட்டது. மெத்தென்று பேசிய அவருடைய கனிவான பேச்சில், உண்மை இரண்டறக் கலந்திருந்ததை உணர்ந்தோம்.

இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த டாக்டர் (திருமதி) கண்ணபிரான் அவர்கட்கும், பாரதி கலாச்சாரக் கழகத்திற்கும், தமிழ்நாடு அறக்கட்டளைக்கும் நன்றிகள் பல.

செல்வி ஜெயசீலன், கிளீவ்லாண்ட்

*****


நீங்கள் என்ன செய்யலாம்?

கீழே இருப்பதைப் படிக்கத் தொடங்குமுன் செக் புத்தகத்தையும், பேனாவையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மனம் வேறு விஷயத்தில் ஈடுபடுமுன் நன்கொடைக் காசோலையை எழுதிவிடுவது நல்லது.

இதோ, நீங்கள் எதற்கெல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ளலாம், அதற்கு என்ன தொகை ஆகும் என்கிற விவரங்கள்:

உதவும் வகை தொகை(அமெரிக்க டாலர்)

வருடத்தில் ஒரு நாள்
அனைவருக்கும்
பராமரிப்புத் தொகை 1000

ஒரு குழந்தைக்கு ஒரு
வருடக் கல்வி மற்றும்
மருத்துவம் 120

ஒரு குழந்தைக்கு
பள்ளியிறுதிவரை
கல்விக்கு (வைப்பு) 600

உங்கள் பெயரில் ஒரு
வகுப்பறை கட்ட 3750

ஒரு ஆசிரியருக்கு
வருடாந்திரச் சம்பளம் 1000

மருத்துவ உபகரணங்களும் கிராம உடல்நலத் திட்டமும்... எவ்வளவானாலும் சரி மேற்கண்ட தொகைகள் ஒரு குறியீடுதான். உங்கள் விருப்பம்போல எவ்வளவு தொகை அனுப்பினாலும் மகிழ்வோடு ஏற்பர்.

உங்கள் நன்கொடைகளுக்கு IRS தரும் வரிவிலக்கு உண்டு. காசோலை மற்றும் வரைவோலைகளை (Demand Drafts) 'UDAVUM KARANGAL OF USA' என்ற பெயருக்கு எழுதுங்கள். அத்துடன் இணைக்கும் கடிதத்தில் உங்கள் பெயர், முழு முகவரி, காசோலை எண், வங்கியின் பெயர் ஆகியவற்றையும் மறக்காமல் (ஆங்கிலத்தில்) எழுதுங்கள்.

எழுதிவிட்டீர்களா? நல்லது, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புங்கள்:

Udavum Karangal of USA
23, Crosby Drive,
Bedford, 01730,
MA, USA.

தகவல் உதவி:பத்மநாபன்
சந்திப்பு: பிரபாகர் சுந்தர்ராஜன்

© TamilOnline.com