தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக விலகல்
நெடுநாளாய் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. மாறுபட்ட கொள்கை அடிப்படைகளைக் கொண்ட பாஜகவும் திமுகவும் ஒரே அணியில் இத்தனை நாள் இருந்ததே பேராச்சரியம் தான். வாஜ்பாயின் திறனும் மாறனின் ஊடுபோதலும் இதைச் சாத்தியமாக்கியது.

சில காலம் முன் பாரதிய ஜனதாவின் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தைப் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், ''மத்திய அரசில் இருந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக திமுக மறியல் நடத்துவது ஆரோக்கியமானது அல்ல'' என்று கூறியது திமுக தலைமையிடத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாஜக தலைவரின் கருத்து உள்நோக்கம் கொண்டது என்றும், இப்படிப்பட்ட சூழலில் மத்திய அமைச்சரவையில் திமுக இருக்க விரும்பவில்லை என்றும் கருணாநிதி கூறினார். ஜனவரி 20ம் தேதி திமுக உயர் மட்டக் குழு கூட்டத்தில் கூட்டணி அரசில் இருந்து விலகுவது என்று தீர்மானிக்கப்பட்டது. உடனடியாக அமைச்சர்கள் டி.ஆர். பாலு மற்றும் ராஜா பதவி விலகினர்.

ஆனாலும் வெளியிலிருந்து மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று கருணாநிதி கூறியிருக்கிறார். போடா எதிர்ப்பைக் காரணமாகக் காட்டி திமுக வெளிவந்தது. ஆனால் அதனால் மெய்யாகவே பாதிக்கப்பட்ட மதிமுகவும் பாமகவும் மத்திய அரசைவிட்டு விலகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

புலி, புல்லுக்கட்டு, மனிதன் மூவரும் ஒரே படகில் போவது பற்றி ஒரு விடுகதை சொல்வார்கள். இப்போது திமுக படகிலிருந்து இறங்கிவிட்டது. தமிழக பாஜக தலைவர்கள் அதிமுகவுக்கு நட்புக்கரம் நீட்ட முயற்சிப்பதாகப் பேச்சு.

கேடிஸ்ரீ

© TamilOnline.com