மனிதனின் எல்லை...
தமிழ் சினிமாவுக்கு தமிழில் தலைப்பு வைத்தால் அதற்குச் சலுகை என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இப்படி உலகத்தில் வேறு எங்கேயும் நடக்குமா? போர்ச்சுகல்லில் எடுக்கும் ஒரு படத்திற்கு போர்ச்சுகீசியத்தில் தலைப்பு வைக்க வேண்டும் என்று அரசு சொல்லுமா? தமிழிலே தலைப்பு வைத்து விட்டு உள்ளே முற்றிலும் ஆங்கிலப் பாடலாக இருந்தால் என்ன செய்வது? கொடுத்த சலுகையைப் பிடுங்கிவிடுவார்களா?

அ. முத்துலிங்கம், எழுத்தாளர்

*****


சென்னையில் தினமும் ஒரு கொலை என்று மிக மோசமாகிக் கொண்டு வருகிறது. மக்கள் அமைதியாக வாழ அரசு வழிவகுக்க வேண்டும்.

டாக்டர். ராமதாஸ், பா.ம.க. நிறுவனர்

*****


ஜெயலலிதா என்றுமே சட்டத்தை மதிப்பதில்லை. தன்னைச் சட்டத்துக்கு அப்பாற்பட்ட பெண்மணியாகவே எப்போதும் கருதிக் கொள்கிறார். தனக்கு எதிராகச் சட்டம் பாய்வதை உணரும்போது, கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு வன்முறையில் ஈடுபட வைக்கிறார். இது தவறான கலாசாரம்.

சந்திரலேகா, தமிழக ஜனதா கட்சித் தலைவர்

*****


இவ்வளவு பெரிய ஏரியாவில் அங்கொன்றும் இங்கொன்றும் சில தவறான காரியங்கள், சில நேரங்களில் நடப்பது இயல்புதான். சில குற்றங்கள் அடுத்தடுத்து நடப்பதால் மட்டுமே ஒட்டுமொத்த சட்டம்-ஒழுங்கும் கெட்டு விட்டதாக நினைத்தால் அது தவறானது. ஆனாலும் அந்தச் சில தவறுகளும் நடக்காத அளவுக்கு எங்களின் பணிகளை வரையறுத்துக் கொள்கிறோம்.

லத்திகா சரண், சென்னை மாநகரப் போலிஸ் கமிஷனர்

*****


விரைவில் நான் தொடங்க உள்ள புதிய கட்சியின் கொள்கைகளை வகுக்க ஓய்வுபெற்ற 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்துள்ளேன். எனக்கோ அல்லது எனது சகாக்களுக்கோ தமிழகத்தின் முதல்வராக ஆசை இல்லை.

சரத்குமார், நடிகர்

*****


1992ஆம் வருஷம் எவரெஸ்ட் ஏறத் தேர்வானேன். அந்த வருஷம் மே 12ஆம் தேதியை மறக்கவே முடியாது. காயத்ரி மந்திரத்தை சொல்லிக்கொண்டு, கடவுளை நினைத்துக் கொண்டு ஒருவழியாக ஏறிவிட்டேன். அந்த உயரத்துல எனக்கு எதுவுமே புரியலை. அந்த உயரத்துக்குப் போன பிறகுதான் மனிதர்களான நமது எல்லைகள் என்னங்கிற பயம் வந்தது. கரணம் தப்பினா மரணம்ங்கிற நிலமையில் ஒருவழியாகக் கொடியை ஏற்றிவிட்டுத் திரும்பி விட்டேன். கடவுளுக்குப் பக்கத்துல போய் வந்த மாதிரி ஓர் உணர்வு.

சந்தோஷ் யாதவ், எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை கால் பதித்த உலகின் முதல் பெண்

கேடிஸ்ரீ

© TamilOnline.com