மங்கலப் பொங்கல்
மாதவன் மனமகிழ் மார்கழி நிறைந்து
பூதலம் மகிழத் தைமகள் வந்தாள்
ஆதவன் திருத்தேர் வடதிசை திரும்பிட
சோதிச் சுடரென வந்தது நன்னாள்.

சேற்று வயலைத் தாயெனப் போற்றி
ஏற்றக் கால் நீர் ஏற்ற மளித்திட
நாற்றுக் கழனியை நாடி உழைத்தவர்
தூற்றிக் குவித்திடச் சேர்ந்தது செந்நெல்.

தாளாண் முயன்று தயங்கா துழைக்கும்
வேளாண் குடிமகன் பேணி வளர்த்திடத்
தாளும் தோகையும் தலைத்தலை ஆட்டி
நாளும் நிமிர்ந்து நகைத்தது கன்னல்.

செஞ்சுடர்ப் பொன்னோ என்று மினுங்கும்
வஞ்சியர் மங்கலம் நாடி வணங்கும்
மஞ்சளும் மருந்தாய் மாந்தரைக் காக்கும்
இஞ்சியும் செழித்து இலையசைத் தாடின.

வண்ணத் தோரணம் வாவென் றழைக்க
மண்மிசை வண்ணக் கோலம் மிளிர
சுண்ணம் பூசிய சுவர்கள் மின்னிடப்
புண்ணிய காலம் சேர்ந்தது இன்று.

தேவன் கதிரவன் திருவடி உன்னி
மேவிப் பூண்செய் பாண்டம் நிறைத்து
ஆவின் பாலை அடுப்பினில் ஏற்றிக்
கூவிக் குலவை யிட்டனர் பெண்டிர்.

மங்கலம் பொங்க வந்தது பொங்கல்
மாக்களும் மகிழ வந்தது பொங்கல்
செங்கதி ருக்கு நன்றி யுரைத்தே
பொங்குது எங்கும் பொங்கலோ பொங்கல்!

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com