ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு: சி.கே. கரியாலி
ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை

சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக அதனைக் கற்றுக் கொண்டு, ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்க்கை நடத்தி வருபவர். அவர் தமது அனுபவங்களைத் தொடர்ந்து சென்னை ஆன்லைனில் எழுதி வருகிறார். அதிலிருந்து சில பகுதிகளைத் தென்றல் தருகிறது...

அது 1973 வருடம் மே மாதம். எனக்கு இருபத்து நான்கு வயது. மாவட்ட ஆட்சியாளரிடம் உதவி ஆட்சியாளராகப் பயிற்சி பெற நான் கோவைக்குச் சென்று சேர்ந்தேன். அங்கு பேசும் மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது. ரயில் நிலையத்தில் இறங்கிய என்னை வரவேற்க சிரஸ்தார் பதவி வகிப்பவர் வந்திருந்தார். அவர் சுற்றுலா மாளிகையில் என்னைத் தங்க வைத்ததுடன், தனக்குத் தெரியாமல் வெளியில் எங்கும் செல்லக் கூடாது என்றும் அறிவித்து விட்டுச் சென்றார். எனது முதல் பிரச்னை மொழி. இயல்பாகவே மொழிகளில் எனக்குச் சரளம் உண்டு. ஆனால் தமிழைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருந்தது. மாவட்ட ஆட்சியாளர் சிவகுமார், சர்மா என்ற ஓய்வு பெற்ற தமிழாசிரியரை எனக்குத் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லை. என்னால் அவ்வளவு எளிதில் தமிழைக் கற்றுக் கொள்ள இயலவில்லை. இப்படியே மூன்று மாதங்கள் கடந்து விட்டன.

ஒருநாள் கிராமத்திலுள்ள ஒரு பால் பண்ணையைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டேன். அது வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணியால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அவர் பேசும் தமிழைக் கண்டு நான் வியந்து போனேன். கொஞ்சு தமிழில் அவர் தாம் வளர்த்து வந்த பசு, எருமைகளிடம் செல்லமாகப் பேசிக் கொண்டிருந்தார். நான் இந்தியப் பெண். தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்தவள். ஆனால் தமிழில் வேலையாட்களுக்கு ஆணையிடக்கூட எனக்குத் தெரியாது. அரசு கருணை கூர்ந்து உருது பேசத் தெரிந்த ஒருவரை எனக்கு வழங்கி யிருந்தது. அதே சமயம் என் முன்னால் ஒரு மேல்நாட்டுப் பெண் நின்றுகொண்டு சரளமாகத் தமிழ் பேசுகிறார். அவரால் முடியும் என்றால் என்னாலும் செய்யமுடியும், செய்ய வேண்டும் என்று அன்றே அப்பொழுதே, முடிவு செய்து கொண்டேன். மீண்டும் சர்மாவிடம் எனது தமிழ்க் கல்வி தொடங்கியது. ஆனால் நான் அதில் முழுமையாகத் தேர்ச்சி பெறுவதற்குள் அவர் காலமாகி விட்டார். இருப்பினும் தமிழ்நாட்டில் பேசப்படும் 'பிராமணப் பாங்கு உச்சரிப்பை' என்மீது முத்திரையாகப் பதித்து விட்டுத்தான் அவர் மறைந்தார்.

நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் கே. பாலசந்தர் இயங்கிய 'அரங்கேற்றம்'. ஒரு திறமை வாய்ந்த இயக்குநர் படத்தின் மொழி தெரியாத பார்வையாளருக்கு அதை எப்படி எடுத்துச் செல்ல முடியும் என்பதையும், தமிழ் சினிமா எவ்வளவு சக்தி மிக்கதாக இருக்கக் கூடும் என்பதையும் அந்தப் படத்தின் மூலம் நான் புரிந்து கொண்டேன். அதுமுதல் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளத் தமிழ் சினிமாவின் மீதே நம்பிக்கை வைத்தேன். குறைந்த செலவில் படம் தயாரிப்பவர்களுக்கு மானியம் வழங்கும் குழுவில் மூன்றாண்டு காலம் உறுப்பினர் செயலாளராக நான் பணியாற்றிய போது பல திரைப்படங்களைப் பார்த்தேன். இன்றும்கூட நேரம் கிடைக்கும் போது தமிழ்த் திரைப்படம் பார்க்கிறேன். அதிகாரவர்க்கம், அரசியல் பற்றியல்லாம் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அருகிலிருந்து பார்க்க இது எனக்கு உதவுகிறது.

நான் பயிற்சிக்காக மாவட்ட ஆட்சியாளர் திரு. சிவகுமார் அவர்களின் முகாம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டேன். அவர் 32 வயது இளைஞர். நேர்மையாளர்; மதிநுட்பம் மிக்கவர். பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். 'நேரிடையாகக் கேட்டறியாமல் எதையும் ஒருபோதும் நம்பாதே; வதந்திகளை ஒருபோதும் கேட்காதே. நூறு சதம் நிச்சயம் என்று உறுதி செய்து கொள்ளாமல் பாதகமாக ஆணை பிறப்பிக்காதே. மக்களுக்கு தாரளமாக உதவி செய். மக்கள் நலனுக்காக விதிகளைத் தள்ளிவை. சமூகத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய். ஒழுங்குமுறையை இசைவாக மாற்றிக் கொள். நீ வெற்றிபெற விரும்பினால் விஷயங்களை மாற்றிக்கொள்ள பிடிவாதமாக இரு' - இவையெல்லாம் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டவை. அதில் இறுதியானது, சிகப்புநாடா முறையை ஒழிப்பதாகும். சிவகுமாரும் அவரது துணைவியாரும் டில்லியில் வளர்ந்த தமிழர்கள். அவர் டெல்லியின் புகழ்பெற்ற செயின்ட் ஜான் கல்லூரியின் மாணவர். அவரது துணைவி பரத நாட்டியக்கலைஞர். மிராண்டா கல்லூரியில் படித்தவர். காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். நானும் டெல்லி பல்கலைக்கழக மாணவிதான். ஆகவே எங்களுடைய நட்பு உறுதிப்பட்டது.

பயிற்சியின்போது அன்றாடம் நடந்த வேலைகளை நாட்குறிப்பு போல் எழுதி வைக்க வேண்டும். எனது நாட்குறிப்பு சமர்ப்பிக்கும்படியான உருவத்தில் இருக்காது என்றாலும் சிவகுமார் இவற்றை தாராள குணத்துடன் விட்டுவிட்டார். ஒவ்வொரு நாளும் இரவு உணவு அவர்கள் வீட்டில் தான். முதலில் எப்படியாவது இதைத் தவிர்க்க முயற்சி செய்தேன். இரவு 7 மணிக்கு அங்கு நான் தலைகாட்டவில்லை என்றால் என்னை அழைத்துச் செல்ல அவர்களுடைய கார் வந்துவிடும். சிவகுமாரும் அவரது மனைவியும் மிகவும் எளிமையானவர்கள், நேர்மையானவர்கள். அவர்கள் வீட்டுச் சமையலும் சிக்கனமானதாகவே இருக்கும். அவர்கள் எனக்கு உணவு அளித்ததோடு அல்லாமல் என்மீது அளவற்ற அன்பையும் பாசத்தையும் கொட்டினார்கள். எனக்கு வழிகாட்டியாகவும் பாதுகாவலாகவும் இருந்து தமிழ் கலாசாரத்தில் வேரூன்றவும் உதவினார்கள். எனது குருமார்களாக இருந்து தமிழகத்தையும் அதன் பரம்பரைப் பெருமையையும் மதிக்கவும் நேசிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். எனது இசை, நாடக ஆர்வத்தையும் வளர்த்தார்கள். சிதம்பரத்திலும் மாமல்லபுரத்திலும் நாட்டிய விழாவைத் தொடங்கவும் தூண்டுசக்தி யாகவும் இருந்தது அவர்கள்தாம்.

ஒரு துணை ஆட்சியாளராகப் பயிற்சி பெறுவதில், நான் ஒரு கிராமத்தின் சமூகப் பொருளாதாரத்தை ஆய்வு செய்வதும் ஒரு பகுதியாகும். அவ்வாறு ஆய்வு செய்யும் அதிகாரிகள் கிராமங்களில் தங்கி இருப்பது தான் வழக்கம். வேடப்பட்டி என்ற கிராமம் எனது ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டது. கிராம அதிகாரியின் பொறுப்பில் நான் ஒப்படைக்கப்பட்டேன். நான் அங்கு சென்ற அன்றைய தினமே அந்த கிராமத்தின் சுற்றுப்புறப் பகுதி தன் பொறுப்பில் உள்ளதென்பதையும், அவர் சொல்படி நான் நடக்க வேண்டும் என்பதையும் கிராம அதிகாரி தெளிவாகச் சொல்லிவிட்டார். நான் தங்கி இருக்க வாடகைக்கு ஓர் இடம் பிடிக்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவரோ அந்த கிராமம் நல்ல இடமல்ல என்றும், நான் தங்குவதற்கு தகுதியான ஒரு இடம்கூட அந்த ஊரில் இல்லை என்றும் ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார். விவாதங்கள் வளர்ந்தன. இறுதியில் அவர் வீட்டிலேயே தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. ஒருமாதம் முழுவதும் அவர் வீட்டில் தங்கினேன்.

அவருடன் வீட்டில் அவரது வயதுவந்த பெண் பத்மாவும் வசித்து வந்தார். திருமணத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் வசீகரமான இளம்பெண் பத்மா. இளம் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையைக் கண்டறிய பத்மாதான் எனக்குப் பலகணியாக இருந்தாள். அங்குதான் தமிழ் உணவை, பருப்பு மசியல் நெய்யுடன் ஆரம்பித்து, சாம்பார் சாதம், ரசம், மோர், பொரியல், கூட்டு, அப்பளம், ஊறுகாய் என்று சுவையாக உண்டேன்.

ஒருமாதம் கிராம அதிகாரியுடன் அந்த கிராமத்தைச் சுற்றி அலைந்தேன். பல இடங்களுக்குத் தனியாகவும் சென்று வந்தேன். ஆனால் கிராமத்தில் நான் கண்ட கண்ட நபர்களுடன் பேசிக் கொண்டிருப்பது, கிராம தேவதைகளுக்கான பலி விழாவைப் பார்க்கச் செல்வது, பிரேத ஊர்வலத்தில் ஆடிய நாட்டியத்தை பார்க்கப் போனது என்று பல விஷயங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. மாலைநேரங்களில் நாங்கள் கிராம நில ஆவணங்களையும் வருவாய்த்துறை ஆவணங் களையும், பிறப்பு இறப்பு மற்றும் திருமணப் பதிவேடுகளையும் சரிபார்ப்போம். கிராமங்களில் சிக்கலில்லாத விஷயங்களில் அவர் நீதி வழங்கி வந்தார். அவர் நற்குண சீலர்; நேர்மையான மனிதர். கிராமத்தின் ஒட்டு மொத்த நலனுக்காகப் பாடுபட்டவர். பாரபட்சமற்ற மனிதர். அவர் இப்போது இல்லை என்றாலும் அவரது பெண் பத்மாவுடனான எனது நட்பு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் மனநோய் பிரிவில் எம்.டி. படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ராஜ்குமாருக்கும் எனக்கும் திருமணம் நிச்சயமானது. அதன்பின் நான் தேசிய அகாடமியில் பயிற்சிக்காக டேராடூனுக்குச் சென்றேன். அங்கு சுதா சின்ஹாவுடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் அறையைப் பகிர்ந்து கொண்டோம். இந்த நட்புறவு இன்றைய தேதிவரை தொடர்கிறது.

ஒருநாள் எங்கள் அறையின் பணியாளாக இருந்தவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரைப் போன்றே பலருக்கும் இந்நிலை இருப்பதாக அவர் கூறக் கேட்டு, காரணம் அறிய அவனது குடியிருப்புக்குச் சென்று பார்த்தோம். சிறிதும் சுகாதாரமற்ற அந்தப் பகுதியைப் பார்த்து மனம்நொந்து போனோம். அங்கு பலருக்கு மார்பில் தொற்றுநோயும் காசநோயும் தாக்கி இருப்பதாகச் சந்தேகப்பட்டேன். குழந்தைகளுக்குப் போதிய பாதுக்காப்பும் இல்லை. அடுத்த நாளே இயக்குநரிடம் அவர்களின் அவலநிலை பற்றியும், அவர்களுக்குத் தேவையான சிகிச்சை முறைகள் பற்றியும் தெரிவித்தேன். இயக்குநர் சாத்ரே ஐ.ஸி.எஸ். உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். அது பணியாளர்களது வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

முதன்முதலாக அகாடமியில் சமூகநல மன்றம் அமைக்கப்பட்டது. அதன் நிர்வாகியாகப் பொறுப்பேற்க நான் அழைக்கப்பட்டேன். இந்த ஒரு மன்றம் மட்டும்தான் தேர்தல் இல்லாமல் அமைக்கப்பட்டது. நான் அடிக்கடி பணியாளர்கள் குடியிருப்புக்குச் சென்று குழந்தைகளுடன் நட்புறவு பூண்டு அவர்களுக்காக விளையாட்டுகள், போட்டி பந்தயங்கள், கலாசார நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்வேன். ஒருநாள் பாட்டா நீர் வீழ்ச்சி வன விருந்துக்கு அவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தேன். ஆனால் அதில் பலவித சிக்கல்கள் தொடர்ந்து ஏற்பட்டன. அதற்கு பலத்த எதிர்ப்பும் நிலவியது. தொண்டர்கள் வராததாலும், பேருந்தைக் கிளப்ப முடியாததாலும் பயணத்தைத் திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. பின் காய்கறிச் சுமைகளுடன் அங்கு வந்த சிறு லாரியை நான் உபயோகப்படுத்திக் கொண்டேன்.

குழந்தைகள் குதூகலத்தோடு வண்டியில் ஏறிக் கொண்டிருந்தபோது எனக்கு நிச்சயிக்கப்பட்ட கணவர் டாக்டர் ராஜ்குமார் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். என்னை ஆச்சரியப் படுத்துவதற்காக திடீரென டில்லியிலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார். வண்டியில் ஓட்டுநருக்குப் பக்கத்தில் நான் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர் திகைத்துப் போனார். நான் பயணத்தை ரத்து செய்ய முடியாது என்று அவரிடம் சொன்னேன். அவருடைய சுயமரியாதை பெரிதும் புண்பட்டது. அவர் டெல்லியிலிருந்து இவ்வளவு தூரம் கடந்து என்னைப் பார்க்க வந்திருக்கிறார். ஆனால் நானோ வண்டியில் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எனவே எனக்குப் பதிலாகச் செல்லும்படி வேறு சிலரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் யாரும் முன் வரவில்லை. நீங்களும் என்னுடன் வாருங்கள் என்ற என் கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை. கோபித்துக் கொண்டு கடுத்த முகத்துடன், விருந்தினர் இல்லத்துக்குத் திரும்பச் சென்றுவிட்டார். அவரை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர எனக்கு மேலும் இருபத்து நான்கு மணிநேரம் பிடித்தது. மறுநாள் ரிக்ஷாவில் சவாரி செய்ய என்னை அழைத்துச் சென்றார். நூலகமுனை வரை ரிக்ஷாவில் சவாரி செய்து வந்தோம். என்னைக் குறித்து அவர் மிகவும் பெருமிதம் கொள்வதாகச் சொன்னார்.

(தொடரும்)

ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை

© TamilOnline.com