தென்றல் பேசுகிறது......
குடிவரவு மசோதாவைச் சட்டமாக்குவதில் அதிபர் புஷ் குறியாக இருக்கிறார். 'அமெரிக்காவில் வாய்ப்புகளை இது குறைக்கிறது' என்று லிபரல்களும், 'சட்டத்தை மீறுவோருக்கு அனுசரணையாக இருக்கிறது' என்று கன்சர்வேடிவ்களும் இதை எதிர்க்கிறார்கள். எப்படியாவது அவர்கள் எல்லோரையும் ஒப்ப வைக்க வேண்டும் என்று அவர்களைத் தனியாகச் சந்தித்துப் பேசி வருகிறார் புஷ். அலபாமாவின் ரிபப்ளிகன் செனட்டர் ஜெ·ப் செஷன்ஸ் இதைக் கடுமையாக எதிர்ப்பவர்களில் ஒருவர். ஜெ·ப் செஷன்ஸின் மறு தேர்தல் நிதி திரட்டல் கூட்டத்துக்குச் சென்று புஷ் அவருக்கு ஆதரவு திரட்டினார் என்பது வியப்பான செய்தி. இதில், எதற்கு யாருடைய ஆதரவை அவர் திரட்டினார் என்பதுதான் சர்ச்சைக்குரிய கேள்வி.

'அங்கேயே சென்று இராக்கில் தோன்றியுள்ள மக்களாட்சியைப் பாதுகாத்து வளர்க்காமல் நம் படைகள் திரும்புமானால், அந்த வன்முறையாளர்கள் இங்கே வந்து நம்மைத் தாக்குவார்கள். இதுதான் 9/11 நமக்குத் தரும் பாடம்' என்று அதிபர் புஷ் பேசியிருக்கிறார். இந்த வாதம் கவர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அமெரிக்கப் படைகள் கால வரையறை இல்லாமல் இராக்கில் தங்குமானால் உயிர்ச்சேதமும், பொருட் சேதமும் எவ்வளவு ஆகும்? இதை அமெரிக்க மக்கள் தாக்குப் பிடிப்பார்களா? படைகளை இராக்கில் அதிகரிப்பதால் மட்டுமே அமெரிக்க மண்ணில் வன்முறையைத் தடுத்துவிட முடியுமா? இந்தக் கேள்விகளுக்கும் அதிபர் புஷ் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

தன்மீது வீசப்பட்ட பொருளற்ற சொற்கணைகளால் புண்பட்ட அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்தது பெரும்பாலான இந்தியர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. குடியரசுத் தலைவர் பதவியில் இருப்பவர் அரசியல் பின்னணி கொண்டவ ராக இருக்க வேண்டும் என்று ஒரு விந்தையான வெற்று வாதத்தை இடதுசாரிகள் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகின்றனர். இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் பின்னணி இருக்கவில்லை. அவரது மனித நேயம் ஸ்டாலினை ஈர்த்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. ஒரு நல்ல நடுநிலையாளரை, அறிவியல் அறிஞரை, உண்மையான மதச்சார்பற்றவரை, கோடானு கோடி இளைஞர்களின் நெஞ்சில் தேசபக்திக் கனலை ஊட்டியவரை, மீண்டும் ராஷ்டிரபதி பவனத்தில் பார்க்க முடியாதது இந்தியா வுக்குப் பேரிழப்பே.

தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எண்ணும் எவரும் கையில் ஆயுதமேந்தி தெருவில் இறங்கிப் பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துக்களுக்கும் பெரும் சேதம் விளைவிப்பது தற்போது வழக்கமாகி வருகிறது. பஞ்சாபில் டேரா சச்சா தலைவருக்கு எதிராகக் கிளம்பிய சீக்கியர்கள் ஆளுயர வாட்களுடன் கிளம்பியது ரத்தத்தை உறைய வைத்தது. தாழ்த்தப்பட்ட வகுப்பு அந்தஸ்து கோரிய குஜ்ஜர்கள் கம்பு, கத்திகளுடன் ராஜஸ்தான், உ.பி, டெல்லி போன்ற வடமாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். இந்தியாவின் பல மாநிலங்களில் பணபலமும் அதிகார பலமும் கொண்ட கட்சிகள் எதிரிகளின் வாயை அடக்கத் தமது கட்சிக்காரர்களை இவ்வாறு போர்க் கோலத்தில் ஏவுகின்றன. சட்டம், போலீஸ், நீதிமன்றம் இவையெல்லாம் ஆதிக்கத்தில் உள்ளோருக்குத்தான் கட்டுப்பட்டு நடக்குமோ என்ற சாதாரண மனிதனின் அச்சம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இத்தகைய வன்முறைக் கும்பலில் இளைஞர்கள் தான் பெரும்பாலும் காணப்படுகிறார்கள் என்பதும், இவற்றைத் தலைமை தாங்கி நடத்திச் செல்பவர்கள் பெரும்பாலும் நல்ல கல்வியும் பதவியும் கொண்டவர்கள்தாம் என்பதும் அதிர்ச்சியான செய்திகள்.

இவ்வளவுக்கும் நடுவில் இந்தியா முன்னேறி வரும் நாடுகளின் முன்னணியில் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. BRIC (பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா) என்று அழைக்கப்படும் நாடுகள் 2050ல் பிற முன்னேறிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று கோல்ட்மன் சாக்ஸின் அறிக்கை ஒன்று 2003லேயே குறிப்பிட்டது உண்மையாகி வருகிறது. இந்த இதழில் நாம் பேட்டி கண்டுள்ள ஏஞ்சல் முதலீட்டாளர் M.R. ரங்கஸ்வாமியும் அதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார். கவிஞர் சல்மாவின் நேர்காணலும் மிகச் சுவையானது.

ஆண்டு விழாக் காணும் FeTNA, TNF போன்றவைகள் கூட தமிழ்க் கலை, கலாசார நிகழ்ச்சிகளுடன் திரையுலகப் பிரமுகர்களை அழைப்பதைத் தவிர்க்க முடிவதில்லை. இந்தப் பழக்கம் குறைய வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்பப் பலதுறை அறிஞர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். உள்ளூர்ப் பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பீடங்களை ஏற்படுத்த வேண்டும். உள்ளூர் நூலகங்களில் தமிழ்ப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதற்கு நல்ல நூல்களை வாங்கித் தர வேண்டும். இதைப் போன்ற பணிகளால் தான் நம் மொழியும் சமுதாயமும் வளம் பெறும்.

சிவாஜி திரைப்படத்தை அட்டைப்படக் கட்டுரையாகப் போட்டுவிட்டு இப்படி எழுதுகிறீர்களே என்று கேட்கலாம், நியாயம்தான். தென்றல் என்றைக்குமே தேவைக்கு அதிகமான முக்கியத்துவத்தைச் சினிமா தொடர்புள்ள விஷயங்களுக்குக் கொடுத்ததில்லை. ஆனால், ஒரு திரைப்படம் தனது மொழி எல்லைகளை மீறிய பூகோளப் பரப்புகளில் பெரிய ஆரவாரத்தை உண்டாக்கினால் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கமுடியாது. அத்தகைய அற்புதத்தை ஆவணப்படுத்துவதே தென்றலின் நோக்கம்.

அமெரிக்கச் சுதந்திர நாள் வாழ்த்துகள்!


ஜூலை 2007

© TamilOnline.com