பெங்களூரா? பாண்டிச்சேரியா?
இது ஒரு 'குடி'மகனின் பிரச்சனையோ என்று நினைக்காதீர்கள். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு எங்கு நடக்கும் என்பதிலுள்ள தற்போதைய இழுபறி இதுதான்.

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீது கடந்த திமுக ஆட்சியில் வழக்குகள் தொடுக்கப்பட்டு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டு வந்தது. வழக்கு நடைபெறுகையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் ஜெயலலிதா தலைமையில் புதிய அதிமுக அரசு பொறுப்பேற்றது.

இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சென்னையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் நீதி கிடைக்காது. எனவே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கை பெங்களூரில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க உத்தர விட்டது.

பெங்களூரில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் பணியில் கர்நாடக அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த சமயத்தில் ஜெயலலிதா 'காவிரிப் பிரச்சனை, சந்தனக் கடத்தல் வீரப்பன் பிரச்சனை என்று பல பிரச்சனைகளில் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே முரண்பட்ட சூழ்நிலை நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் கர்நாடகத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டால் எனக்கு நீதி கிடைக்காது' என்ற மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதாவின் இந்த திடீர் மனுவிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவ்வழக்கு விசாரணையை பெங்களூருக்கு அருகே சிக்னசந்திராவை அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடத்தலாம் என்று கர்நாடக அரசால் தீர்மானிக்கப்பட இருந்தது என்கின்றனர் தகவலறிந்த உயர்மட்ட அதிகாரிகள்.

ஜெவின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. விசாரணைகள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. இந்நிலையில் டிசம்பர் 18ம் தேதி கர்நாடக மாநிலத்திற்கு ஜெயலலிதாவின் மனு குறித்து விளக்க மளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 25ம் தேதிக்குள் விசாரணை துவங்கியாக வேண்டும் என்ற நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் இம்மனு மீதான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை தேங்கிப் போயிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரே வழக்கு பெங்களூரிலா, பாண்டிச்சேரியிலா என்பது தெரியவரும்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com