கிருஷ்ணன் நம்பி
தமிழில் மிகக் குறைவான கதைகள் எழுதியும் கூட நவீன தமிழ் இலக்கியத்தில் தமக்கான இடத்தை அழுத்தமாகவும் ஆழமாகவும் உணர்த்திச் செல்பவர்களுள் கிருஷ்ணன் நம்பியும் ஒருவர். அவர் பத்தொன்பது சிறுகதைகள் தாம் எழுதியிருக்கிறார். ஆனால் அந்தக் கதைகள் மூலம் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் நம்பியின் பெயரும் ஆளுமையும் தனித்துத் திகழ்கிறது.

'கிருஷ்ணன் நம்பி' என்று அறியப்பட்ட அழகிய நம்பி குமரி மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்றான அழகிய பாண்டியபுரம் எனும் ஊரில் 1932 ஜூலை 24ந் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பு அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. பத்தாவது வகுப்பு வரையே படித்திருப்பார். 1948-49இல் நம்பியின் இலக்கியப் பணி தொடங்கிவிட்டது.

அன்றைய காலத்தில் நம்பியின் நண்பர்களாக எழுத்தாளர்கள் ம. அரங்கநாதன், சுந்தரராமசாமி ஆகியோர் இருந்துள்ளார்கள். இவர்கள் மூலம் இலக்கிய நூல்கள் மீதான தனது பரிச்சயத்தை வளர்த்துக் கொண்டார். சுந்தரராமசாமிக்கும் நம்பிக்கும் இடையிலான நட்பு உறவாடல் கலை இலக்கியம் வாழ்க்கை மீதான புதிய விசாரணைகளை, கேள்விகளை தினமும் வளர்த்துக் கொண்டது. ''எனக்கும் நம்பிக்குமான உறவைப் பற்றி இப்போது யோசித்துப் பார்க்கும் போது இயற்கை நிலையைத் தாண்டிய ஆவேசமும் வெறியும் அதன் கூறுகளாக நின்றிருப்பதை உணர முடிகிறது. எங்கள் சங்கடங்களிலிருந்து தோன்றிய வெறி இது'' என சுரா குறிப்பிடுவதிலிருந்து இருவருக்குமான உறவின் ஆழத்தை, கலை இலக்கியம் மீதான அக்கறையை புரிந்து கொள்ளலாம்.

நம்பி குழந்தைக் கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். குழந்தை உலகுக்குள் குழந்தையாகவே உலாவி வந்து எழுதும் திறன் வாய்க்கப் பெற்றவராக இருந்தார். 'சசிதேவன்' என்ற புனைபெயரில் நம்பி எழுதிய கவிதைகள் பின்னால் தொகுக்கப்பட்டு 'யானை என்ன யானை' என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றன.

குழந்தைகளின் உலகைக் கற்பனை செய்யும் பாங்கு அவ்வுலகுக்குரிய நுண்திறன்களை தனதாக்கிக் கொண்ட மனித வாழ்க்கையின் வேறுபட்ட அனுபவ வெளியாக விரிவதற்கு உதவியது எனலாம்.

நம்பியின் முதல் சிறுகதை 1951இல் சுதந்திர தினம் எனும் தலைப்பில் வெளிவந்தது. தொடர்ந்து 'நிலக்கடல்' எனும் தொகுப்பும் வெளிவந்தது. 1960களில் நம்பி தமிழ்ச் சூழலில் நன்கு அறியப்பட்ட பலரது கவனயீர்ப்புக்கும் உரிய எழுத்தாளராகவே திகழ்ந்தார்.

வாழ்க்கையின் போக்குகளை அதனது இயக்கத்தில் வைத்துப் புரிந்து கொண்டார். அந்தப் புரிதல் கூட வெறும் பார்வையாக மட்டுமல்லாமல் அந்த ஓட்டத்தினூடு உள்ளோடும் முரண்களையும் மனித நடத்தைப் பண்புநிலையிலும் புரிந்து கொண்டார். மனித மனத்தில் ஏற்படும் சலனங்கள், நுட்பங்களைத் தனது படைப்பு வெளியில் யதார்த்தமாக தொட்டுக் காட்டினார்.

''கதைகளைச் சொல்லும் முறையில் பெரும்பாலும் ஒரே பார்வை முறை பிசிறில்லாமல் கையாளப்படுகிறது. ஆசிரியர் பெரும்பாலும் குறுக்கிடுவதில்லை. பாத்திரங்களே சம்பவங்களைப் பேசுகின்றன. குழப்பமாகச் சிதறிக் கிடக்கும் துணுக்குகள் ஒன்றாக இணைத்துக் கோவையாக்கப்படும் அழகு தனி. முரண் மோதல் இயைபு உத்திகள் வேறு. எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்பாராத முடிவைக் கையாளும் உத்தி'' என்று நம்பியின் படைப்புலகம் குறித்து பேரா. செ. ஜெகநாதன் குறிப்பிடுவது கவனிப்புக்குரியது.

நம்பியின் கதைகளைத் திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும். அப்போது தான் நம்பியின் படைப்பு அனுபவம் எத்தகையது என்பது நமக்கு புலனாகும். அவர் காலத்து எழுத்தாளத் தலைமுறைகளில் இருந்து நம்பியின் தனித்தன்மை என்ன என்பது பற்றிய தேடல் கணிப்பு இக்காலத்தில் நமக்கு அவசியம். இன்றைய தேர்ந்த வாசகர்கள் நம்பி உள்ளிட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகள் மீதான தொடர்ந்த உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலம் புதிய அனுபவவெளிக்குள் கரைந்து செல்லவும் புதிய அடையாளங்களுக்கான மதிப்பை உணரவும் வாய்ப்புகள் ஏற்படும்.

''எந்த விஷயங்களையும் கலாபூர்வமாக உருவாக்குவதில் நாம் சற்றும் எதிர்பார்க்காத ஒரு இலக்கியத் தன்மையைப் பெற்றிருப்பது அவருடைய சிறப்பு இதனால் தான் அவருடைய கதைகளை முதல் முறை படிப்பதிலிருந்து அவைகளின் சிறப்பை நம்மால் உணர முடிவதில்லை. ஒருமுறைக்கு இருமுறையாக நின்று நிதானமாகப் படிக்கையில் நமக்கு அவை ஒரு தனி இலக்கிய சுகத்தைத் தருகின்றன'' என்று எழுத்தாளர் நகுலன் குறிப்பிடுவது கூட ஆழ்ந்த அக்கறைக்குரியது. மேலும் இதை எச்சரிக்கையாகவும் வாசகர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

அனுபவத்திற்கும் அதை உணர்த்தும் மொழிக்கும் உள்ள வேறுபாட்டை ஒவ்வொரு படைப்பாளியும் ஏதோவொரு நிலையில் கடக்க முற்படுகின்றனர். சிலருக்கு இந்தக் கடத்தல் இயல்பாகிவிடுகிறது. அது மேலும் புதிய அனுபவத்தள விரிவின் மெய்மையை நோக்கிய பயணத்துக்கு அழைத்துச் செல்கிறது. நம்பியின் படைப்பனுபவம் நமக்கு இத்தகைய அனுபவத்தையும் இலக்கிய ஞானத்தையும் தரக்கூடியதாகவே உள்ளது.

நம்பி வாழ்க்கையை எதிர்கொண்ட விதம் குறுகியதாகிவிட்டது. தனது 43 வயதிலேயே மரணத்தை தழுவிக் கொண்டார். இதனால் தான் சுரா. கிருஷ்ணன் நம்பி 'பாதியில் முறிந்த பயணம்' என்றார்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com