சங்கதி சமுதாய மையம்: ராகவன் மணியன் கச்சேரி
ஓக்லேண்ட் 19வது தெருவில் அமைந்துள்ள சங்கதி சமுதாய மையம் கர்நாடக, ஹிந்துஸ்தானி சங்கீதம் மற்றும் இசைக்கருவி வல்லுனர்களை அறிமுகப்படுத்துவதிலும், நமது பாரம்பரிய சங்கீதத்தை பரப்புவதிலும் மிகுந்த சேவை செய்து வருகிறது.

ஆகஸ்ட் 13 அன்று இந்த மையத்தின் சார்பில் ராகவன் மணியன் ஓர் இனிய கர்நாடக இசைக்கச்சேரி நிகழ்த்தி, சங்கீத ரசிகர்களை மெய்மறக்கச் செய்தார்.இவர் சங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணாவிடம் பத்து ஆண்டுகளாக முறைப்படி சங்கீதம் பயின்றவர்.

தன் சொந்த சாகித்யமான சுத்ததன்யாசிராக வர்ணத்துடன் இவர் கச்சேரியை தொடங்கியதுமே மேடை களைகட்டிவிட்டது.

அடுத்து தியாகராஜ பஞ்சரத்தின கீர்த்தனைகளில் ஒன்றான ஸ்ரீராகத்தில் அமைந்த 'எந்தரோ மஹானுபாவு' என்ற பாடல் உருக்கமாக இருந்தது.

'தத்வமரிய தரமா' என்ற ரீதிகெளளை ராகத்தில் அமைந்த பாபநாசம் சிவனின் தமிழ்பாடலும், அதை அடுத்து சுத்ததன்யாசிராக ''நாராயணா நின்னே'' என்ற புரந்தர தாசர் பாடலும் வெகு இனிமையாக இருந்தது.

முத்தையா பாகவதரின் கர்ணரஞ்சனி ராக பாடலுக்குப் பின், கச்சேரிக்கு சிகரமாக எடுத்துக் கொண்ட 'பக்கல நிலபடி' என்ற கரகரப்ரியா ராக கீர்த்தனையில், ராக ஆலாபனை அருமையாக இருந்தது. இதில் நிகழ்த்திய நிரவலும், ஸ்வர ப்ரஸ்தாரங்களும், மிக்க இனிமையாகவும் தாளக் கட்டுப்பாட்டுடனும் அமைந்திருந்தது.

அடுத்து 'நீ போய் அழைத்து வாடி' என்ற அம்புஜம் க்ருஷ்ணாவின் காபி ராகப் பாடல் ஜனரஞ்சகமாக இருந்தது. பாகேஸ்வரி ராகத்தில் அமைந்த துளசிதாசரின் பஜன், ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பாடகரது தேர்ச்சியும், திறமையும் வெளிப்படுத்தியது.

பாலமுரளியின் ப்ருந்தாவன சாரங்கா ராக தில்லானாவுடன் கச்சேரியை நிறைவு செய்தார். சில இடங்களில் பாடகரது குரு பால முரளியின் பாணி தென்பட்டாலும், இவர் தனக்கென தனித்தன்மை அமைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வயலின் வாசித்த அரவிந்த் லட்சுமிகாந்தன் வயலின் கலைஞர் ஸ்ரீமதி ப்ரம்மானந்தம் அவர்களிடம் பத்து ஆண்டுகளாக பயிற்சி பெற்றவர்.

மிருதங்கம் வாசித்த ஸ்ரீராம் வித்வான் பாலக்காடு ரகு அவர்களின் சிஷ்யராவார். இவர்கள் இருவரும் பாடகருக்கு வெகு உறுதுணையாக வாசித்து கச்சேரிக்கு அழகு சேர்த்தனர்.

சங்கதி சமுதாய மையம் பற்றி மேலும் விவரம் அறிய: www.sangaticenter.org

திருநெல்வேலி விஸ்வநாதன்

© TamilOnline.com