டொரான்டோ அறுமுகனுக்கு தங்கப் பாமாலை
ஜூன் 7, 2007 அன்று டொரான்டோ (கனடா) ரிச்மண்ட் ஹில் கணேசர் கோவிலில் உள்ள ஷண்முக நாதனுக்கு 35,000 டாலர் செலவில் செய்யப்பட்ட தங்கக் காசுமாலை சூட்டும் விழா நடை பெற்றது. இந்த மாலையின் சிறப்பு என்னவென்றால், இதிலிருக்கும் தங்கக் காசுகளின் ஒருபுறத்தில் வள்ளி தெய்வயானையுடன் முருகனின் உருவமும், மறுபுறத்தில் திருப்புகழ்ப் பாடல்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த 12 அடி நீள மாலையில் 25 பொற்காசுகள் உள்ளன. இதில் பொறிப்பதற்கான திருப்புகழ்ப் பாக்களை பசுபதி அவர்கள் தெரிந்தெடுத்தார். இந்த அற்புத மாலை திருப்புகழ் அன்பர்கள் தந்த நிதியத்தால் சாத்தியமானது. அதே நாளில் ரமணன் அவர்கள் 93,000 ரூபாயில் ஒரு தங்கக் கிரீடத்தையும் சார்த்தினார்.

அருணகிரியின் திருப்புகழுக்கு இசை யமைத்து முருகனின் புகழைப் பரப்பி வருபவர் குருஜி டெல்லி ராகவன் அவர்கள். குருஜி ராகவனின் நேரடி சீடரான திருமதி தாரா கிருஷ்ணன் 25 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த டொரான்டோ இசை வகுப்பு இன்று ஆட்டவா, கிங்ஸ்டன், கிச்சினர், திருவனந்தபுரம் எனப் பல கிளைகளாகி உள்ளது. ஒரு நாள் 'முருகனுக்கு தங்கம் தோய்த்த வெள்ளி மாலை சாத்தினால் என்ன?' என்று திருமதி ஜெயஸ்ரீ தம்பி கேட்டதில் தொடங்கிய இந்த மாலைக்கான வித்து. ஒரு வருடத்துக்கு முன் ஆரம்பித்த திருப்புகழ் அன்பர்களின் ஆர்வம் பிற பக்தர்களுக்கும் பரவி, நிதி அளிக்க, 'வெள்ளி என்ன! தங்கத்தாலேயே செய்த மாலையை அணிவிப்போம்' என நிறைவு பெற்ற அற்புதம்தான் அது.

விழாவின் ஆரம்பத்தில் சந்துரு குருக்கள், கல்யாண குருக்கள், ஈச்வர சாஸ்திரிகள், பரணீதரன், கேதிஸ்வர குருக்கள் முதலியோர் வேதகோஷத்துடன் தங்கத் திருமாலையைக் கோவில் பிரகாரங்களைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஆறு ஜதை நாதசுர இசை முன்செல்ல, தாரா கிருஷ்ணன் தலைமையில் சாந்தா கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருப்புகழ் அன்பர்கள் கூடப் பாடிக்கொண்டு ஊர்வலத்தில் சென்றனர்.ஊர்வலம் முடிந்த பின் பூஜை செய்யப்பட்ட புனித நீர், சந்தனம், பன்னீர், பால், தேன் ஆகியவற்றால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் தங்கக் கிரீடமும் பொற்காசு மாலையும் அணிவிக்கப்பட்டன. முடிவில், திருப்புகழைப் பரப்பிவரும் தாரா கிருஷ்ணனுக்குக் கோவில் அறங்காவலர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

அலமேலு மணி, கனடா
படங்கள்: பாலு

© TamilOnline.com