சிவகாமி
இன்று 'தலித்சிந்தனை' இலக்கியம் அரசியல், கலாசாரம், உளவியல் என பல்வேறு களங்களிலும் முனைப்பான செல்வாக்குச் செலுத்துகிறது. குறிப்பாக தலித் இலக்கியம் மொத்தத் தமிழ் இலக்கியம் மீதான விமரிசன நோக்கை ஆழப்படுத்தி வருகிறது. புதிய இலக்கியம் வரலாறு எழுதுகை பற்றிய மீள்சிந்தனைக்கான செயற்பாடாகவும் எழுச்சி பெற்று வருகிறது.

இன்று நவீன இலக்கியம் சார்ந்த பரப்பில் தலித்திய நோக்கில் உத்வேகத்துடன் எழுதும் படைப்பாளிகள் பிரக்ஞை பூர்வமாகத் தோன்றிவிட்டார்கள். இத்தகைய எழுத்தாளர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சிவகாமி.

தமிழில் தலித் இலக்கிய எழுச்சி நிகழ்வதற்கு முன்பே அடிநிலை மக்கள், கிராமம் சார்ந்த வாழ்வியல், கிராம சமுதாய உறவுகள்-முரண்கள், சாதிய ஒடுக்கு முறைகள், பெண்கள் மீது நடத்தப்படும் ஒடுக்கு முறைகள் என விரிந்த களங்களில் சிவகாமியின் எழுத்தும் எதிர்ப்பும் வன்மையான தாக்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

1980களின் ஆரம்பத்தில் தனது எழுத்து முயற்சிகளில் இவர் ஈடுபட்டார். 1985களில் முதலாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட இருந்தார். ஆனால் அது அவருக்கு சாத்தியமாகவில்லை. ஆயினும் 'பழையன கழிதல்', 'ஆனந்தாயி' போன்ற நாவல்கள் மூலம் முக்கியமான கவனிப்புமிகு எழுத்தாளராகப் பரிணமித்தார். தொடர்ந்து தலித்தியப் பிரச்சினைகளை வாழ்வியல் அடிப்படை யாகக் கொண்டு நாவல், சிறுகதை, கட்டுரை, விமரிசனம் மற்றும் சினிமா எனப் பல்வேறு களங்களிலும் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார்.

தலித் இலக்கியம், தலித் அரசியல் பற்றிய பொருள்கோடல் மரபு சார்ந்த புதிய கருத்தாடலை வளப்படுத்தும், வளர்க்கும் செயற்பாடுகளிலும் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். 'இலக்கியம் என்பது கருத்துச் செறிவுடன், வார்த்தைப் பின்னலுடன் சூக்குமமாகப் பதிவுகளை ஏற்படுத்தி சிந்தனைச் சேகரங்களுடன் கலந்து உறவாடுகிறது. வாசகரின் திறனுக்கேற்பப் பல பரிமாணங்களில் சிந்தனை வளர்த்தெடுக் கிறது' என்கிற புரிதலில் தெளிவாக இருந்து இலக்கியம் சார்ந்த உரையாடல்களிலும் சமூகக் செயற்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

தன்னைத் தாக்கும் நிகழ்வுகளை திருப்பித் தாக்கும் மறுவினை-எதிர்வினை புரியும் விதமாகக் தூண்டலுறுவதன் மூலம் எழுத்து சார்ந்த செயல்பாட்டுக்குள் உள்வாங்கப்படுகிறார், எழுதுகிறார். இந்த எழுத்து சமூகம், அரசியல், பண்பாடு சார்ந்த மாற்றுப் புரிதல்களுக்கான விரிந்த களங்களைத் திறந்து விடுகிறது. இதன்மூலம் தலித் நிலைப்பாடு கருத்தியல் நிலைப்பாடாகத் திரட்சி பெறுகிறது சமூக மாற்றத்துக்கான கருவியாகவும் மாறுகிறது.

தலித் எழுத்துகள் தலித் அல்லாத எழுத்துகள் என்கிற பிளவு தவிர்க்க முடியாது. அதாவது சாதி எவ்வளவுக்கெவ்வளவு நிரந்தரமோ அவ்வளவுக்கவ்வளவு இந்தப் பிரிவும் நிரந்தரமானது என்பார் சிவகாமி. அதைவிட தலித் அல்லாதோர் படைப்புகளில் தலித்துகள் எவ்வாறு அடையாளப்படுத்தப் படுகின்றனர் என்பதைக் கட்டவிழ்த்துக் காட்டுகிறார். அதாவது தலித்துகள் அடையாளமற்ற வேலையாட்களாக, அதட்டிக் கூப்பிடும் வேலையாட்களாக கீழ்நிலையாளர்களாகவே படைக்கப் படுகின்றார்கள். அதாவது ஆதிக்க சாதியினருக்கு தொண்டூழியம் புரியவே தலித்துகள் படைக்கப்படுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ளும் முறையில் பெரும்பாலான படைப்புகள் உள்ளன என்பதை விமரிசன ரீதியில் சுட்டிக் காட்டுவார்.

பொதுவாக சிவகாமியின் படைப்புகள் தலித் இலக்கிய மரபுக்கான அடையாள மீட்பாகவே வடிவம் கொள்கின்றன. இதற்கு சாதக மாக இவரது நாவல் இலக்கிய முயற்சிகளைக் கூறலாம். இவரது சிறுகதைகளும் இந்தப் பின் புலத்தில்தான் படைக்கப் படுகின்றன. இவரது 'நாளும் தொடரும்' (1993) எனும் சிறுகதைத் தொகுப்பு கவனிப்புக்குரியது. சாதி, பெண் சார் ஒடுக்குமுறைகளின் பல்வேறு புள்ளிகள் இவரது கவனிப்புக்கு உரியவையாகின்றன. ஒவ்வொரு வாசகரிடமும் கலக மனச் சாய்வை உருவாக்கும் பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன.

குறிப்பாக சாதி ஒழிப்பு, சமத்துவ சமுதாயம் குறித்த மாற்று அரசியல் நாட்டமுடையவராகத் தொடர்ந்து இயங்கி வருகிறார். இந்த இயக்கம் சார்ந்த அனுபவத்தின் வெளிப்பாடாகவும் இவரது படைப்புக்கள் அமைகின்றன. மேலும் இவரது கட்டுரைகள் ஆழந்த புரிதலுக்கும் பரிசீலனைக்கும் உரிய பண்புகளைக் கொண்டுள்ளன. இந்தப் பின்புலமும் இவரது படைப்பிலக்கியச் செல்நெறிகளை ஆற்றுப் படுத்துகின்றன. 'புதிய கோடாங்கி' இதழில் இவரது தொடர்கள், அதன் மூலம் இவர் கட்டமைக்கும் கருத்தியல், சமூக விமரிசனம் ஆகியவை மாற்று அரசியல் வழிமுறைக்கான செல்நெறிகளை உருவாக்குகின்றன. சிவகாமி போன்ற படைப்பாளர்களும் சிந்தனையாளர் களும் தமிழக சமூகவரலாற்றில் உருவாவது காலத்தின் கட்டாயமென்றே கூறலாம்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com