ஜூலை 2007: வாசகர் கடிதம்
நானும் என் மனைவியும் தென்றல் இதழ்களைப் படித்து மகிழ்ந்தோம். அது உண்மையிலேயே அற்புதமான கட்டுரைகளைத் தாங்கி வரும் மிகச் சிறந்த சஞ்சிகைதான். நல்ல தமிழை, அதுவும் தாய்நாட்டிலிருந்து இத்தனை தொலைவில், பரப்பும் உங்களது உயர்ந்த சேவையைப் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டில் கூட இத்தனை உயர்ந்த பருவ இதழ்கள் இல்லை.

டாக்டர் Sm. P. முத்து,
கூப்பர்டினோ, கலி.

*****


எழுத்தாளர் சோ. தர்மனின் 'அடமானம்' சிறுகதை அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. மனிதர் சிவகாசி தீப்பெட்டி வாழ்க்கைகள் வாழ்ந்து வருவோரை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். சிறப்பான, அற்புதமான, உரசிப்பார்க்கிற ஒரு நெருடல்.

டாக்டர் செரியன் அவர்களின் பேட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எத்தனையோ தெரியாத மருத்துவ விசயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட மாபெரும் மருத்துவர் என்று சொல்வதை விட மனித நேயம் மிக்க 'மனிதர்' என்று சொல்வதே மிகப் பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட அருமையான பகிர்தலை நமக்கு அளித்த 'தென்றல்' குழுவினருக்கு நன்றி.

நடராசன் அவர்கள் ஒரு அனுபவம் மிக்க வானொலி மற்றும் தொலைக்காட்சி இயக்குநர் என்பதாக மட்டுமே தெரிந்த பலருக்கு அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பதையும் அவரது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது பலருக்கு இன்ஸ்பிரஷேன்.

சென்னை-நவீன் இர்வைன் (கலி.)

*****


சபாஷ் தென்றல். 'தென்றல் பேசுகிறது' என்கிற தலைப்பில் தாங்கள் வெளியிட்டு இருக்கும் எல்லா விஷயங்களும் சிறந்தவை. அதில் தமிழ்நாட்டு நீதிமன்றங்களைப் பற்றி மிகப் பொறுப்புள்ளவர்கள் அநாகரிகமாகப் பேசி இருக்கும் பாணியைக் கண்டிக்கத்தான் வேண்டும். அது நம் நாட்டின் துரதிர்ஷ்டம். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நாட்களிலே நீதிபதிகள் சட்டத்துக்கு மதிப்புக் கொடுத்து மக்களின் பெருமதிப்பைப் பெற்றுக் கொண்டனர். நம் நாட்டிலே பேச்சு உரிமை பெற்றதும், அதை துஷ்பிரயோகம் செய்து பேசத் தொடங்கி விட்டார்கள். நாம் செய்த பிசகுகளின் பலனை நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். தப்ப முடியாது. 'அரசன் அன்றே கொல்லுவான், தெய்வம் நின்று கொல்லும்' என்கிற பழமொழி பொய்க்காது.

சோ. தர்மன் கதை அனுபவிக்கக்கூடியதாக அமைந்திருந்தது. தொக்கு வகைகளைப் படிக்கும் போது நாவில் நீர் ஊறுகிறது. மருத்துவக் குறிப்புகள் தேவைதான். டாக்டர் கே.எம். செரியனின் அரும்பணிகள் மிகவும் உபயோகமானவை. அபிநய அரசி பால சரஸ்வதியைப் பற்றி எழுதி இருப்பதும் மகிழ்ச்சி. 'கூட்டுப்புழு' கதையை ரசித்தேன். 'இதோ பார், இந்தியா' ரத்தினச் சுருக்கமாகவும், அர்த்தம் உள்ளதாகவும் அமைந்து இருக்கிறது. மொத்தத்தில் ஜூன் இதழ் பாராட்டுக்குரியது.

அட்லாண்டா ராஜன்

© TamilOnline.com