ஆட்டம்
முதலில் இரண்டு கைகளையும் இடுப்பில் கொடுத்து தலையை மட்டும் இடமும் வலமுமாகத் திருப்பி ஒன், டூ, ஒன், டூ... கழுத்து சுளுக்கிக் கொள்ளாவண்ணம் லாவகமாக, தாளலயத்துடன் பொருந்துவதாக, முக பாவனை குறுஞ்சிரிப்புடன்... மொட்டு மலர்வதாக, ஆட்ட சுதாரிப்பில் உதடுகள் குவிந்துவிடவோ, பிளந்துவிடவோ கூடாது. மழலைக் குழந்தை, தாளக் கணக்குகளை மட்டும் மனதில் கொண்டு கைகால்களை அசைத்தபோது நடன ஆசிரியை பாட்டு, பாவத்துடன் பொருந்துமாறு திருத்திக் கொண்டிருக்கிறாள்.

அவள் அசைவற்று இவற்றை கவனிக்கும் போது தன்னுள் மெல்லிய சலனம் பரவி விரல்நுனி தரையில் சத்தமிடாது தொடர்ந்து மோதுவதையும், இதயத்துடிப்பு பரிமளத்துடன் இசைப்பதையும் மென்னகை கண்களில் பரவுவதையும்...

குழந்தைகளின் அசைவுகள், வாத்தியக் கருவிகளின் மீது காற்று மோதும் முன்னேற் பாடில்லாத அதிர்வுகளாக ரூபங் கொண்டிருந்த போது முதியோர் இல்லத்தில் முதியவர்கள் மேல்நாட்டு உடை தரித்து, முகத்தில் ரோஜாச் சாந்தைக் குழைத்து, பீறிடும் சிவப்பு வண்ண உதடுகளை பாடலுக்காக முணுமுணுத்து கையில் ஒரு மலர் மலர்வது போல பாவனை செய்கையில் வயலினில் ரம்பம் அழுத்தமாக இழைந்தது. அந்த பாவனையில் மலர்களை அவர்கள் வலிமையுடன் பறித்தெடுப்பதான தோற்றத்தில் உணர்வுக்கும் செயலுக்குமாக இடைவெளி விரிந்தது.

தனது அம்மாவையும் ஆடவைக்க வேண்டும் என்ற ஞாபகம் சங்கோஜத்துடன் நெளிந்தது.

ஏ... ஒத்தப்பூ பறிக்கையிலே ஏலே லோ
ஏ... கொண்டையிலே வச்சேனிலே ஏலே லோ
ஏ... மாமன் வந்து பார்க்கையிலே ஏலே லோ

அம்மா ஏலே லோக் கும்மிகளில் ராகம் போட்டுப் பாடி முன்னணியில் முனைப்புடன் ஆடியவளாகத்தான் தெரிகிறாள். காலும் கையும் துறுதுறுவென, மாவிளக்கை எடுத்து ஏரிக்கரையில் வைத்துவிட்டு, கூட்டத்துடன் பிறரின் கைகளைப் பிரித்து, இடைக் கண்ணியாகத் தன்னைச் சேர்த்துக்கொண்டு, குனிந்து நிமிர்ந்து, கால்களை கோணலான குறிப்பிட்ட கோணத்தில் பதித்து பின்னர் சுழன்று வலதை இடதாக மாற்றி ஆடி, ஆவாடை பூவாடையைக் கொண்டாடியவள் தான். அம்மா வாழ்ந்த காலம் வேறு.

களைவெட்டுக் காட்டில், தலையில் வெயிலுக்காக போட்ட முக்காட்டில் கசிந்த வேர்வை ஒருபுறம் ஒழுக, கண்ணீரைப் பெருக்கி ராகமாய் ஒப்பாரி வைத்தாள். அம்மா தயவு செஞ்சி ஒப்பாரி மட்டும் வக்காத என்று இழுத்துக் கொண்டு வந்த மகன் மூக்கில் விரல் வைக்கும்படியாக கண்ணீரின்றி, கணீரென்ற குரலில் இறந்தவருக்கும் தனக்குமான உறவைச் சொல்லி அழுதபோது கூடிய கூட்டம் கலங்கியது. திடீரென்று ஏன் நிறுத்திவிட்டாள் என்றும் சிலர் கேட்டார்கள். அம்மாவின் மகளோ, குரலின்றி, உடம்பின்றி, மூளை நரம்புகள் மட்டும் ஜிவுஜிவுக்க, தனக்குள்ளே புதைந்து போய்க் கொண்டிருந்தாள்.

அவளுக்குப் பள்ளியிலும், கல்லூரியிலும் ஆண் வேடமே கொடுத்தார்கள். ஒட்டுத் தாடியுடன் 'உள்ளம் என்பது ஆமை' என்ற பாட்டுக்கு ஆடாமல் அழச் சொன்னார்கள். குரூப் நடனங்களில் பின் வரிசையில்கூட லாயக்கற்றவள் என ஒதுக்கித் தள்ளப்பட்டாள். ஒருமுறை துணிவாகப் பாட முயற்சி செய்தபேது 'மூக்கால் பாடுகிறாய் நிறுத்து' என்று சொல்லிவிட்டார் சதா கரும்பலகையும் சாக்பீஸ¤மாக இருந்த நெட்டை வாத்தியார். 'உன்னைவிட பானு நல்லா பாடுது. கொஞ்சம் நிறுத்து, பானு பாடறதைக் கேட்போம்' என்று விட்டார்கள். வளர்ந்த குழந்தைகள் 'அம்மா ப்ளீஸ்மா' என்று தடுக்கிறார்கள். அவளுக்கு அவள் குரல் அந்நியமாகிவிட்டது. அசைவற்ற கைகால்கள் எப்போதாவது முயற்சி செய்யும்போது அவளது உரத்த சிரிப்பே அவள் காதை அடைக்கிறது.

நெல் பயிர்களைப் பசிய அலைகளாகக் காற்று கிளர்த்தும்போது அவள் அந்தப் பயிர்களுக்கு மேலாகக் கால் பதிக்காது சுழன்று சுழன்று ஆடினாள். அவள் இன்னும் பார்த்திராத ரஷ்ய மசூர்க்கா நடனம் என்று வகைப்படுத்தினாள் அதை. அவள் அப்போது காற்றின் சுழற்சியில் குறிப்பிட்ட உருவமற்ற, பிசிறுகளுடன் கூடியதான வஸ்துபோலத் தோற்றமளித்தாள். தூரத்திலிருக்கும் தென்னை மரத்தில் ஆழப் பாய்ந்திருக்கும் நீர்நிறைந்த தண்ணீர்ப் பிரதேசத்தில் காயம், சலசலப்படைய வேண்டிய பயம் ஏதுமின்றி ஆடினாள். ஊளைக் காற்று வெற்றிடங்களில், திடக்காரணிகளில் பாய்ந்து வேண்டுமென இசையைத் தகுந்தவாறு வழங்கி ஆடச் செய்தது. தலைமயிர் மட்டும் கன்னக் கதுப்புகளில் மோதி அவ்வப்போது அரிப்புண்டாக்கியது. தவிர சிறப்பாக ஆடினாள்.

பிறிதொரு முறை துரிதமற்ற மெல்லிசையில் இழைந்து இழைந்து, தன் கை விரல்கள் விருப்பமுற வளைந்து முகம் மீது சார்ந்து நளினமாய் ஓய்வெடுக்க, கழுத்து உயர்ந்து வானத்து நட்சத்திரங்களை ஏக்கமுடன் பார்க்க, ஒருகால் இன்னொரு காலின் மீது தொட்டு நிற்க... இந்நடனத்துக்குப் பனிச்சறுக்கு நடனமெனப் பெயரிட்டாள். அந்த பாவனை தாளத்துக்கேற்றவாறு கலைந்து இன்னொரு எக்ஸோடிக் பாவனைக்கு மிதந்து செல்லும், தள்ளாட்டம் எதுவுமின்றி.

வெட்டி வெட்டியிழுக்க, உதறி உதறி வலிக்க, சொடுக்கி சொடுக்கி, துவண்டு துவண்டு, ஓடாகிக்போனது வயிறு. மெதுவாகிப் போன முதுகுத்தண்டு ரசமும் சகல அங்கங்களிலும் பாய்ந்து இளக்கி, வளைந்து வளைந்து, கால் தலையாகவும், அதைக் கைகள் கொய்து பந்துபோல் கால்களுக்கூடாகக் கொடுத்துத் தூக்கிப் போட்டுப் பிடிக்க, உதடுகள் தெறித்து விண்ணில் பறக்க, அதை விரல்நுனி ஏந்தி துப்பாக்கி ரவைபோல் சுழற்ற அய்யோடி அந்தப் பெண்ணுக்குத்தான் ஆடுவதுபோல் எத்தனைக் கனவுகள்!

பாச்சலூர்ப் பெண்கள் கோயிலில் கும்மியடித்தபோது அவளை அழைத்தார்கள். வஸ்திரங்களின் சுமையைத் தாங்க முடியாது, நழுவும் சேலையைப் பத்திரப்படுத்தி, சுதிசேர்த்து ஒரு எட்டு வைப்பதற்குள் கேமிரா பளிச்சென ஒளிர்ந்ததும் கூசிப்போய் அட்டையாகத் தன்னை முடக்கிக் கொண்டாள்.

கண்ணாடி முன் கைகளையும் கால்களையும் அசைத்தபோது ஒரு அசைவிலிருந்து மற்றொரு அசைவிற்குத் தாவிச்செல்ல முடியாத, பாடலைத் தப்பவிட்டு, சோர்ந்து போய் தன்னையே முறைத்து ஆராய்ந்த வண்ணம் நின்றிருந்தாள். முறையாக நடனம் பயின்றால் நல்லதோ, ஆனால் சபாக் காரர்களைத் தேடி ஓடிக் கொண்டிருப்பது ஒருபுறம், பயிற்சியும் திறமையும் பலர் கூடியிருக்கும் சபையில் அரங்கேறி வித்தையாக வேண்டுமோ, அது தன்னை எவ்விதம் குஷிப்படுத்தும்? முறைத்தவாறே தன்னைக் குடைந்தாள்.

சுலபமாகக் கைநீட்டி, தோள்குலுக்கி, ஓடி.. குதித்து... முன்னொரு பிறவியில் அவள் அப்படியிருந்தாள்.

அர்ச்சனா தன் கல்யாணப் புடவையை ஓசி கொடுத்தாள். எல்லாம் கூட்டத்தில் கரைந்து போவதற்கான வேஷம். பட்டுப்புடவை கூட்டம். அவசரமாகக் கூப்பிட்ட போது ஓடினாள். 'புடவையைக் கட்டுக்கொண்டு யாரேனும் ஓடுவார்களா?' அர்ச்சனாதான் சொன்னது.

ஆரஞ்சு விளையும் வெப்பப் பிரதேசத்தில் அவளும் நிஷியும் காலையிலேயே பயிற்சி வகுப்புக்குக் கிளம்பி விடுவார்கள். நிஷி மந்தகதி எல்லோரைப் பற்றியும் நல்ல கருத்துக்களையே கொண்டிருந்தாள். 'ஹெ ஹெ ஹெ' என்றுதான் சிரிப்பு. ஆனால் அவள், எதிராளி பேசத் தொடங்குமுன் தன் மின் அலையை முதலில் பரப்பி அவர்களின் நரம்புகளின் ஊடாகப் பாய்ந்து சிறுசிறு அசைவுகளையும் பதிவு செய்து அதைப் பின் சோதனையிடுவாள். குறை சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தன அவளுக்கு. எப்போதும் இருவரும் பேசிக் கொண்டே நடப்பார்கள். அர்ச்சனா ரிக்ஷா சவாரி செய்தாள். ஆனால் மாலையில் இரண்டு குதிரை வால்களுடன், பூப்பந்து மட்டையைப் பிடித்துக் கொண்டு இறங்கிவிடுவாள், களத்தில்.

'நீ கூட எங்களுடன் நடக்கலாமே?'

'வெய்யிலில் சிரமப்படுவானேன். மாலையில் விளையாடி எனர்ஜியை செலவழித்தால் போயிற்று.'

அவளுக்கு அர்ச்சனா பந்தயக் குதிரை என்று பெயர் வைத்தாள். அடிக்கடி நடை பழகவும், ஓடிக்கொண்டுமிருந்தால் முரட்டுப் பெண் குதிரை, அப்புறம் பெண்மை?

போட்டி வேண்டாம். அழகுற ஆட வேண்டும்.

நண்பன் தன் காலை மிதித்துவிடக்கூடாது. தானும் அவனுடையதை தாளகதியென்பது ஒருவருக்கொருவர் துன்பம் விளைவிக்காத நடைமுறை. அடிக்கடி அவர்கள் இணைந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

என்ன இது? என்ற பூச்சி அவனை மெல்ல அரித்துக் கொண்டிருந்தது. அவளையும் தொத்திக் கொண்டது. இருவரும் ஆட்டத்தை நிறுத்தி சிரித்துக் கொண்டார்கள். சிறுபிள்ளைத்தனமான விளையாட்டாக.

பாம்பு மெல்ல மெல்லப் படம் விரித்து ஆடியபோது, ரகசியக் கதுப்புகளின் மெல்லிய அசைவில் கிளர்ச்சியுற்று பெண் பாம்பு மெல்லத் தன் ஆட்டத்தைத் துவக்கியது. பதுங்கி, மேல் விழுந்த கனத்தின் சுமையில் அழுந்தி, நினைவையெல்லாம் லயத்தின்மேல் நிறுத்துவதற்குப் பதிலாக, பெண் பாம்பு தன் துடிப்பைத் தாளலயமாக மாற்றி எம்பி ஈடுகொடுத்தபோது ஆண் பாம்பு ஆட்டத்தை வாபஸ் வாங்கிக் கொண்டது. விஷம் தன் உடம்பில் பரவுவதைக் கவனித்தவாறு பெண்பாம்பு ஒடுங்கியது.

இரவு பேய்களின் ஆட்டம் துவங்கியது. பெரும்பாலும் பேய்கள் பெண்கள், பெண்கள் பேய்கள் தலைவிரிகோலமான, அழுத்தம் பெற்ற நரம்புகள் வெடித்துச் சிதறும் பேயாட்டங்கள் சாமியாட்டங்களும், வேப்பிலை கொண்டு அடிக்க வேண்டும். அதிர்வுற்ற நரம்புகளை இழுத்துக் கட்டுமாறு ரத்த விளாறாக்க வேண்டும். பற்கள் நெறு நெறுக்க, 'ஏய் பொன்னுசாமி' என்று கதறிக்கொண்டு விழுந்தாள். சாமியாடி, குலதெய்வம் பெண் பக்தியால் பூரித்துப்போக.

திருமணப் பந்தலின்மீது சிறுவர்களின் குதியாட்டம் 'டேய் பார்ரா, என்னமா ஆடறான்' சினிமா நடிகனின் பெயரைச் சொல்லி அவனைப் போல என்ற வகைப்படுத்தல்.

'இவ நல்லா ஆடுவா, இவள ஆடச் சொல்லுங்க' ஆட விருப்பங்கொண்ட பெண் இன்னொருத்தியை நோக்கிக் கைநீட்டினாள்.

'நா இல்ல, இந்தப் புள்ளதான் ஆடும்' இன்னொரு சிறுமியும் பிகு செய்தாள்.

'ஏய் ரெண்டு பேரும் ஆடுங்க'

'ரோமியோ ஆட்டம் போட்டா சுத்தும் பூமி சுத்தாதே அந்தப் பாட்டுக்கத்தான் ஆடத் தெரியும். அந்தப் பாட்டுப் போடுறீங்களா'

ரெக்கார்ட் செட்காரன் உற்சாகமுற்று இசைத்தட்டை மாற்ற ரெண்டு குட்டிகளும் நெளித்துக்கொண்டு களத்தில் இறங்கி இடத்தைத் தனதாக்கி அசத்தினார்கள்.

அவளுக்குள் வருத்தம் பாய்ந்தது. ஏனிந்த சினிமாக்கள், கின்னரங்களின் ஒலிக்கொப்ப சகஜீவன்களை இணைத்து ஆடும் ஆதிவாசி நடனங்களைத் தொலைத்துவிட்டோமென்று, ரம்மியமானதைப் போக்கிவிட்டு, புதிதாக நடனமேடைகள், பயிற்சி பெற்றவர் மட்டும் ஆடுவதற்கான அரங்குகளைத் தயார் செய்து... நமக்குச் சொந்தமானதெல்லாம் அவமானகர மாக்கி, இறக்குமதிகளின் பின்னால் சென்று நிழலைக் காப்பியடிப்பதில் வியர்த்து பெருமை கொள்வது. மேல்மட்ட வேலையற்றவர்களின் நளின வெளிப்பாடுகள்... முழுநேர வேலைகள்.

'அத்தை, நீங்களும் மாமாவும் ஆடுங்க...'

அவளது கணவன் தயாராகிக் கொண்டு அவளைக் கைப்பிடித்திழுத்தான். அவன் சுழன்று சுழன்று குதித்தபோது அவள் கைகால்களை அசைக்காமல் காலை மட்டும் நொடித்து இயக்கமுற்றாள். சிரிப்பில் அவளின் அக்காவுக்கு கண்ணீர் வந்துவிட்டது. 'இந்தக் கூத்தப் பாத்தியா, சீ கருமம்' சொல்லிக் கொண்டே கூட்டம் சிரித்து புண்ணாகியது. அவள் அவன் முதுகைத் தட்டி, 'சீ நிறுத்துங்க, எல்லாம் சிரிக்கிறாங்க' எனவும் அவனும் நிறுத்தாது கொழுந்தியாள்களிடம் போய் ஆடவும், 'எட்டியே பாத்தியாடி, உங்க வீட்டுக் காரரை'ன்று சொல்லிச் சிரிக்கவும், இரண்டு கொழுந்தியாமார்கள் ஓடிப்போய் ஒளிந்து கொள்ளவும், ரகளையாகிப் போனது ஆட்டம்.

அவள் கனவுகளில் ஆடிக் கொண்டிருந் தாள். தன்னைத்தானே சுற்றும் சுழற்சி. கைகள் இரண்டும் காற்றை விசிறி அளைந்து, கால்கள் பூமியை உதைத்து எம்பி விண்ணில் பறந்து, கிரகங்களுக்குள் பாய்ந்து மோதி விழுந்து, பின் எழுந்து நிறுத்தாது ஆடி...

ஊ...ஊ... ஊளையைத் தொடர்ந்து விழாக் கூட்டத்தினர் மினிஸ்கர்ட் பறக்க, வலிப்பின் இழுபறியாகக் கைகால்கள் வெட்டிக் கொள்ள, துண்டு துண்டாக ஆடியதை ஒட்ட வைத்த திரைப்பட நடனம் திரையில் ஓடிக் கொண்டி ருந்தபோது, சுடிதார் அணிந்த பெண்கள் முதலில் விசிலடித்தார்கள். எழுந்து நின்று திரையரங்கில் ஆடத் துவங்கினார்கள் பின்.

'அய்யய்யோ...' பதறினாள் அவள். இது வெல்லாம் நம்மையெங்கு அழைத்துச் செல்லுமோவென பாட்டிப் புலம்பல். வெளிக் கிளம்பு முன்னே, அவர்கள் தங்கள் கை, கால்கள் மேல் சுதந்திரம் கொண்டிருக் கிறார்கள் என்ற விவேகம் வெளிப்பட, எனினும் இவர்கள் நுகர்வுக் கலாச்சார அடிமைகள் என்ற ஞானவெளி வியாபித்து, தன் கைகால்களைக் கட்டிப்போட்டவர்களை சபித்து... நான் பார்வையாளர் மட்டுமேவா.. கேட்டு... செயலற்ற பார்வையாளர் என்ற அடைமொழியுடன் வெளிவந்தபோது கை, கால்கள் பெயர்ந்து தனித்தனியான நடனத்தை அவள் முன்னால் நிகழ்த்தி வேடிக்கைக் காட்டி ஒருவித அயர்ச்சியுடன் உடம்பில் பொருந்திக் கொண்டன.

அவள் கனவில் தன் ஆட்டத்தை முழு உன்னதத்துடன், பூரண உணர்வுடன் நிகழ்த்த வேண்டும் என்று கூறிக்கொண்டே கணம், தன் உம்பில் சுதந்திரம் வந்ததாக...

சிவகாமி

© TamilOnline.com