ஏ.கே. செட்டியார்
தமிழில் அதிகம் ஆராயப்படாத துறையாக இருப்பது கட்டுரை வடிவமும் கட்டுரை இலக்கியமும் தான் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டுத் தொடர்பாடலில் அதிகம் விரவி நிற்பது கட்டுரையாக்கம் தான். ஆனால் கட்டுரையாக்கம் அதன் வகைமைகள் பற்றிய புலமைத் தேடல் ஆய்வுநோக்கு முழுதாக ஆராயப்படாத இலக்கியப் பரப்பாகவே இன்றுவரை உள்ளது.

தமிழில் மிகச்சிறந்த பயணக் கட்டுரைகளை எழுதியவர்களுள் ஏ.கே. செட்டியார் முதன்மையானவர். இவரது பயணக் கட்டுரைகள் கடைப்பிடித்த எடுத்துரைப்பு தனி கவனத்திற்குரியது. குறிப்பாக மானிடம் கண்டறிந்த அறிவுத் தேட்டங்களை சமூகப் படுத்தவும் அனுபவங்களைத் தொற்ற வைக்கவும் கட்டுரையாக்கத்தை அதற்குரிய முழுவீச்சில் பயன்படுத்தியுள்ளர். தமிழில் 'பயண இலக்கியம்' என்பதை அறிவும் அனுபவமும் இணைந்து விரவி நிற்கும் வகைமையாகப் படைத்தளித்துள்ளார்.

செட்டி நாட்டு கோட்டையூரில் நவம்பர் 4, 1911-ல் அ.ராம.அ. கருப்பன் செட்டியார் என்ற ஏ.கே.செட்டியார் பிறந்தார். இளம் வயதிலேயே பத்திரிகை படிக்கும் ஆர்வம் அவருக்கு மிகுந்திருந்தது. அக்காலத்தில் செட்டி நாட்டில் கோலோச்சிய 'குமரன்', 'ஊழியன்', 'தமிழ்நாடு', 'நவசக்தி', 'ஆனந்த போதினி' போன்றவற்றைப் படித்து வந்தார். சுதேசிய உணர்வும் சுதந்திர வேட்கையும் நாட்டுப்பற்றும் மிகுந்தவராகவே வளர்ந்து வந்தார்.

1928ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் 'சாரதாம்பாள்-சிறு தமாஷ்' என்ற ஒரே கதையைக் கோட்டையூர் ஏ.கே. செட்டியார் என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். இவர் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார் என்பதற்கு மேல் வேறு செய்தி அறியவில்லை. அவரும் தன்னைப் பற்றிய தகவல்களை முழுமையாக எவரிடமோ அல்லது எங்காவதோ பதிவு செய்ததாக இல்லை.

1930ஆம் ஆண்டின் கடைசியில் 'தன வணிகன்' என்ற மாத இதழை நிர்வாக ஆசிரியராக அமர்ந்து நடத்தினார். இவ்விதழ் கோட்டையூரிலிருந்து வெளிவந்தது. ஜூலை 1931 வரை எட்டு இதழ்கள் வெளியாகி இருந்தன. பின்பு 1932-ல் ஒரு சிறப்பிதழும் வெளியாகியுள்ளது. அதன் பின்பு கோட்டை யூர் தனவணிகன் வெளியானதாகத் தெரியவில்லை. இந்த இதழ் பொது இதழாகவே இருந்தது. இதழ் தொடர்ந்து வெளிவருவதில் தடை ஏற்பட்ட பின்பு ஏ.கே.செட்டியார் பர்மாவுக்குச் சென்றார். பர்மா நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கம் நடத்திய 'தனவணிகன்' இதழுக்கு ஆசிரிய ராகச் சென்றார். 1933 கடைசியிலிருந்து 1936 நடுப்பகுதிவரை அதன் ஆசிரியராகச் செட்டியார் இருந்தாரென அறிய முடிகிறது. 1936 பொங்கல் மலரில் 'அ.கரு' என்ற பெயரில் 'ஜப்பானில் பத்திரிகைகள்' என்ற கட்டுரையை எழுதியிருந்தார். இதுவே பின்னர் அவருடைய முதல் நூலுக்கு (ஜப்பான்) அடிப்படையாக விளங்கியது.

1936-37ல் ஜப்பான் டோக்கியோ கலைக் கல்லூரியிலும் அமெரிக்க நியூயார்க் புகைப்பட நிறுவனத்திலும் ஏ.கே.செட்டியார் புகைப்படம் பிடிப்பதில் பயிற்சி பெற்றார். ஜப்பானில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கு தான் கண்டதையும் கேட்டதையும் உணர்ந்ததையும் கட்டுரைகளாக எழுதத் தொடங்கினார். பின்னர் இக்கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு 'ஜப்பான்' எனும் பெயரில் நூலாக வெளிவந்தது. இதுவே இவரது முதல் நூலாகும்.

ஜப்பானில் நிழற்படவியல் படிப்பை முடித்துக் கொண்டே ஏ.கே.செட்டியார் மேல் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றார். பின்னர் படிப்பு முடிந்து இந்தியா திரும்பும் வழியில் 1937ஆம் ஆண்டில் இவர் இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார். இந்தப் பயணங்களின் போது இவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கட்டுரையாக எழுதினார். பின்னர் அது 'உலகம் சுற்றும் தமிழன்' என்ற பெயரில் சக்தி வெளியீடாக 1940களில் வெளிவந்தது. அதன் பின்னர் செட்டியார் உலகம் சுற்றும் தமிழன் என்றே அழைக்கப் பட்டார். ஏ.கே.செட்டியார் மேற்கொண்ட உலகச் சுற்றுப் பயணங்கள் மூன்றில் இரண்டு பயணங்கள் 'காந்தி' படத் தயாரிப்புக்காகச் செய்யப்பட்டவை என்றே அறிய முடிகிறது. உலகின் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்து அவர் எழுதிய 'பயணக் கட்டுரைகளும் நூல்களும் அயல்நாடுகளையும் பண்பாடு களையும் அறிமுகப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், ஆழ்ந்து நோக்கும் பார்வையில் நம் நாட்டையும் பண்பாட்டையும் உணர்ந்தும் அறிந்தும் கொள்வதற்கான வழிமுறையாகவே அமைந்துள்ளன' என்கிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி.

1930களின் பிற்பகுதியில் இருந்து சக்தி, ஆனந்தவிகடன், ஹனுமான், ஜோதி, ஹிந்துஸ்தான் என செட்டியாருடைய பயணக் கட்டுரைகள் வெளிவராத சீரிய இதழ்களே இல்லை என்ற அளவுக்கு இவரது எழுத்துகள் இடம்பெற்றன. இவருடைய முக்கியமான பயண நூல்களில் ஜப்பான், பிரயாண நினைவுகள், மலேயா முதல் கானடாவரை, அமெரிக்கா, அமெரிக்க நாட்டில், கரிபியன் கடலும் கயானாவும், குடகு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஒரு நாட்டைப் பற்றி எழுதுவதென்றால் அந்நாட்டில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தங்கி அந்நாட்டு மொழியை நன்கு பயின்று அந்நாட்டு மக்களோடு நெருங்கிப் பழகுதல் வேண்டும் என்ற கருத்துடையவர் ஏ.கே.செட்டியார் இருப்பினும் அந்த நடைமுறையை முழுமை யாகப் பின்பற்றக் கூடிய அவகாசம் அவருக்கு இருக்கவில்லை. ஆனால் கூர்மையான நோக்கும் அவதானமும் இவரிடம் இயல்பாக வெளிப்பட்டன. இவற்றைப் பதிவுசெய்வதில், கருத்தாடல் செய்வதில் ஓர் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தார். கட்டுரையாக்க முறைமை யில் தனக்கென்று ஒரு மொழிநடையைக் கையாண்டார்.

பயண நூல்கள் தனிப்பட்ட ஒரு மனிதரின் அனுபவமாக மட்டும் இருப்பதில்லை. பயணம் செய்யும் நாடுகளின் சமூக, அரசியல், பொருளாதார, கலை, இலக்கிய வாழ்க்கையை ஊடறுத்து அதன், அடிநாதமாக ஒலிக்கும் பண்புகளையும் தன்மைகளையும், எது அவர்களின் தேசிய குணமாகப் பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது என்பதையும் அறிந்து தெளிந்து சொல்லும் பாங்கில் இருக்கிறது. அப்படிப்பட்டோரின் எழுத்துக்கள் வரலாற்று முக்கியத்துவம் பெற்று விடுகின்றன. இத்தகைய கருத்துப்பட ஏ.கே.செட்டியார் குறித்து சா. கந்தசாமி எழுதுவது கவனிப்புக்குரியது.

'ஜரோப்பிய வழியாக' கட்டுரைத் தொகுப்பில் முதல் கட்டுரையாக இங்கிலாந்து இருந்தாலும் அது மிகச் சிறிய கட்டுரைதான். ஆனால் இங்கிலாந்து என்பதில் பல அம்சங்கள் அவர்களின் ஆசைகள், ஈடுபாடு, இங்கிலாந் தில் குடியேறி உள்ள இந்தியர் மற்றும் ஆசிய மக்கள், இந்திய ஹைகமிஷனர், அலுவலக ஊழியர்களின் செயற்பாடுகள் எனப் பலவித அம்சங்களைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லும். இதில் அதிகமாக ஏதும் மாறி விடாது என்று வாசகர்கள் தீர்மானிக்கக் கூடிய விதத்திலும் எழுதியுள்ளார். இந்த அம்சமே முப்பதாண்டுகள் நாற்பதாண்டுகள் சென்ற பின்னால் கூட இவர் கட்டுரைகள் படிக்கத்தக்கனவாக உள்ளன. (சா.கந்தசாமி, 2000).

ஏ.கே.செட்டியாருக்கு காந்தி, பாரதி, ராஜாஜி போன்றவர்களிடம் அளவற்ற மரியாதையும் ஈடுபாடும் உண்டு. அவர்களது சிந்தனைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு கொள்கைப் பிடிவாத மிக்கவராகவும் இருந்துள்ளார். இதுவே இவரது செயற்பாடுகளையும், நடத்தைகளையும் மற்றும் ஆளுமைகளையும் தீர்மானித்துள்ளது.

ஏ.கே.செட்டியார் அறிஞர்களின் பொன்மொழிகளைத் தொகுப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டிவந்தார். குமரி மலரில் பொன்மொழிகள் 'கொய்த மலர்கள்' என்ற தலைப்பில் இடம்பெறும். பின்பு இவற்றைத் தொகுத்து ஒரு பெரிய நூலாக வெளியிட்டார். இந்த நூலைப் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் இலவசமாகக் கொடுத்துதவினார். இதன் மூலம் நாம் ஏ.கே.செட்டியாரின் இன்னொரு பரிமாணத்தைக் காணலாம்.

மேலும், செட்டியார் நாற்பதாண்டுக் காலம் நடத்திய 'குமரி மலர்' மாத இதழைத் தமிழ் பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்து வதற்கு முக்கியக் கருவியாக கைக்கொண்டார். 1943ல் தொடங்கிய குமரி மலர் ஏ.கே. செட்டியார் மறையும் வரை ஒரு சிறு இடைவெளி நீங்கலாக மாதம் தவறாமல் வெளிவந்தது. அதன் பிறகுகூட ஜனவரி 1985 வரை எஸ்.கோபாலன் அப்பணியை தொடர்ந்தார். இரண்டாண்டுகள் செட்டியார் வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் குமரிமலருக்கு ஆசிரியராக வெ.சாமிநாத சர்மா பணிபுரிந்தார். செட்டியார் பர்மாவில் இருந்த காலத்திலேயே சாமிநாத சர்மாவிடம் நட்புறவு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரிமலரில் அக்காலத்தில் பிரபலமாக இருந்த எழுத்தாளர்கள் அறிஞர்கள் என பலதரப்பட்டவர்களும் எழுதிவந்தார்கள். இதை விட குமரிமலரில் இன்னொரு விசேடத் தன்மை இருந்தது. அதாவது பழம் இதழ்களில் இருந்தும் நூல்களில் இருந்தும் தமிழ் சமூகம், அரசியல், பண்பாடு ஆகியவை பற்றிய முக்கியமான கட்டுரைகளையும் குறிப்பு களையும் மறுபதிப்பிடுவதைத் தலையாய பணியாகக் கொண்டிருந்தது. தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலங்கள் பற்றிய தேடல் அக்கறை வாசகர்களுக்கு வேண்டும் என்பதை ஏ.கே.செட்டியார் விரும்பியிருந்தார் போலும்.

ஏ.கே. செட்டியாரின் தொகுப்பு நூல்களில் முக்கியமானது 'தமிழ்நாட்டு பயணக் கட்டுரைகள்'. இது 1968ல் புத்தமாக வெளிவந்தது. இது சுமார் 300 பக்கங்கள் கொண்டது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இருந்து தமிழில் பயணம் சார்ந்த பல்வேறு அனுபவங்களையும் குறிப்புகளையும் எழுதிய பலரது எழுத்துக்களை தேடி தொகுத்தார். குறிப்பாக பயணக்கும்மி, ஜட்கா சவாரி, பஸ்பயணம், கப்பல்வண்டி, ரயில்வண்டி போன்ற புதிய வாகனங்களின் வருகை, மின்சார சாதனங்களின் நுழைவுபோன்றவை இடம்பெற்றுள்ளன. இதைவிட அக்காலத்தில் நிலவிய பிளேக், காலரா போன்ற நோய்களின் பரவல் போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் 19ஆம் நூற்றாண்டு இறுதியில் இருந்து நூறு ஆண்டுகளில் தமிழர் எழுதிய சுமார் நூற்றிநாற்பது பயணக்குறிப்பு களையும் கட்டுரைகளையும் பாடல்களையும் கொண்ட நூலாகும். இந்த நூல் பயண இலக்கிய வரலாறு என்பதற்கு மேலாக, தமிழ் பண்பாட்டு வரலாற்றுப் பலகணியாகவே விளங்குகிறது என்று சொல்வது பிழையாகாது என்பார் அ.இரா. வேங்கடாசலபதி.

தொடர்ந்து வரலாற்றை ஆவணப்படுத்தும் பெரும் பணியின் ஒரு பகுதியாகவே அவர் எடுத்த 'மகாத்மா காந்தி' என்ற படத்தையும் குறிப்பிடவேண்டும். செட்டியார் 1937 அக்டோபர் 2ஆம் நாள் நியூயார்க்கில் இருந்து டப்லினுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது காந்தி பற்றிய ஆவணப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இரண்டரை ஆண்டுகளில் ஏறத்தாழ நூறு காமிராக்களால், முப்பது ஆண்டுகளில் படம் பிடித்த ஐம்பதாயிரம் அடி நீளம் உள்ள படங்களை, உலகம் முழுவதும் ஒரு லட்சம் மைல் பயணம் செய்து தேடி யெடுத்து, பன்னிரண்டாயிரம் அடி நீளமுள்ள படமாகத் தொகுத்து 1940ல் வெளியிட்டார். தனது 29ஆவது வயதில் இந்த சாதனையை செய்து முடித்தார். ஆகஸ்ட் 23, 1940ல் சென்னையில் ராக்ஸி திரையரங்கில் இப்படம் வெளியிடப்பட்டது. இதற்கு அடுத்து டில்லியில் இந்திய விடுதலை நாள் தருணம் 14 ஆகஸ்ட் 1947ஆம் தேதி மாலை 6 மணிக்கு மீண்டும் இப்படம் திரையிடப்பட்டது.

காந்தி படம் இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றிய ஒரு அரிய கட்புல ஆவணம். இதனைத் தமிழரல்லாதார் ஒருவர் செய்திருந்தால் இந்தியாவே கொண்டாடி யிருக்கும். ஆனால் தமிழர் என்ற காரணத்தால் கட்புல ஆவண முன்னோடி ஏ.கே. செட்டியார் மறக்கடிக்கப்பட்டுள்ளார். ஆ.இரா.வேங்கடாசலபதியின் முயற்சியினால் காந்திபட உருவாக்கத்தை பற்றி செட்டியார் எளிய நடையில் சுவையாகவும் சிறு சிறு நிகழ்ச்சிக் குறிப்புகளுமாகவும் எழுதிய கட்டுரைகள் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டு 'அண்ணல் அடிச்சுவட்டில்' என்னும் தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்துடன் நூலின் பின்னிணைப்பாக அரிய பல கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

செட்டியார் செப்டம்பர் 10, 1983ல் மறைந்தார். ஆனால் தனது வாழ்நாளில் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் அடக்கமாக வாழ்ந்து, விரிவும் ஆழமும் மிக்க பணிகளைச் செய்துள்ளார். தமிழக அரசு பாரதி நூற்றாண்டு விழா எடுத்தபோது பாரதியியலுக்குச் செட்டியார் ஆற்றிய பங்கைப் பாராட்டி ஒரு கேடயம் வழங்க முன்வந்தது. ஆனால் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்த ஏ.கே.செட்டியார் விழா நாளன்று பனகல் பூங்காவில் அமர்ந்திருந்தாகச் செய்திகள் உள. இதைவிட தமக்குப் பதிலாக விழா மேடையில் தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சி.என்.கிருஷ்ண பாரதி அக்கேடயத்தைப் பெற்றுக் கொண்டதற்கும் ஏ.கே.செட்டியார் கண்டனம் தெரிவித்தாரென்றும் தகவல் உண்டு. எவ்வாறாயினும் ஏ.கே.செட்டியார் அவர்களின் ஆளுமை இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. கட்டுரையாக்கம் பற்றிய ஆய்வுநிலைத் தேடலில் பயண இலக்கியம் சார்ந்த வகைமைக்கான அடிப்படைகளையும் அழகியலையும் வழங்கிச் சென்றுள்ளார். இதில் ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்து உலகம் சுற்றும் தமிழராக எமக்கு இன்றும் காட்சியளிக்கின்றார். மேலும் கட்புல ஆவண முன்னோடியாகவும் ஏ.கே.செட்டியார் உள்ளார்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com