ரெளத்திரம் பழகு
ஹரி கிருஷ்ணன்

அந்தக் காலத்தில் டைப்ரைட்டர் இயங்கும் ஒலியைக் கேட்டிருக்கிறீர்களோ? நல்ல வேகத்துடன், ஒரே சீராய், தாளக்கட்டு தவறாமல் இயக்கும் வித்தைக்கு ஸ்டகாடோ டச் என்று பெயர். கை தயங்காது. விரல் தடுக்காது. ஒவ்வொரு எழுத்து விசையும் போய் காகிதத்தில் பதியும் ஒலி கிண்ணென்று கேட்கும். மிகத்தேர்ந்த கை இயக்கினால்தான் அப்படி ஒரு சீரான ஒலி கேட்கும். ஒரு நிமிடத்துக்கு அறுபது வார்த்தை அடித்தால், முன்னூறு எழுத்து விசைகள் அந்த ஒரு நிமிடத்தில் மோதுகின்றன என்று பொருள். அத்தனை விசைகளும் தனித்தனியாகப் படிந்து, தனித்தனியாகத் தத்தம் இடத்துக்குத் திரும்ப வேண்டுமானால், கையின் இயக்கம் சீராக இருக்க வேண்டும். அப்படித்தான் வெடித்துக் கொண்டிருந்தார் நண்பர். வார்த்தைகள் சீராகவும், உறுதியாகவும், கோபமாகவும் வந்து விழுந்துகொண்டிருந்தன. 'வந்த நேரமே சரியில்லை,' என்று வாசலில் தயங்கினேன். அவருடைய அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். உள்ளே யாருக்கோ அர்ச்சனை.

மெதுவாக எட்டிப் பார்த்தேன். அதே சமயம் தொலைபேசி சிணுங்கியது. எடுத்தார். சட்டென்று மலர்ந்தார். முகத்தில் அத்தனை நேரம் தாண்டவமாடிய கடுமை ஒரு நொடியில் மறைந்தது. இத்தனை நேரம் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்த குரலில் தலைகீழ் மாற்றம். ஏதோ வியாபார நண்பர் அழைத்திருக்கிறார். முகம் மலர்ந்தது போலவே மனமும் மலர்ந்து பேச ஆரம்பித்தார். அப்படியே கண் உயர்த்தி என்னைப் பார்த்தார். புருவங்கள் உயர்ந்து, கண்கள் மலர்ந்து, கைகள் நீண்டு, உள்ளே அழைத்து, நாற்காலி காட்டி உட்காரச் சொல்லின. அந்தப் பக்கம் திரும்பினார். கோபத்துக் குள்ளானவர் கைகளைப் பிசைந்துகொண்டு நின்றார். நண்பரின் முகத்தில் ஒரு விநாடியில் கடுமை திரும்பியது. அரை விநாடி அந்த நபரை உற்றுப் பார்த்துவிட்டு, 'போகலாம்' என்று தலையசைத்து, தொலைபேசியைக் கீழே வைத்து, என்னை நோக்கி உற்சாகமாகத் திரும்பிப் பேச ஆரம்பித்தார்.

ஒன்று அல்லது ஒன்றரை நிமிட நேர நாடகம். நண்பருக்குச் சினம் வருகிறது, போகிறது, மாறுகிறது, முகம் மலர்கிறது, சினம் மறுபடியும் வருகிறது, விநாடி நேரத்தில் மாறுகிறது, முகம் மறுபடியும் மலர்கிறது. 'என்னடா இது? பெரிய வித்தையெல்லாம் காட்டறான் இன்னிக்கு' என்று நினைத்தபடியே உட்கார்ந்திருந்தேன். என் எண்ண ஓட்டத்தை, செய்தித்தாள் படிப்பது போல படித்துவிட்டார் நண்பர். 'என்ன அப்படியே ஒக்காந்துட்டே' என்று பெரிதாகச் சிரித்தார்.

'இல்ல... ஒன்ன இவ்வளவு கோவத்துல பாத்ததில்ல...'

'அட அது அப்படித்தாம்பா. சில சமயம் கடுமையா இருக்க வேண்டியிருக்கிறது. அதைக் கையில் எடுக்காவிட்டால் நடக்க வேண்டியது நடக்கறதில்ல. சில சமயங்களில், சில பேர்களிடம் இதைச் செய்துதான் தீர வேண்டியிருக்கிறது.'

'அப்போ சார் அடிக்கடி மேற்கோள் காட்டுவீங்களே, அது? அந்த.... அது என்ன... "காய் கவர்ந்தற்று..." அப்புறம் அது என்னவோ சொல்லுவீங்களே, "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி...."

'ம் ம் ம் தெரியும்... நீ இங்கதான் வருவன்னு தெரியும்' பெரிதாகச் சிரித்தார். 'கோவப்படாதே அப்படின்னுதான் வள்ளுவர் சொல்லியிருக்கார். கோவமே படாதேன்னு சொல்லலையே!' என்றார் மர்மச் சிரிப்புடன்.

'கோவம் ஒவ்வொரு நிர்வாகிக்கும் இருக்க வேண்டிய குணங்களில் ஒன்றப்பனே. உனக்குத் தெரியாததா? ஒவ்வொரு மனுஷனும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிர்வாகியின் வேலையைச் செய்யறான். தேவைப்படும் நேரத்தில் சினமும் கொள்ளத்தான் வேண்டும். சும்மா சும்மா எல்லாரிடத்திலும், எல்லா சந்தர்ப்பத்திலும் கனியை எடுத்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது.'

'ஆமாண்டா. உனக்குச் செளகரியப்படும் போது ஒரு மாதிரி, படாதபோது வேறு மாதிரி கதை சொல்லுவ, அப்படித்தானே? சரி. எப்படியும் போகட்டும். முதல்முறையா வள்ளுவர் சொன்னது வேலைக்கு ஆவாதுன்னு ஒத்துக்கிட்ட. அது போதும்' என்றேன்.

'பொறுமை. பொறுமை. பொறுமை' என்று கையமர்த்தினார் நண்பர். 'அந்தப் புறநானூற்றுப் பாட்டு ஒண்ணு அடிக்கடி சொல்லுவியே, அதைச் சொல்லு' என்றார்.

'எது? இப்படிக் கேட்டா எதைச் சொல்றது? எத்தனையோ சொல்வேன். நீ எதைச் சொல்ற என்று எப்படி விளங்கிக்கிறது?'

'அதாண்டா... மண்ணு, நீர், நிலம், ஆகாயம் எல்லாம் வருமே, அது'

'அதா... சொல்றனே.

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தை வரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும்
என்று ஆங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல'

மண்ணால் கெட்டிக்கப்பட்ட பூமியும், பூமி மேல திகழும் ஆகாயமும், ஆகாயத்தைத் தடவி வரும் காற்றும், காற்றினால் வளர்க்கப்படும் தீயும், தீக்கு எதிரான குணத்தை உடைய நீரும்....'

'முடிக்கலியே. சொல்லு. இதை வச்சு என்ன சொல்ல வரார்?'

'போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்'

பூமியைப் போல பொறுமையும் ஆகாயத்தைப் போல பரந்துபட்ட ஆலோசனை அல்லது அறிவுத் திறனும் காற்றைப் போன்ற பெருவலிவும் சாம்பல் மட்டுமே எஞ்சும்படியாக எரிப்பதில்--அதாவது தண்டிப்பதில்--நெருப்பைப் போலவும், தண்ணீரைப் போல அன்பும் அருளும் உடையவன் அப்படின்னு கொண்டு கூட்டி பொருள் கொள்ளணும்.

'சரியாச் சொல்லப்பா. பொறுமைக்கு பூமியை உவமையாகச் சொன்னார்; அறிவுக்கு ஆகாயம்; வலிமைக்குக் காற்று; அன்புக்கு நீர். அப்ப நெருப்பு என்ன குணத்தைக் குறிக்கிறது?'

'ம்ம்ம்... அங்க வரியா.. இந்த இடத்தில் நெருப்பு என்பது கோபத்தைத்தான் குறிக்கிறது,' என்று இழுத்தேன்.

'அதான். அதான் சொல்ல வரேன். நம்முடைய தொன்மையான சிந்தனையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம முதல்ல நம் பார்வையை மாத்திப் பழகவேண்டும். திருக்குறளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் சங்க இலக்கியம் தொடங்கி, பாரதி இலக்கியம் வரையில் பரந்துபட்டுக் கிடக்கும் பலவகையான கருதுகோள்களை நாம் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். இதோ இந்தப் பாட்டில் சொல்லியிருக்கிறதே ஐம்பெரும் பூதங்களையும் மனிதனுடைய ஐம்பெருங்குணங்களோடு ஒப்பிட்டு, இது ஒரு அடிப்படைக் கருதுகோள். இல்லையா?'

'உண்மை. நம்ம இலக்கியம் முழுவதிலும்--தமிழ் என்று இல்லை, தொன்மையான இந்திய இலக்கியம் முழுவதிலும்--இது அடிப்படையான ஒப்பீடாகவும் கருதுகோளாகவும் வழங்கி வருவது உண்மைதான்.'

'இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத காரணத்தால்தான் 'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்ற இடத்தில் தாழ் என்றால் தாழ்ப்பாள் என்று தவறாகப் பொருள்கொண்டு சொல்லியும் உரை எழுதியும் வருகிறார்கள். பரிமேலழகர் இந்த இடத்தில் எப்படி வேறுபடுகிறார் என்பதை நீயே ஒருமுறை எடுத்துக் காட்டியிருக்கிறாய்.'

'உண்மை. ஒப்புக் கொள்கிறேன். இப்ப என்னதான் சொல்ல வர? திருவள்ளுவர் கோவப்படச் சொன்னாரா? கோவம் சரிதான்னு சொல்லியிருக்காரா'

'அப்பனே.. ரொம்பத்தான் கோபப்படுகிறாய். கொஞ்சம் யோசி. 'கடிதோச்சி மெல்ல எறிக' (குறள்: 562) அப்படின்னு அரசனுக்குச் சொல்றாரு இல்லையா? ஆசிரியர் ஓங்குவது போல பிரம்பை மிக உயரமாக ஓங்கவேண்டும். அடி எவ்வளவு வேகமாக விழுமோ, எப்படி வலிக்குமோ என்று நடுநடுங்க வைக்கவேண்டும். ஆனால் அடிக்கும்போது மெல்ல அடிக்கவேண்டும் அப்படின்னு சொல்றாரே, அப்போ ஓங்கும் போது அவ்வளவு உயரமாக ஓங்க சினம் வேணுமா வேணாமா? குறைந்தபட்சம் முகத்தில் ஒரு நடிப்புச் சினமாவது தென்படவேணுமா வேணாமா? சரி. அது போகட்டும். அதுலயாவது நடிப்புச் சீற்றத்தைச் சொல்றாரு. 'ஈர்ங்கை விதிரார் கயவர்' (குறள்: 1077) அப்படின்னு ஒண்ணு சொல்றார் இல்ல? கயவர்கள் எச்சைக் கையால் கூட காக்கா ஓட்ட மாட்டாங்க. எச்சிலான கையை உதறக் கூட மாட்டார்கள். இந்த மாதிரி கருமிகளிடம் இரக்கமே காட்டாதே. 'கொடிறு உடை' முகரைக்கட்டையைப் பெயர்த்துவிடு. அதுவும் எப்படி 'கூன்கை'யால். விரல்களை மடக்கி, முஷ்டி பிடித்து ஓங்கி தாடை உடைந்துபோகும்படி குத்துவிட்டாலொழிய கருமிப் பயல்கள் ஒண்ணும் தரமாட்டாங்க என்று சொல்றார் இல்ல? கோவப்படா விட்டால் கை முஷ்டிபிடிக்குமா, முகரையைப் பெயர்க்குமா? என்ன சொல்றாரு இங்க? கோவப்படுன்னு சொல்றாரா, குனிஞ்சு நின்னுக்கன்னு சொல்றாரா? அப்ப எது சரி? 'சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்றும் சொல்லியிருக்கிறார். இந்தக் கொல்லியோடு சேர்ந்து வாழவும் சொல்லி யிருக்கிறாரா இல்லையா?'

'என்னவோ சொல்ற. புரிகிற மாதிரியும் இருக்கிறது. இல்லாத மாதிரியும் இருக்கிறது. அப்ப கோவப்படுன்னும் சொல்றாரா வள்ளுவர்?'

'அதான். நாம் ஒன்றை மறந்துவிட்டோம். உரிய சொற்களை உரிய இடத்தில் வைத்து அந்தந்த இடத்துக்கு உரிய பொருளைக் கொள்வதே முறை அப்படிங்கறதை சுத்தமா மறந்துவிட்டோம். குருட்டுத்தனமா 'சின மென்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்று எல்லாருக்கும் எல்லாச் சந்தர்ப்பத்திலும், எல்லா நிலையிலும் பொருந்தும் என்பதுபோல் பொருள் சொல்லிக்கொண்டிருந்தால், மேற்படிக் குறளுக்கு எல்லாம் என்ன பொருள் சொல்வது?'

'அதான் நானும் கேட்கிறேன். என்ன பொருள் சொல்வது?'

சொல்கிறேன். கொஞ்சம் பொறுமையா இரு. அதுவரைக்கும் இதோ காப்பி கொண்டு வந்திருக்கான். அருந்தியபடி யோசி.

(வளரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com